பிரபஞ்ச ரகசியம் 41
ஊடகங்களில் நாம் அடிக்கடி எதிர் கொள்ளும் செய்திகளில் ஒன்று: வேற்று கோள்களில் உயிரினங்கள் உண்டா என்பதைப் பற்றியது 2009-ஆம் ஆண்டு விண்வெளியில் நிலைநிறுத்தி வைக்கப்பட்ட அதிநவீன கெப்ளர் தொலைநோக்கி வழியாக நாம் பல புதிய உலகங்களைக் கண்டு வருகிறோம்.
இப்பிரபஞ்சம் பற்றி நாம் பல தகவல்களை இந்தத் தொடரில் படித்துள்ளோம். நாம் படித்த விண்மீன்கள், அதனைச் சுற்றியுள்ள கோள்களில் உயிரினங்களின் இருப்புபற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்தத் தொலைநோக்கியின் லென்சு நாம் வெறும் கண்ணால் பார்க்கும் பரந்த வான்வெளியில் மிகவும் சிறிய பகுதியையே தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கடல் போன்ற இப்பெருவெளியில் நமது பால்வெளி மண்டலத்தின் ஒரு துளியிலும் மிகச் சிறிய ஒரு பகுதியையே கெப்ளர் ஆய்வு செய்து வருகிறது. அந்தப் பகுதியில் கூட நமது பூமியைப் போன்ற பல்லாயிரக்கணக்கான கோள்கள் அதன் விண்மீன்களைச் சுற்றிவருவதாக துல்லியமான கணக்கீடுகளுடன் அறிவியல் ஆய்வாளர்கள் உண்மையைக் கூறி வருகின்றனர்.
‘பூமியைப் போன்று’ என்றால் அங்கு உயிரினம் உள்ளதா? என்ற கேள்விதான் மிகையாக இருக்கும். நம்மைப் பொறுத்தவரை உயிரினம் வாழ திரவ வடிவிலான நீர், தகுந்த தட்பவெப்பம், பாலூட்டிகள் மற்றும் இடம் பெயரும் பல உயிரிகள் (தாவரங்களைத் தவிர) சுவாசிக்கத் தேவையான உயிர்வளி (ஆக்ஸிஜன்) தேவை. இது பூமிக்கு மட்டுமே பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பெருவெளி (Universe) விதிகளின்படி இப்பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் (Energy) வீணடிக்கப்படுவதில்லை. அது ஏதாவது ஒருவகையில் மிகவும் சரியாகப் பயன்படுத்தப்பட்டுவிடுகிறது.
எடுத்துக்காட்டாக நாம் வியாழனை எடுத்துக் கொள்ளலாம். அங்கே தரைத்தளம் கிடையாது; வெறும் வாயு. அதன் மையத்தில் அதிஉயர் வெப்பத்தில் திரவ நிலையில் ஹைட்ரஜன்
(Liquid Hydrogen) உள்ளது, ஆனால் அதன் மேற்பரப்பின் ஆற்றலில் மாபெரும் புதையல் உள்ள. இதைப் பயன்படுத்த அந்த காற்றுக்கோளத்தில் (Giant Gas Plant) மிதந்துகொண்டு இருக்கும் உயிர்கள் (Living Creature in the Air) இருக்கலாம். அந்த உயிரினம், மின்னலைத் தனது ஆற்றலுக்குப் பயன்படுத்திக் கொண்டு ஹைட்ரஜன் (Hydrogen) மற்றும் கார்பன்-_டை_ஆக்ஸைடை (Hydrocarbons) சுவாசித்து நீராவியை (H2O) வெளியிடலாம். அதற்கும் டி.என்.ஏ.க்கள் உண்டு அந்த டி.என்.ஏ.க்கள் வியாழன் உயிரினங்களுக்கு தகுந்த பரிணாம வளர்ச்சியைக் (Evolutionary Biology) கொடுத்திருக்கலாம்.
