பிரபஞ்ச ரகசியம் 43
இன்று நமது கைகளில் இருக்கும் நவீன அலைபேசி, பார்த்துக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவை இரண்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. அன்று ஒரு பெரிய ஆண்டனா வீட்டின் மேற்கூரையில் இருக்கும். அதை அவ்வப்போது திருப்பி தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளை தெளிவாக்கிக் கொண்டு இருப்பார்கள். அதேபோல் வீட்டில் ஒரு தொலைபேசி இருக்கும், வசதியில்லாதவர்கள் பேசுவதற்குப் பொதுத் தொலைபேசியாகச் செயல்படும்.
ஆனால் இன்று அப்படி அல்ல. விரல் நுனியில் உலகம் என்பதுபோல் விரல் நுனியில் போன் அழைப்பு மற்றும் ரிமோட்டுகள் அழுத்தி தெளிவான தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கு முக்கிய காரணம் வான்வெளியில் நிலை கொண்டுள்ள செயற்கைக் கோள்களாகும்.
செயற்கைக் கோள் என்றால் என்ன?
கோள் என்பது நமது பூமி முதல் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ் போன்றவைகளாகும். இவை சூரியனை மய்யமாகக் கொண்டு சுழன்று வருகின்றன. இதேபோல் இக்கோள்களை மய்யமாகக் கொண்டு சிறிய கோள்கள் சீரான வட்டப்பாதையில் சுழன்று வருகின்றன. இவற்றை துணைக்கோள் என்று அழைக்கின்றனர். இந்த துணைக்கோளின் ஈர்ப்புவிசை தனது தாய்க்கோளில் சில மாற்றங்கள் ஏற்படக் காரணமாக இருக்கும். எடுத்துக்காட்டாக இன்று நமது புவியில் பருவநிலை மாற்றங்கள், கடும் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பை முறைப்படுத்துவதில் பெரும் பங்கு நமது நிலவிற்கு உண்டு.
நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்புவிசை, ஈர்ப்புவிசையின் பலம் போன்றவற்றை விண்வெளி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தனர். 1920க்குப் பிறகு கம்பியில்லாத தொலைத்தொடர்பு கொள்கை அதன் தயாரிப்பு பிரபலமாகத் தொடங்கியபோது,
ரிசீவர்கள் எனப்படும் ஒலிவாங்கி, மற்றும் முறைப்படுத்தும் மின்னணு கருவிகளை பல்வேறு இடங்களில் அமைத்து அதன் மூலம் தூரநாடுகளில் உள்ளவர்கள் பயன்படுத்தலாம் என்ற புதிய சிந்தனை தொடங்கி அதில் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன, 1839-ஆம் ஆண்டு அய்ரோப்பிய நாவலாசிரியர் எட்மண்ட் எவர்ட் என்பவர் விண்வெளியில் புவிஈர்ப்பு விசைக்கு அப்பால் ஒரு பெரிய ரிசீவரை அனுப்பி அதன் மூலம் பூமியின் செயல்களைக் கட்டுப்படுத்துவது போன்ற கதை ஒன்றை எழுதியிருந்தார்.
இந்தக் கதைதான் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி நிலை நிறுத்துவதற்கு முதல் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது, அதன்பிறகு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது, தற்போது செயற்கைக்கோள்கள் பல்வேறு பயனுள்ள திட்டங்களுக்காக அனுப்பப்படுகின்றன. இப்படி அனுப்பப்படும் ஒவ்வொரு செயற்கைக் கோளின் பணியையும் புவியின் சுற்றுப்பாதையே தீர்மானிக்கிறது. இவ்வாறான செயற்கைக்கோளின் பாதைகள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சில பாதைகள்:
1. பூமியின் அடி கோளப் பாதை
2. துருவ கோளப் பாதை
3. புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேலாக எப்போதும் இருக்கும் கோளப் பாதை.
