பால் பாயாசம்
இதுவும் ஒரு குள்ளன் கதைதான். குள்ளன் இப்போது பத்தாவது படிக்கிறான். சுண்டுவிரல் அளவே அவன் வளர்ந்து இருக்கிறான். அவனுக்குப் பள்ளியில் எல்லோரும் நண்பர்கள். மதிய வேளையில் எல்லோருடைய சாப்பாட்டையும் சுவைத்துவிடுவான். அப்படி ஒருநாள்தான் பால் பாயாசத்தை சுவைத்துவிட்டான். அவனுக்கு கிடைத்ததோ இரண்டு சொட்டுகள்தான்.
அன்று இரவே அவனுடைய அம்மாவிடம் தனக்கு பால் பாயாசம் வேண்டும் எனக் கேட்டான். பால் பாயாசம் செய்ய எந்தப் பொருளும் இல்லை என்றாள் அவனுடைய அம்மா. என்னென்ன வேண்டும் என விசாரித்தான். ஆமாம்… உங்களுக்கு பால் பாயாசம் செய்ய தேவையான பொருட்கள் எவையென்று தெரியுமா?
பால், சர்க்கரை, ஏலக்காய், சேமியா, ஜவ்வரிசி ஆகியவை தேவை. பால் பாயாசம் அவனுக்கு மட்டும் போதாதாம். ஒரு அண்டா நிறைய வேண்டுமாம். அவனுடைய எல்லா நண்பர்களுக்கும் பால் பாயாசம் கொடுக்கப் போவதாகத் தெரிவித்தான். மறுநாள் காலை எழுந்தவுடன் குள்ளனுடைய தாயார் அவனிடம் பணம் கொடுத்து, பாத்திரங்கள் கொடுத்து மாட்டு வண்டியினைப் பூட்டி அடுத்த ஊரில் இருக்கும் சந்தைக்கு அனுப்பினாள். பாத்திரங்கள் வேண்டாம் என சொல்லிவிட்டு மாட்டு வண்டியில் கிளம்பினான்.
‘ஏலேலலே ஏலேலலே’ என முணுமுணுத்த-படியே மகிழ்ச்சியாக மாட்டு வண்டியை ஓட்டினான். அடுத்த ஊருக்கும் இவன் ஊருக்கும் நடுவே ஆறு ஓடுகின்றது. ஆற்றின் கரையில் வண்டி நின்றது. அங்கிருந்த மக்கள் எல்லாம் இவனைப் பார்த்துச் சிரித்தனர், கேலி செய்தனர். “குள்ளத் தம்பி எப்படி அந்தக் கரைக்குப் போவாய்? எதுக்கு அந்தப் பக்கம் போகின்றாய்’’ எனக் கேட்டனர். “யாருக்கெல்லாம் பால் பாயாசம் வேணுமோ என் பின்னாடி வாங்க’’ என்றான். நிறைய மக்கள் கூடிவிட்டனர்.
அப்போதுதான் அந்த அதிசயத்தை அனைவரும் பார்த்தனர். வலது மூக்கினை மூடி இடது மூக்கில் வேகமாக இழுத்தான். உடனே அந்த மொத்த ஆற்று நீரும் அவன் இடது மூக்கிற்குள் சென்றது. ஆமாம், அந்தக் கரைக்குச் செல்ல வழி வந்தது. கூடி இருந்த மக்கள் எல்லோரும் அவன் மாட்டு வண்டியின் பின்னாலே சென்றனர். நேராகச் சந்தைக்கு வண்டி சென்றது. மூக்கில் ஆற்று நீரை எடுத்த விஷயம் பரவி நிறைய மக்கள் வர ஆரம்பித்தனர். முதலில் பால் பண்ணைக்கு சென்றான். அங்கே இரண்டு பெரிய அண்டாவில் இருந்த பாலின் விலையைக் கேட்டான். பணம் கொடுத்தான். எடுத்துச் செல்ல பாத்திரம் எங்கே எனக் கேட்டனர். இப்போது இடது மூக்கினை மூடி வலது மூக்கின் வழியே பாலை உறிஞ்சினான்.