நமது பூமியில் எட்டு முறை உயிரினங்கள் (Geologic Period) தோன்றி அழிந்து, மீண்டும் தோன்றி அழிந்து, தற்போது அறிவடைந்த மனித யுகத்தில் நுழைந்திருக்கிறது. மேலும் தற்போதைய மனித யுகத்தில் வெறும் நூறு ஆண்டுகளில் அறிவியல் பார்வை (Scientific Revolution) விரிந்துள்ளது, அவ்வளவே, அதிலும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 13 விழுக்காடு மக்கள் தெளிவான அறிவியல் அறிவைப் பெற்றுள்ளனர் என்று ராயல் சயின்ஸ் அகடமி (Royal Society of London) கூறுகிறது. அதாவது பகுத்தறிவாளர்கள் மட்டுமே அறிவியல் தெளிவு பெற்றவர்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் அறிவியல் தெளிவு பெறாதவர்கள் என்று கூறுகிறது.
இதை இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் நாம் வெறும் 13 விழுக்காடு அறிவியல் தெளிவு பெற்றவர்களாக இருக்கிறோம். அதுவும் கடந்த 100 ஆண்டுகளுக்குள் நாம் இந்த அறிவியல் வளர்ச்சியைப் பெற்றுள்ளோம் என்பதற்காகவே!
காற்றில் வாழும் உயிரினம்?
வியாழன் கோள் நமக்குத் தெரிந்தவரை சுமார் 500 கோடி ஆண்டுகளாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சுழன்று கொண்டே உள்ளது. ஒருவேளை அந்தக் கோளின் வாயு மண்டலத்தில் உயிரினம் உருவாகி இருந்தால்…? இத்தனை ஆண்டுகளில் அக்கோளில் வாழும் உயிரினங்கள் அதிஉயர் அறிவியல் வளர்ச்சி (High Scientific Culture) அடைந்திருந்தால்…?
அப்படியே அங்கு உயிரினம் இருந்தால் அது வியாழனின் மேற்பரப்பை விட்டு விட்டு வெளியே வருவது நமது அறிவியல் பார்வையில் இயற்பியல் விதியின்படி முடியாத செயலாகும். ஒருவேளை அங்கு உயிரினம் இருந்து அது நம்மைப் போன்று அறிவைப் பெற்றிருந்தால் அவர்கள் என்றோ நம்மைப் போன்று வேறு கோள்களைத் தேடிப் பயணம் செய்திருப்பார்கள்.
நாம் மண்ணில் கிடைக்கும் உலோகங்களைக் கொண்டு விண்கலம் செய்து விண்ணை ஆண்டு வருகிறோம். அதேபோல் ‘வியாழனில் வாழும் உயிர்கள் கார்பன் மூலக்கூறுகளைப் பயன்படுத்தி விண்கலங்கள் உருவாக்கியிருந்தால்?’ என்ற கேள்வி எழுப்பிப் பார்ப்போம். உண்மையில் வியாழனில் உள்ள கார்பன் மூலக்கூறுகளால் விண்கலன் உருவாக்க முடியுமா என்றால் மனிதர்களாகிய நாம் அப்படி ஒன்றை என்றோ செய்துவிட்டோம். அதாவது நாம் எழுதும் பேனா முதல் பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழிகள்) அனைத்தும் காற்றில், அதாவது ஹைட்ரோ கார்பனில் இருந்து உருவானவையே ஆகும்.
வியாழனில் நமது பூமியைவிட நூறாயிரம் கோடிக்கும் அதிகமான ஆற்றல் உள்ளது. அப்படி வியாழனில் உயிரினம் என்ற ஒன்று இருந்திருந்தால் இன்று இந்த சூரியக் குடும்பத்தையும் நம்மை ஒட்டியுள்ள செனடாரஸ் விண்மீன், அதைச் சுற்றி ஏதாவது கோள்கள் இருந்தால் அதற்கெல்லாம் அதிபதிகளாகி இருக்கும்.
