அனிச்சமலரும் வி.ஜி.பி சிலை மனிதனும்…
வி.ஜி.பி. பொழுதுபோக்குப் பூங்கா அனிச்சமலருக்கு பிடித்த இடம். ஏற்கனவே ஓரிரு முறைகள் சென்றிருக்கிறாள். தினமும் வி.ஜி.பியைத் தாண்டித் தான் அவளது பள்ளிக்குப் போய் வர வேண்டும். மீண்டும் போக வேண்டுமென்ற அவளது வேண்டுதலை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது. நினைத்த படி ஓட முடிகிற பரந்த இடமே அவளை இங்கு ஈர்க்கிறதென்று நினைக்கிறேன்.
வி.ஜி.பி.யின் சிறப்பு சிலைமனிதன். இரண்டு பேர்கள் இருக்கிறார்கள். காலை ஒருவர் மாலை ஒருவர் என்று நிற்பார்கள். பேசாமல் சிரிக்காமல் நகராமல் நிற்கிற வேலை. அவரை சிரிக்க வைக்க சிலபேர் என்னவோ செய்வார்கள். பொறுமை காத்து நிற்க வேண்டும். பெரும் பயிற்சியும் பொறுமையும் தேவைப் படுகிற வேலை. வீட்டிலும் இப்படித் தான் இருப்பாரா என்று சிலபேர் சந்தேகம் எழுப்புவார்கள். ‘ கன்னிராசி’ படத்தில் பிரவுக்கு கவுண்டமணி இந்த வேலையை வாங்கிக் கொடுப்பார்.
சிறுவர்களை ஈர்க்க சிலை மனிதன் ஒரு சூத்திரம் வைத்திருக்கிறார். சிறுவர்கள் நிறைந்திருக்கும் பொழுது திடீரென்று அவர்களை நோக்கி கையை நீட்டிய படி காலை தரையில் அடிப்பார். இதை எதிர்பார்க்காத சிறுவர்கள் பயந்து விழுந்தடித்து ஓடுவார்கள். ஆனால் இதை எப்போது செய்வார் என்று சொல்ல முடியாது. இந்த அனுபவம் அனிச்சத்தின் அக்கா அன்புமதிக்கு உண்டு. எனவே அனிச்சத்திடம் எச்சரித்திருந்தாள்.
சிலைமனிதனின் பகுதி வந்ததும் அக்காவை முன்னனுப்பி விட்டு வரமாட்டேன் என்று எட்டி நின்று விட்டாள் அனிச்சம். பயமுறுத்த மாட்டார் என்று சொல்லி சமாதானப் படுத்தி அனுப்பினால் அக்காவுக்கு பின்னால் எச்சரிக்கையாய் நின்றாள். சிலை மனிதன் அவரது வழக்கமான பயமுறுத்தலை எதிர்பாராத நேரத்தில் செய்ய, மருண்ட மான் குட்டியாய் தூரமாய் ஓடிப் போனாள் அனிச்சம்.
பிறகு சிலைமனிதனே தூரத்தில் இருக்கும் அனிச்சத்தை அழைத்தார். அவள் மறுத்து நின்றிருந்தாள். துணிவு வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்தேன். அவர் இருக்கும் இடத்திற்குள் வரவழைத்து அவளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் சிலைமனிதன் .
மனிதமுள்ள சிலைமனிதன் இனி அவளது நண்பன்.
– பொன்.சுதா