உலகம் சுற்றி – 4
இது வேறுவிதமான ஒரு வேடிக்கை உலகம்! கடற்கொள்ளைக்காரர்கள், காட்டில் படகில் சென்று மிருகங்கள் அருகே செல்லும் துணிச்சலும், நகைச்சுவையும் கலந்த பயணம்!
உள்ளே நுழைந்ததும் பலர் வரிசையாக நின்று பலகைகள், படிக்கட்டுகள் மூலம் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டிருப்பார்கள். மரத்தின் மேலே இரண்டு மூன்று அறைகள் தனித்தனியே வீடு போல இருக்கும். அங்கே படுக்கை, சாப்பிடுமிடம் என்றிருக்கும். கீழேயிருந்து பிளந்த மூங்கில்களில் வரிசையாகத் தண்ணீர் கொண்டுவரும் சக்கர ஏற்றம் வேடிக்கையாக இருக்கும்.
இந்த மரம் 90 அடி உயரம், 60 அடி அகலம், 1400 கிளைகள், 300000 இலைகள் கொண்டது. அங்கே உள்ள உணவு வகைகளும் அப்படியே. உண்பதற்குத் தயாராக பலவகைப் பழங்கள், உணவுகளுடனிருக்கும். என்னவென்றால் மரம், இலைகள், பழங்கள் எல்லாமே செயற்கை! பிளாஸ்டிக்கால் செய்தவை என்பதை நம்ப முடியாது! 1960லிருந்து இந்த மர வீடு அனைவரையும் ஏமாற்றிக் கொண்டுள்ளது! இது போலவே உண்மையான மரத்தில் வீடு சுவிட்சர்லாந்தில் இருக்கின்றதாம். அதை வைத்து டிஸ்னி தயாரித்தத் திரைப்படமும் இருக்கின்றது.
அனைவரும் மிகவும் விரும்பிச் செல்வது காட்டில் படகு சவாரி. படகோட்டிகள் செய்யும் கோமாளித்தனமும், ஏமாற்றுதலும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருக்கும். அமேசான் காடுகள், ஆப்பிரிக்கா காட்டின் யானைகள், அருவிகள், கம்போடியாவின் புலிகள் நிறைந்த குகைக்கோயில், வரிக்குதிரைகள், சிங்கங்கள்,
நீர் யானைகள், மிகப் பெரிய பட்டாம்பூச்சிகள் எல்லாம் அருகிலேயே தெரியும். யானை நம் மீது தண்ணீரைத் தெளித்து நனையவிடும். ஆம், அவ்வளவும் உண்மையாகவே இருக்கும் செயற்கை மிருகங்கள்! குழந்தைகள் போடும் சத்தம் மகிழ்ச்சியைத் தொற்றவைத்து விடும்!
அடுத்து கும்பல் நிறைந்திருக்குமிடம் கரிபியன் தீவின் கடற்கொள்ளைக்காரர்கள் கூடம். இது ஒரு பெரிய கோட்டை. அதிலே குகைகள் வழியாக ஓடும் நீர் வழியில் படகில் நாம் சிறு குழுக்களாகச் செல்வோம். இருட்டும் அங்கே நடக்கும் பீரங்கிச் சண்டைகளும், திடீர் திடீரென்று தோன்றும் கடற் கொள்ளைக்காரர்களும்,
அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பலவகைத் தங்க, வெள்ளி நகைகள் பொற்காசுகளும், பெட்டிகள் நிறைய குவிந்திருக்கும் செல்வமும் அவர்கள் தங்குமிடமும், காவலர்களும் என்று கடற்கொள்ளயர்கள் திரைப்படங்களை பார்ப்பதை விட நாமே நேரில் பங்கேற்பது ஒரு துணிச்சலான நகைச்சுவைதான்! குழந்தைகளுக்குக் கடற்கொள்ளைக்காரர்கள் போல வண்ணங்களைப் பூசி நடிக்கச் சொல்வார்கள். படங்கள் எடுத்துத் தள்ளிப் பணம் பறித்துவிடுவார்கள்.
நாம் பார்த்திராத பலவகை பூக்கள் நிறைந்த பூந்தோட்டம். அதன் உள்ளே பெரிய கூடாரத்தில் சென்று நிற்க வேண்டும். அங்கே பல வண்ணங்களில் கிளிகள் வந்து ஆடும், பாடும்! இருபது மணித்துளிகள் பல்வேறு பறவைகள் வந்து நம்மை விதவிதமாக மகிழ்விக்கும். இசைக் கச்சேரியும் நடக்கும். ஆனால் இப்படி நடக்கும், பாடும், நடிக்கும் பொம்மைகளென்று சொன்னால் நம்ப முடியாது! எங்கோ ஒரு காட்டிற்குள்ளே உள்ள பூந்தோட்டத்திலே கனவு கண்டது போல வெளியே வருவோம்.
அலாவுதீனின் பறக்கும் பாயில் அமர்வோம்! அது மேலும் கீழும் பறந்து மகிழ்விக்கும்! இது வெறும் குடைராட்டினந்தான், ஆனால் அவர்கள் செய்துள்ள பாய்களில் அமர்ந்து சென்றால் பறப்பது போலத்தான் இருக்கும்.
அங்குள்ள கடைகளில் வேறு எங்கும் கிடைக்காத பல பொருள்கள் கிடைக்கும், ஆகவே கூட்டம் பொங்கி வழியும். அவர்களுக்குப் பணம் குவியும்! உணவுக் கடைகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். சிரித்துக் கொண்டே மக்கள் பணத்தைக் கொட்டும் நாடாக இந்த நாடு இருக்கும். இங்கேயே செலவு செய்து விட்டால் மற்றவற்றை எப்படிப் பார்ப்பது? போதும் வாருங்கள், போவோம்!