ஆனால் அதற்கான எந்த ஒரு சான்றும் இன்றுவரை நமக்குக் கிடைக்க-வில்லை; அல்லது நாம் அதை அறியவில்லை என்று தான் கூறவேண்டும். அதே நேரத்தில் அங்கு உயிரினம் இல்லை என்று உறுதியாகக் கூறமுடியாது. காரணம் வியாழனைப் போன்ற வளிமண்டல அமைப்புடைய பூமியின் வளிமண்டலத்தின் மேல்பகுதியில் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மேகங்களில் மிதந்துகொண்டு சூரிய ஒளி கொண்டு ஆற்றலைப் பெற்று உயிர்வாழ்கின்றன.
ஆகையால் வியாழனின் வளிமண்டலத்தில் உயிர் வாழுமா என்ற கேள்வியை யாராவது எழுப்பினால் அவர்கள் அறிவியலில் முழுமையான நம்பிக்கை இல்லாதவர்கள் என்றே கூறவேண்டும்.
அதாவது வியாழன் கோள் கடுமையான வெப்பம், அதி உயர் அழுத்தம், நமது கற்பனைக்கு எட்டாத வேகத்தில் ஆண்டாண்டுக் காலமாக வீசும் புயல்காற்றுகள் உள்ள ஒரு கோளில் உயிர்கள் வாழும் சூழல் உள்ளது என்றால், நமது பூமியைப் போன்ற கெப்ளர் கண்டறிந்த கோள்களில் உயிர்கள் வாழும் என்பது 100 விழுக்காடு உண்மைதான். அவர்கள் நம்மை எப்படி தொடர்பு கொள்வார்கள் என்பதுதான் தற்போது நமக்குள் எழும் கேள்வியாகும்.
அதற்கு முன்பு நாம் நம்மைச் சுற்றி ஒரு பார்வைப் பார்த்துக் கொள்வோம்.
முதல் பார்வை இந்த 100 ஆண்டுகளில் நாம் பூமியைக் குடைந்து 35 விழுக்காடு சக்தியை எரிசக்தியாக வெளியே எடுத்துவிட்டோம். இனி வரும் ஆண்டுகளில் நமக்குத் தேவையான ஆற்றல் தற்போது கிடைப்பதை விட 50 மடங்கு அதிகமாகப் பயன்படுத்த வேண்டி இருக்கும். ஆனால் நாம் பூமியை பாதுகாக்கும் பொருட்டு இனிமேலும் பூமியைக் குடைந்து ஆற்றலை எடுத்து நம்மை நாமே அழித்துக்கொள்ளும் மூடத்தனத்தை செய்யமாட்டோம்.
இதன் காரணமாகத்தான் நாம் செவ்வாய், வியாழனின் துணைக் கோளான யுரோப்பா, சனியின் துணைக் கோளான டைட்டன் போன்றவற்றை ஆய்வு செய்து வருகிறோம், அதாவது எதிர்காலத்தில் யுரோப்பாவில் குடியேறி டைட்டனில் இருந்து எரிபொருளைப் பெறும் திட்டத்தை தற்போது எழுத்து வடிவில் கொடுத்துள்ளோம், இன்னும் 100 ஆண்டுகளில் இது சாத்தியமாகிவிடும்.
நமக்கு இருப்பிடத் தேவைக்காக நாம் யூரோப்பா நிலவில் இறங்கும்போது அங்கு உள்ள வலுகுறைந்த உயிரினங்கள் தடையாக இருக்குமென்றால் நாம் நட்பு பாராட்டி அப்படியே விட்டுவிட்டு பூமிக்குத் திரும்பிவிடுவோமா? நமது தேவைக்காக வனங்களை அழிக்கிறோமே, அங்கு வன உயிர்கள் பாதிக்கப்படுகிறதே என்று நாம் வன விலங்குகளுடன் நட்பு பாராட்டி விட்டு-விடுகிறோமா? அதுபோல்தான் பிற கோள்களில் வாழும் உயிரினங்கள் அவற்றின் தேவைகளை நிறைவுசெய்ய பிற கோள்களை நோக்கிப் பயணிக்கும்.
இதுபற்றி நாம் அடுத்து வரும் தொடரில் பார்க்கலாம்.