17 வயது மாணவர் கட்டிய மரப் பாலம்
நாம் தினமும் மகிழ்ச்சியாக பேருந்து,ஆட்டோ போன்ற சிற்றுந்துகளில் பள்ளிக்குச் செல்கின்றோம். ஆனால் மும்பை சாதே நகர் என்ற சேரியிலிருந்து பிஞ்சுகள் பள்ளிக்கு 1.5 கி.மீ நடந்தே செல்ல வேண்டியுள்ளது.
ஆனால் அவர்களது பள்ளி அவ்வளவு தூரமில்லை. இவர்களது பகுதியிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியிலுள்ள அழுக்கு கால்வாயினைக் கடக்க பாலம் இல்லாததே இதற்கு காரணமாகும். அது மட்டுமின்றி இவர்களது பகுதியிலிருந்து சிற்றுந்து வசதியும் இல்லாததால் பல பிஞ்சுகளின் பள்ளி படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இக்கால்வாயில் அழுக்கு நீர் நிரம்பி வழிகிறது. அழுக்கு நீரினால் மலேரியா, டெங்கு போன்ற நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன.
ஆனால் தற்போது சாதே நகர மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டு அந்த 17 வயது மாணவரான இசான் பால்பலே-விற்கு நன்றி சொல்கின்றனர். காரணம் அம்மாணவர் மூங்கில்களைக் கொண்டு கால்வாயின் இருபக்க கரைகளையும் இணைக்கும் விதமாக பாலத்தினை அமைத்துள்ளதே ஆகும். தற்போது அப்பகுதி குழந்தைகள் அச்சமின்றி பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கின்றனர்.
இசான் 2015 ஆகஸ்டு மாதம் அப்பகுதியின் மோசமான நிலையினை கண்டமாத்திரத்தில், இக்கால்வாயின் நடுவே எவ்வளவு விரைவில் பாலம் அமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அப்போதே அவர் இப்பிரச்சனையினை தனது கையிலெடுக்க முடிவு செய்து பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இப்பிரச்சனை தொடர்பாக பல ஆண்டுகளாக புகார் மனுக்கள் கொடுத்தும் தீர்வு எட்டப்படாத நிலையில், இசான் தனது சொந்த முயற்சியில் தீர்வு கண்டுள்ளார்.
கான்கிரியிட் பாலம் கட்ட ஙிவிசி-ல் அனுமதி பெற வேண்டும். மேலும் அதற்கு நீண்ட காலமாகும். எனவே மூங்கில்களைக் கொண்டு பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இது எடை குறைவானதும் உறுதியானதுமாகும். இப்பகுதி பிஞ்சுகள் கால்வாயினைக் கடந்து பள்ளிக்கு செல்ல இப்பாலம் பாதுகாப்பாக இருக்கும் என முடிவு செய்துள்ளார்.
சாதே நகரினையும் றிநிவிறி காலனியையும் இணைக்கும் இப்பாலம் 4அடி அகலமும் 100 அடி நீளமும் கொண்டது. இப்பாலத்தினை 8 நாட்களில் கட்டி முடித்து 2015 ஆகஸ்டு 29 அன்று திறந்துள்ளனர். இதனை தொடர்ந்து இம்மாணவர் அப்பகுதியில் துப்புரவு வசதியினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக 8 முதல் 10 கழிவறைகளை கட்ட வார்டு அலுவலகத்தில் அனுமதி கேட்கும் முயற்சியினை மேற்-கொண்டுள்ளார்.
இத்தகைய செயல்களின் மூலம் இம்மாணவர் அப்பகுதியில் பலரது நெஞ்சத்தினை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, பல பிஞ்சுகளின் மனதில் இத்தகைய சமூக பணியினை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினையும் விதைத்துள்ளார்.
இசான் அண்ணாவை போன்று பிஞ்சுகளாகிய நாமும் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து நன்மதிப்பினை பெற வேண்டும்.