பேசாதன பேசினால் 3
அலுவலகத்தில் கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அறிவழகனுக்கு செல்பேசியில் அழைப்பு. எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் மகன் செல்வம் மிதி வண்டியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக மனைவி மல்லிகா தெரியப்படுத்தினார்கள்.
பதற்றமான அறிவழகன் மேலதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வேக வேகமாக மகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்றார்.
தலையிலும், இடது கையிலும் கட்டுப் போடப்பட்டு கட்டிலில் படுத்திருந்தான் செல்வம். அருகில் சென்ற அறிவழகன் செல்வத்தைப் பார்த்து “என்னப்பா ஆச்சு? நீ எப்பவும் கவனமாத்தானே சைக்கிள் ஓட்டுவே?” என்றார்.
“எப்பவும் போலத்தான் நான் சைக்கிள்லே போயிக்கிட்டிருந்தேன். நேத்து அமாவாசையாம். அதுக்காக மெயின் ரோட்டிலே பெரிய துணிக்கடை இருக்கில்லே, அங்கே பூசணிக்காய் சுத்தி உடைச்சிருந்தாங்க. அது நடுரோட்டுலேயே கிடந்திருக்கு. அதைக் கவனிக்காமல் போயிட்டேன். சைக்கிள் முன்சக்கரம், உடைஞ்சி கிடந்த பூசணிக்கா துண்டுமேலே ஏறுனதும் வழுக்கி விட்டு பக்கத்திலே வந்த ஸ்கூட்டர் மேலே போயி விழுந்துட்டேன்.
அதனாலேதான் தலையிலேயும் கையிலேயும் அடிபட்டிருக்கு” என்றான் செல்வம். “பக்கத்துலே வந்த ஸ்கூட்டர்காரர் மெதுவா வண்டி ஓட்டிக்கிட்டு வந்ததாலே செல்வத்துக்கு பெரிய ஆபத்தில்லே. அவருதான் செல்வத்தைக் கொண்டு வந்து இந்த ஆஸ்பத்திரிலே சேத்துட்டு எனக்கு சேதி சொன்னாரு” என்றார் செல்வத்தின் அம்மா மல்லிகா. “அவரு ரொம்ப நல்லவருப்பா. வேலைக்கு நேரமாச்சுன்னு இப்பதான் கிளம்பி போனாருப்பா” என்றான் செல்வம்.
“ஒரு பூசணிக்காய் திருஷ்டிக்காக சுத்தி ரோட்டுல போட்டு உடைச்சதாலேதானே இவ்வளவு பெரிய விபத்து. தனக்கு கெடுதல் எதுவும் வரக்கூடாதுங்கிற சுயநலத்துக்காக உணவா பயன்படுத்துற பூசணிக்காயை யாருக்குமே பயனில்லாத வகையில தெருவுல தூக்கிப்போட்டு உடைக்கிறதாலே பணம் வீணாகுது. இப்படி ஆபத்தும் உண்டாகுது. ம்.. இந்த மூடநம்பிக்கையெல்லாம் எப்பதான் ஒழியுமோ தெரியலியே” என்று வருத்தத்தோடு பேசினார் அறிவழகன்.
“அப்பா! பூசணிக்காயை ரோட்டுலே போட்டு உடைக்காம இருந்தா இந்நேரம் நான் மகிழ்ச்சியா நண்பர்களோட செஸ் விளையாடிக்-கிட்டு இருந்திருப்பேன். நீங்க ஆபீஸ்ல உங்க வேலையைப் பார்த்திருக்கலாம். அம்மாவும் அவங்க வேலையைப் பார்த்திட்டு இருந்திருப்பாங்க. இப்படி எல்லாருடைய வேலையுமில்லே கெட்டுப்போச்சு. அப்பா! உணவா சாப்பிடுற பூசணிக்காயை ஏன் தெருவுல போடணும். யாரும் யோசிக்க மாட்டாங்களாப்பா?” என்றான் செல்வம்.
“பூசணிக்காயே நேரா வந்து தயவுசெய்து என்னை வீணா தூக்கிப் போட்டு உடைக்-காதீங்கன்னு சொல்லணும் போலிருக்கு” என்றார் அறிவழகன். அந்த நேரம் அந்தப் பக்கம் வந்த மருத்துவர் “ஏங்க பேஷன்ட் கிட்ட பேசாதீங்க. அவரு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கட்டும். அரைமணி நேரம் கழிச்சு சாப்பிட ஏதாவது கொடுங்க. இப்படி வெளியே வந்து உக்காருங்க” என்று சொல்லியபடி சென்றார்.