இன்னும் மக்கள் கூடிவிட்டனர். சந்தையில் சர்க்கரை வாங்கினான். இவ்வளவு பெரிய மூட்டையை எங்கே வைப்பான் என ஆர்வமுடன் பார்த்தனர். இடது காதிற்குள் சர்க்கரையை கொட்டினான். பக்கத்துக் கடையில் சேமியாவை வாங்கினான். அதனை வலது காதிற்குள் போட்டுவிட்டான். இன்னும் ஜவ்வரிசி மட்டும் வாங்க வேண்டும்.
ஜவ்வரிசியை நீங்கள் பார்த்ததுண்டா? குட்டி நிலா போல இருக்கும். அதுவும் அய்ந்து கிலோ வாங்கினான். குட்டி பையாக இருந்ததால் அந்த மூட்டையை மாட்டு வண்டியின் பின்புறம் வைத்துக்கொண்டான். இதற்குள் நூற்றுக்கணக்கில் மக்கள் திரண்டுவிட்டனர். அவன் மாட்டு வண்டியின் பின்னால் நடந்து சென்றனர்.
மீண்டும் ஆற்றினைக் கடந்தான். ஏதோ ஒரு மூக்கில் ஆற்று நீர் இருக்கின்றது அல்லவா? இடதா? வலதா? ஆம்…. இடது! வலது மூக்கினை மூடி ‘உஸ்ஸ்ஸ்’ என மூச்சுவிட்டான். ஆற்று நீர் வேகமாக வெளியே வந்தது. மீண்டும் பழையபடி ஆறு ஓடியது. ஊருக்குள் சென்றுகொண்டிருந்த போது அவனுடைய பள்ளி நண்பர்கள் எதிர்ப்பட்டனர். “நண்பர்களே, என்னுடன் வீட்டுக்கு வாங்க. உங்களுக்குச் சுவையான பால் பாயாசம் கிடைக்கும்’’ என அவர்களையும் வண்டியில் ஏற்றிச் சென்றான்.
“அம்மா… அம்மா’’ என வீட்டு வாசலில் இருந்து அம்மாவை அழைத்தான் குள்ளன். வெளியே வந்த அம்மாவிற்கு ஆச்சரியம். மொத்தம் சுமார் 200 பேர் இருந்தார்கள். “அம்மா எல்லோருக்கும் பால் பாயாசம் செய்து கொடுங்க…’’ என்றான். “நிச்சயம் கொடுக்கலாம் தம்பி. நான் கேட்ட பொருட்களை வாங்கி வந்தாயா? வெறும் ஜவ்வரிசி மட்டும்தான் இருக்கு. இதை வெச்சு செய்ய முடியாதுப்பா’’ என்றார்கள்.
ஊர் மக்கள் சிரித்தார்கள். “உங்க மகன் பலம் உங்களுக்குகேத் தெரியாதா?’’ எனக் கேட்டார்கள். பெரிய பெரிய பாத்திரங்களை கொண்டுவரச் சொன்னான். வலது மூக்கில் இருந்த பாலினை வரவழைத்தான். இடது காதில் இருந்து சர்க்கரையையும், வலது காதில் இருந்து சேமியாவையும் வரவழைத்தான். அம்மாவுக்கு பெரும் ஆச்சர்யமாயிருந்தது. அவன் வீடே திருவிழாப்போல இருந்தது. ஒரு மணி நேரத்தில் சூடான சுவையான பால் பாயாசம் தயார். குள்ளன் மட்டுமல்ல, அவனது நண்பர்கள், இரண்டு ஊர் மக்கள் அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர்.
ஆமா.. நீங்களாயிருந்தால் என்ன கேட்டிருப்பீர்கள்?
என்னது, பழைய 500, 1000க்கு பதில் 100 ரூபாய் நோட்டுகளா-? <