“அக்கா… அக்கா… நீநிகா’’
நீநிகா படுக்கைக்குச் சென்று அய்ந்து நிமிடங்களே ஆகியிருந்தன. உறக்கத்தில் இருந்தவளை, யாரோ பெயரைச் சொல்லி அழைப்பது காதில் விழுந்தது.
“அக்கா… அக்கா… நீநிகா.’’
அவள் உறக்கம் கலைந்து எழுந்தாள். இரவு நேரத்தில் தூங்கவிடாமல் தொந்தரவு செய்வது யாரென்று தெரியாமல் கண்களைக் கசக்கிவிட்டுப் பார்த்தாள். அங்கு யாரையும் காணவில்லை.
சற்றுநேரத்தில், மறுபடியும் அதே குரல் கேட்டது.
நீநிகா பயந்துபோனாள். படுக்கை அறைக்குள் திருடர்கள் நுழைந்துவிட்டார்களா? என்ற பதற்றம். ‘அம்மா’ என்று உரக்கக் கத்தி அம்மாவை எழுப்பி விடலாமா என்று யோசிப்பதற்குள் மூன்றாவது தடவையாக அந்த விழிப்புக் குரல் கேட்டது.
“அக்கா… நீநிகா அக்கா! பிறந்தநாள் வாழ்த்துக்கள்.’’
அடடே! இப்போது அந்தக் குரல் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்கிறதே. இனி பயம் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அழைத்தது யாராக இருக்கும்? இருட்டறைக்குள் இருந்து கேட்டாள்:
“யாரது? என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பி பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னது?’’
“அக்கா, நாங்கள் இருவரும் அலங்கார மீன்கள். உங்க அப்பா பரிசாகக் கொடுத்த கண்ணாடித் தொட்டிக்குள் வாழும் குஞ்சு மீன்கள்’’ என்று பதில் வந்த இடத்தைத் திரும்பிப் பார்த்தாள். அறை விளக்கை ஏற்றிவிட்டு தொட்டிக்கு அருகில் சென்றாள்.
“இன்று எனது பிறந்தநாள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’’
“அக்கா, நீதான் இன்று தேவதைப்போல உடை அணிந்திருந்தாயே. மெழுகுவர்த்திகளை அணைத்து கேக் வெட்டி, பெற்றோருக்கும் நண்பர்களுக்கும் ஊட்டி விட்டாயே. எல்லோரும் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தியதையும் பரிசளித்ததையும் தொட்டிக்குள் இருந்தபடி பார்த்தோமே. நாங்கள் இருவரும்கூட தண்ணீருக்குள் நடனமாடியபடி வாழ்த்துச் சொன்னோமே. நீதான் கவனிக்க மறந்துவிட்டாய் போலும்.’’
அதுவும் உண்மைதான் நீநிகா, இன்று ஏழாவது பிறந்தநாளைக் கொண்டாடினாள். காலை எழுந்தவுடன் அழைப்பிதழ் அட்டைகளைப் பூர்த்தி செய்து பள்ளித் தோழிகள், ஆசிரியைகள், சொந்தக்காரர்கள் என்று பலரையும் அழைத்துவிட்டு வந்திருந்தாள்.
மாலை ஆறு மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடங்கின. வீடு முழுக்க வண்ண பலூன்களைக் கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். காகித மாலைகள், காகிதப் பூக்களால் அறையை அலங்கரித்து இருந்தார்கள். ஒரு பெரிய மூன்று அடுக்குக் கேக்கை வெட்டி, பெற்றோருக்கு ஒவ்வொரு துண்டு ஊட்டிவிட்டாள். பிறகு, தோழியருக்கு ஊட்டி மகிழ்ந்தாள்.
“ஹேப்பி பர்த் டே டூ யூ’’ என்று கூடியிருந்த அனைவரும் பாட்டுப்பாடி உற்சாகப்படுத்தினார்கள். நண்பர்கள் அனைவரும், கொண்டுவந்த பரிசுப் பெருட்களைக் கொடுத்து வாழ்த்தினார்கள்.
