காஸ்ட்ரோ தாத்தாவின் வாழ்த்துப் பெற்ற பெரியார்
காஸ்ட்ரோ தாத்தாவின் வாழ்த்துப் பெற்ற பெரியார்
உலகெங்கும் ஆதிக்கத்திற்கு எதிரான சிந்தனையுடைய பலரையும் கடந்த நூற்றாண்டிலேயே ஈர்த்த நாடு கியூபா. நம் பெரியார் தாத்தா, தன்னிடம் பெயர் சூட்டச் சொல்லி குழந்தைகளை நீட்டியபோது, ரஷ்யா, மாஸ்கோ என்று புரட்சியின் சின்னங்களைப் பெயர்களாகச் சூட்டி மகிழ்ந்தார். தமிழர்களுக்கு புது வழி காட்டினார். அதே போல, ரஷ்யாவுக்குப் பிறகு புரட்சியின் அடையாளமாகத் திகழும் ‘கியூபா’வின் பெயரை, பெரியார் பிஞ்சுகள் சிலருக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளனர் நம் தோழர்கள்.
அப்படி கியூபா என்று பெயர் சூட்டியுள்ள செய்தியை, கியூபாவின் அந்நாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். அதற்கு தன்னுடைய மகிழ்ச்சியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து அவரும் பதில் கடிதம் எழுதி கையொப்பம் இட்டு அனுப்பியுள்ளார். அப்படி நம்மிடையே கூட இரண்டு பெரியார் பிஞ்சுகள் இருக்கின்றனர். ஒருவர் திருச்சி வி.சி.வில்வம்-புனிதா இணையரின் மகள், மற்றொருவர் ஊற்றங்கரை பழ.பிரபு-வித்யா இணையரின் மகள்.
‘யாதும் ஊரே’ என்று எல்லோரையும் சொந்தமாகக் கருதி மகிழும் பண்பு தமிழர்களுடையது. அதில் நம் பெரியார் தாத்தா உலக மக்களெல்லாம் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு வாழவேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டவர். அப்படி ஒரு சாதனையைத் தன் நாட்டில் நிகழ்த்திக் காட்டியவர் தானே காஸ்ட்ரோ தாத்தாவும். அவரையும், அவரது கியூபாவையும் நெஞ்சில் நிறுத்துவோம்.
– பிஞ்சண்ணா