அறிவழகனும், மல்லிகாவும் அந்த இடத்தை விட்டு சற்றுத் தள்ளி இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தனர். செல்வம் கண்களை மூடியபடி படுத்திருந்தான். திடீரென அவன் முன் பெரிய பூசணிக்காய் கண், மூக்கு, வாயுடன் வந்தது.
“தம்பி செல்வம்! நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். கண் திருஷ்டிக்-காகன்னு உணவா சமைச்சு சாப்பிட வேண்டிய என்னை யாருக்குமே பயனில்லாதபடி தூக்கிப் போட்டு பொது நலத்தைக் கெடுக்கிறவங்களை நினைச்சா கோபமும் வருது. வருத்தமாவும் இருக்கு.
வெள்ளைப் பூசணிக்காயான நான் சுகாதாரமான சுத்தமான உணவு. ஆஸ்துமா, தோல் பாதிப்பு, வயிற்றுப்புண் போன்ற நோய்கள் வராமல் தடுக்குற ஆற்றல் எனக்கு உண்டு. வைட்டமின் சி வைட்டமின் இ நிறைஞ்சிருக்கிற பூசணிக்காயான எனக்குள்ள, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, போலெட் நியாசின், டயாமின், கரோடின், லூடின் ஸிக்ஸாக்டைன் போன்ற கனிமங்களும் இருக்கு. கலோரிகள் குறைவாவும், வைட்டமின்கள் அதிகமாகவும் இருக்கிற என்னை உணவிலே சேத்துக்கிட்டா உடம்புக்கு நல்லது. உடம்புல உள்ள கொழுப்பை சீரா வச்சுக்கவும், புற்றுநோய் வராமல் இருக்கவும், நான் உதவியா இருக்குறேன்.
கண்களில் புரை ஏற்படாமலும், உருப்பிறழ்ச்சி ஏற்படாமலும் தடுக்குறேன். பூசணி விதைகளுக்கு கீழ்வாதம், மூட்டு வீக்கம் ஏற்படாம தடுக்கிற ஆற்றல் உண்டு. இப்பேர்ப்பட்ட என்னை உணவா பயன்படுத்தாம வீணாக்குறதை நினைச்சா மனுஷங்க மேலே கோபந்தான் வருது. திருஷ்டிக்கு உடைக்கிற பூசணிக்காயை அப்படியே உடைச்சாலாவது ஆடு, மாடுங்க சாப்பிடும். அதுக்குக்கூட வழியில்லாதபடி அது உள்ள குங்குமத்தைக் கொட்டி உடைக்கிறாங்க. ஆனா,… உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்னு வாய் கிழியப் பேசுறாங்க.
கொடியில காய்க்கிற என்னை உணவாப் பயன்படுத்தாம என் மேலே பெயிண்டால கோரமான முகத்தை வரைஞ்சு வீட்டு முன்னாலே கட்டி தொங்கவிடும்போது உண்மையிலேயே நான் ரொம்ப வருத்தப்படுவேன். அப்படி தொங்க விடுறதுனால நான்தான் வாடி வதங்கிப்போறேன். இந்த மக்களுக்கு கொஞ்சம் கூட அதனாலே பலன் இல்லேன்னு தெரிஞ்சும் இதைச் செய்யிறவங்களை நினைச்சா சிரிப்புதான் வருது. இவ்வளவு படிச்சிருக்கேன். இவ்வளவு சம்பாதிச்சிருக்கேன்.
இதெல்லாம் நான்தான் செய்தேன்னு பெருமை பேசுற பெரிய பெரிய மனிதர்கள் கூட இந்த மாதிரி மூடநம்பிக்கையிலெ மூழ்கிப் போயி இருக்கிறதை பார்க்கும்போதுதான் வருத்தமா இருக்கு. தம்பி! நீயாவது மூடநம்பிக்கை இல்லாத முழு மனுஷனா இரு! பகுத்தறிவோட எதையும் செய் தம்பி…” என்றது. “செல்வம்.. செல்வம் எழுந்திருப்பா. இந்தா இந்த ஜூஸைக் குடி” என்று அம்மா மல்லிகா எழுப்பும் போதுதான் தெரிந்தது, பூசணிக்காய் பேசியது கற்பனை என்று. கற்பனையில் பூசணிக்காய் சொன்னது போல் சத்தான உணவை வீணாக்கக்கூடாது. பிறருக்கு சங்கடம் ஏற்படுத்தும் எந்தச் செயலையும் எப்போதும் செய்யக்கூடாது என உறுதி எடுத்துக் கொண்டான் செல்வம். பிஞ்சுகளே… நீங்க?