எல்லா பரிசுகளையும்விட அப்பா தந்த பரிசு மனசுக்குப் பிடித்திருந்தது. அவள், நீண்ட நாட்களாக அப்பாவிடம் கேட்டுக்கொண்டிருந்த பொருளைத்தான் அவர் பரிசாக வாங்கித் தந்தார். ஆமாம். நீநிகா விருப்பப்பட்ட கண்ணாடி மீன் தொட்டி.. அதைப் பெற்றுக்கொண்டவுடன் நீநிகா அவருக்கு நன்றி சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள்.
கண்ணாடித் தொட்டிக்குள், ஒரு தங்க மீனும் வெள்ளி மீனும் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தன.
பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தபடி நின்றுகொண்டிருந்த அவளிடம் மீன்கள் ஓர் உதவி கேட்டன:
“நீநிகா அக்கா, இனி நாங்கள் இந்த வீட்டுக்கு விருந்தாளிகள் இல்லைதானே?’’
“நிச்சயமாக நீங்கள் இருவரும் எனது நண்பர்கள். அதிலென்ன சந்தேகம்?’’
“அக்கா, எங்களுக்கு ஓர் ஆசை. நீங்கள் நினைத்தால் அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கலாம் என்று நம்புகிறோம்’’ என்றன தொட்டி மீன்கள்.
“ஆசையைச் சொல்லுங்கள். நிச்சயமாகச் செய்வேன்’’ என்றாள் நீநிகா.
“பிறந்ததிலிருந்து நாங்கள் இது மாதிரித் தொட்டியில் மட்டுமே வாழ்ந்து பழகிவிட்டோம். குளத்தையோ, கடலையோ பார்த்ததில்லை. குளத்து மீன்களையும் கடல் மீன்களையும் சந்தித்துப் பேசவேண்டும்; ஆசைதீர அவற்றுடன் விளையாடவேண்டும்’’ என்றன.
“சரி, எனக்கும் கடலுக்குச் சென்று மீன்களைப் பார்க்கவேண்டுமென்ற ஆசை உண்டு. நான் நிச்சயம் அதற்கொரு வழி காண்கிறேன்’’ என்றாள் நீநிகா நம்பிக்கையுடன்.
அவள் சிந்தித்தபடியே கண்களை மூடினாள். மீன்களும் கண்களை மூடின. அவர்கள் மூவரும் கனவுலகுக்குள் புகுந்தார்கள்.
கண்ணாடி மீன் தொட்டி. செவ்வக வடிவத்தில் இருந்தது. தொட்டியின் நான்கு பக்கங்களிலும் ஒட்டப்பட்டிருந்த கண்ணாடிகள் தனித்தனியாக பிரிந்தன. பூவிதழ்கள் மலர்வதைப்போல அவை ஒவ்வொன்றாக விரிந்து மேசையில் சரிந்தன. தொட்டித் தண்ணீர் தரையில் கொட்டியது. தண்ணீர் கொட்டிய அந்த அறை, கடலாக மாறியது. தங்க மீனும் வெள்ளி மீனும் கடலுக்குள் துள்ளிக் குதித்தன.
“நீங்களும் வாங்க நீநிகா அக்கா’’ என்று நீநிகாவை அழைத்தன. அடுத்த நிமிடமே அவள், ஆழ்கடல் பயணிகளைப்போல மாறினாள். கால்களில் துடுப்புகள் அணிந்திருந்தாள். தண்ணீரில் நனையாத ஆடை அணிந்திருந்தாள். முதுகுக்குப் பின்னால் பிராண வாயு உருளையும் மாட்டப்பட்டிருந்தது.
நீநிகா, மீன்களுடன் சேர்ந்து கடலில் குதித்தாள். தண்ணீருக்குள் நீந்தி நீண்ட தூரம் சென்றார். தங்க மீனின் கண்களிலிருந்து சிவப்பு நிற ஒளி வீசியது. வெள்ளி மீனின் கண்களிலிருந்து மஞ்சள் நிற ஒளி வீசியது. மூவரும் கடலுக்குள் பயணிக்கப் போதுமான வெளிச்சம் கிடைத்தது.
பவளப் பாறைகள் உள்ள இடத்தைச் சென்றடைந்தார்கள். பாறைகளுக்கு இடையில் வாழும் வண்ண வண்ண மீன்களைச் சந்தித்தார்கள். சில மீன்கள் வானவில் நிறத்தில் இருந்தன. தட்டையான, ஊசியான, நீளமான மீன்கள் கூட்டங்கூட்டமாக வாழ்ந்து வந்தன. கடலைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த தங்க மீனையும் வெள்ளி மீனையும் நீநிகாவையும் வரவேற்றன. அவர்களோடு விளையாடி மகிழ்ந்தன.
