உலகம் சுற்றி – 5
குழந்தைகளே! வகுப்பில் பாடம் கற்றுக் கொள்வது பிடிக்குமா, இல்லை சுற்றுப்பயணம் சென்று கற்றுக்கொள்வது பிடிக்குமா? இந்தக் கேள்விக்குப் பதில்தான் டிஸ்னி உலகம். வால்ட் டிஸ்னி ஒரு அறிவாளி மட்டுமல்ல, சிறந்த ஆசிரியரும் ஆவார். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும்தான். டிஸ்னி உலகம் அவர் பொருள் செய்வதற்குத்தான் ஆரம்பித்தார்.
ஆனால் அதில் பல புதுமைகளைப் புகுத்தினார். அதற்கேற்பதான் நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பணத்தையும் செலவழிப்போம்; அதே வேளையில் ஒவ்வொன்றிலும் ஏதாவது கற்றுக்கொள்ளும்படி இருக்கும்.
அமெரிக்கா இன்றிருப்பதுபோல முன்பு இருந்ததில்லை. முழுதும் கடினமான உழைப்பால் உருவாக்கப்பட்டது. அதுவும் வெறும் நானூறு ஆண்டுகளில் தான். 15000ஆம் ஆண்டுகட்கு முன்னே இங்கே மக்கள் இருந்தனர். அவர்கள் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்தனர். காலத்திற்கேற்ப வெவ்வேறு இடங்களில் கூடாரங்கள் அமைத்து வேட்டையாடி வாழ்ந்தனர்.
எதையுமே வீணாக்காமல் இவ்வளவு பேருக்கு ஓராண்டிற்கு இத்தனை எருமைகள் வேண்டும் என்று கணக்கிட்டு அதை மட்டும் வேட்டையாடினர். கால் குளம்பிலிருந்து முடிவரை வீணாக்காமல் பயன்படுத்தினர். இயற்கையை மதித்து வாழ்ந்தனர். ஆனால் நானூறு ஆண்டுகட்கு முன்னர் கொலம்பசு கண்டுபிடித்ததிலிருந்து பிரெஞ்சு, ருசியா, நெதர்லேந்து, ஸ்பேனிசு என்று பலர் வந்தனர்.
வர்ஜீனியா கம்பெனி என்று இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி போன்று இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள்தான் அங்கேயே வாழ ஆரம்பித்தனர். 1620இல் ‘மே பிளவர்’ என்ற கப்பலில் இங்கிலாந்திலிருந்து மத ஆளுமை பிடிக்காமல் வந்த நூறுபேர்தான் இன்றைய அமெரிக்கா அமைவதற்கு அடிகோலியவர்கள். வந்தவர்கள் பெரும்பாலும் கிழக்குப் பகுதியில் நியூ ஆம்ஸ்டர்டேம் (இன்றைய நியூயார்க்), பாசுடன், வர்ஜீனியா என்று 13 மாநிலங்களில்தான் வாழ்ந்தனர். பின்னர்தான் காடுகளை அழித்து நாடாக்கி மேற்கு நோக்கி நகர்ந்தனர். அதுதான் காடு நாடாகிய அமெரிக்கா.
இந்தக் கதையை நாம் மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கற்றுக்கொள்ளும் நாடுதான் டிஸ்னியின் “புதிய எல்லை நாடு”. அங்கு நுழைந்ததும் மரம், காட்டுக் கற்றாழை என்ற பாலைவனம் மாதிரி இருக்கும். அரிசோனா, ஊட்டா மாநிலம்போல செந்நிறப் பாறை மலைகள். ஆனால் அந்தப் பாறை மலைகளுக்குள்ளே மிகவும் விரைவாகத் தலைசுற்ற வைக்கும் சறுக்குகளில் போகும் உணர்ச்சிப் பங்கேற்பு. மிக விரைவாக வந்து 50 அடி விழுந்து தண்ணீரில் நனையும்போது அனைவரும் அலறும் சத்தம் காதைத் துளைக்கும். அந்தக் காலத்து ரயில் பயணம். எங்கோ காட்டிற்குள் செல்வது போன்ற படகு, சிறு கப்பல்கள் பயணம்.
அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளரான மார்க் ட்வைன் எனும் பகுத்தறிவாளர் எழுதிய டாம் சாயர் பற்றிய தீவும், அதற்குப் பழைய படகில் சென்று அங்கு விளையாடுவதும் நன்றாக இருக்கும். அந்தத் தீவே ஒரு சுற்றுலாப் பயணம் போன்று அழகான இடம், அதில் அனைவரும் விளையாட, ஆற, அமர என்று பல வசதிகள் மகிழ்வூட்டும்.
7 அடி உயரக் கரடி, மற்றக் கரடிகளுடன் பாடி, ஆடி களிப்பூட்டும் நடன நிகழ்ச்சி பெரிதும் விரும்பப்படும் ஒன்று. அனைத்தும் பொம்மைகள் என்றால் நம்ப முடியாது. உணவுக் கூடங்கள் அந்தக் காலத்தை நினைவுப்படுத்தும். உணவு வகைகளும் பெரிய வான்கோழியின் வறுத்த கால், காட்டில் கிடைப்பது போன்ற உணவுகள்! ஆனால் காசைப் பிடுங்கும், நாக்கில் நீர் ஊற வைக்கும் உணவுகள்!
கடைகளில் விற்கும் பொருள்களும் குதிரை, காட்டு மிருகங்கள், கரடி சம்பந்தப்பட்டவை என்று மனதை மயக்கிக் காசைக் கரைத்து விடும். அங்குள்ள துப்பாக்கிச் சுடும் இடத்திற்குச் சென்று நாமும் குதிரை விற்பன்னர்கள் (Cow Boys) போலச் சுட்டுப் பரிசுகள் பெறலாம்!
இருநூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த அமெரிக்காவிற்குச் சென்று வந்த மகிழ்வுடன் உடல் ஓய்வை விரும்பிக் கொண்டும், உள்ளம் துள்ளிக் கொண்டும் இருக்கும். இரவு வாண வேடிக்கைப் பார்க்கத் தெம்புள்ளவர்கள் இருப்பார்கள், மற்றவர்கள் ஓய்வெடுத்து மறுநாள் வரத் திட்டமிடுவார்கள். நாம் ஓய்வெடுத்து வருவோமா?
என்ன, நீங்கள் வாண வேடிக்கை பார்க்கச் செல்கிறீர்களா?