மூவரையும் அழைத்துச் சென்று டால்பின்களை அறிமுகம் செய்து வைத்தன. டால்பின்கள் நீநிகா. கேட்டபடி தண்ணீரில் வித்தைகள் செய்து காட்டின. அவளை முதுகில் ஏற்றிக்கொண்டு வெகுதூரம் வரை சுற்றித் திரும்பின.
அங்கிருந்து சற்றுத் தொலைவில் குட்டித் திமிங்கிலங்கள் ஓடியாடி விளையாடுவதைப் பார்த்தார்கள். குட்டித் திமிங்கிலங்களுடன் நண்பர்கள் ஆனார்கள். திமிங்கிலங்களின் முதுகில் ஏறி சருக்கு மரத்தில் சரிந்து விளையாடுவதுபோல வழுக்கி விளையாடினாள். அவை, கடல் அதிசயங்களைக் காண்பித்தன. கடல் குதிரைகளையும் திருக்கை மீன்களையும் அறிமுகம் செய்து வைத்தன.
கடல் வாழ் விலங்குகளுடன் சேர்ந்து, நீநிகா கைப்பந்து விளையாடினாள். நேரம் போனதே தெரியாமல் ஆட்டம் பாட்டமெனக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தங்க மீனும் வெள்ளி மீனும் கடல் மீன்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டன.
வயதில் மூத்த கடல் ஆமைகளையும் அவர்கள் சந்தித்தார்கள், ஆமைகள், புல்லாங்குழல்போன்ற ஓர் அழகான இசைக்கருவியை இசைத்துக் காண்பித்து மகிழ்வித்தன.
“குழந்தைகளே, விளையாடியது போதும். வெளிச்சம் வந்துவிட்டது. கடல் பள்ளிக்குச் செல்லும் குஞ்சு மீன்கள் தயாராகுங்கள்.’’ என்று, அங்கு வந்த ஒரு சுறா மீன் சொன்னது. குஞ்சு மீன்கள் தங்களது வசிப்பிடத்தை நோக்கிப் பாய்ந்து ஓடின. நீநிகாவும் தொட்டி மீன்களும் சுறா மீனுடன் சென்று கடல் பள்ளியைச் சுற்றிப் பார்த்தார்கள்.
அதைப் பார்த்தவுடன், நீநிகாவுக்கு பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்ற நினைவு வந்தது. அவள் கேட்டுக்கொண்டதன் பேரில், கடல் ஆமைகள் மூவரையும் கடற்கரைவரை வழிகாட்டிவிட்டுத் திரும்பிச் சென்றன.
திடீரென்று கடல் மறைந்தது. நீநிகா, படுக்கையறைக்குத் திரும்பி இருந்தாள். அவளது மேசையில் சரிந்து கிடந்த நான்கு கண்ணாடிகளும் ஒன்று சேர்ந்தன. மறுபடியும் கண்ணாடித் தொட்டி திரும்ப வந்தது. அதில், தண்ணீர் நிரம்பியிருந்தது.
பிறந்த நாள் பரிசாகக் கிடைத்த தங்க மீனும் வெள்ளி மீனும் தொட்டிக்குத் திரும்பி வந்தன. தனது பிறந்த நாளன்று இப்படி மகிழ்ச்சியில் திளைப்போமென்று நீநிகா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
அவள், கனவு தேவதைக்கு நன்றி சொன்னாள்.
பொழுது விடிந்தவுடன், படுக்கை அறைக்குள் நுழைந்த அம்மா அவளை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டார்.
கடல் சென்று திரும்பிய கதையை, நீநிகா அம்மாவிடம் சொன்னாள். மகளைத் தூக்கியெடுத்து ஆசைதீர கன்னத்தில் முத்தங்களைப் பதித்தார் அம்மா.
நீநிகா, பள்ளிச் செல்வதற்குத் தயாரானவுடன் அம்மா அவளுக்குக் காலைச் சிற்றுண்டி ஊட்டினார். அதேநேரத்தில், நீநிகா தொட்டி மீன்களுக்குத் தேவையான உணவைப் பகிர்ந்தாள்.