மேலே அனுப்பப்படும் செயற்கைக் கோள் கணினியின் துணையுடனும், அதுவாகவே சுதந்திரமாக இயங்கும் தன்மையுடனும் இருக்கிறது. செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் தகடுகள் மூலம் தடையில்லா மின்சாரம் எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது, தானியங்கும் செயற்கைக் கோள்கள் தன்னுள் உள்ள வெப்பத்தைக் கட்டுப்படுத்துவது, அருகருகே உள்ள செயற்கைக் கோள்களின் தூரத்தை முறைப்படுத்துவது போன்ற பல்வேறு பணிகளைத் தாமாகவே செய்து விடுகின்றன.
ஸ்புட்னிக் -1: முதல் செயற்கைக்கோள்
ஒருங்கிணைந்த சோவியத் நாடுதான் முதல் முதலாக அக்டோபர் 4, 1957 அன்று ஸ்புட்னிக் 1 என்ற செயற்கைக்கோளை ஏவியது.
இந்த சோவியத் ஸ்புட்னிக் செயல்பாட்டு குழுவுக்குத் தலைவராக இருந்தவர் செர்கே கொரோலெவ்; அவருக்கு உறுதுணையாக இருந்தவர் கெரிம் கெரிமோவ். காற்று மண்டலங்களின் அடர்த்தியை கண்டறிய ஸ்புட்னிக்_1 உதவியாக இருந்தது. இந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப் பாதையை மாற்றும் போது அது தானாகவே சரிசெய்து தொடர்ந்து பணிகளைச் செய்து கொண்டு, ரேடியோ சமிக்கைகளை கொண்டு பூமிக்குத் தகவல்களை அனுப்பியது.
செயற்கைக்கோளில் அதிக அழுத்தம் கொண்ட நைட்ரஜன் இருந்ததால், ஸ்புட்னிக்_1 முதன்முதலில் எரிமீன்களை கண்டுபிடிக்கவும் உதவியாக இருந்தது. வெளிமேல்பரப்பில் எரிமீன்கள் நுழைவதனால் உள்ளுக்குள்ளே ஏற்படும் காற்றழுத்தக் குறைவினால் புவிக்கு அனுப்பப்படுகின்ற தட்பவெப்ப தகவல்களை அறியவும் உதவியாக இருந்தது.
ஸ்புட்னிக்_1 செயற்கைக் கோளின் வெற்றியைத் தொடர்ந்து ஸ்புட்னிக்_2 நவம்பர் 3, 1957 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இது லைகா என்ற நாயை விண்வெளிக்கு முதன்முதலில் எடுத்துச் சென்றது.
செயற்கைக்கோள்கள் வட்டப்பாதையாக சுற்றிவருவதும் உண்டு. நிலையாக ஓரிடத்தில் நிற்கும் வகை செயற்கைக் கோளும் உண்டு, இந்தியா அனுப்பிய பெரும்பாலான செயற்கைக்கோள்கள் பூமியின் இந்தியப் பகுதிக்கு நேராக ஓரிடத்தில் நிலை நின்று நமக்குத் தகவல்களை தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு சென்னையைப் பாதித்த வார்தா புயல், 2011-ஆம் ஆண்டு வந்த தானே புயல் போன்றவற்றை இந்தியா அனுப்பிய செயற்கைக்கோள் மூலம் நாம் கண்டறிந்தோம். நகர்ந்துகொண்டே இருக்கும் செயற்கைக்கோள் _ வாகனங்கள், கப்பல்கள், விமானங்களுக்கு இடையே உள்ள தகவல் நிலையங்களுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றன.
அறிவியல் ஆராய்ச்சி செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் இருந்துகொண்டு தூர விண்மீன்கள் மற்றும் பல்வேறு வானியல் அறிவியல், புவி அறிவியல், கடல் அறிவியல், காற்றுமண்டல ஆராய்ச்சிகள் போன்ற மற்ற அறிவியல் ஆராய்ச்சி நுட்பங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.
இதுவரை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை செலுத்திய நாடுகளின் பட்டியலில் 9 நாடுகள் இணைந்துள்ளது, இதில் நமது இந்தியா 1980-ஆம் ஆண்டு ரோகிணி என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி இந்த பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டது.
நாடுகளும் அவற்றின் முதல் முயற்சியும்
1. சோவியத் ஒன்றியம் 1957 ஸ்புட்னிக்-PS-, (ஸ்புட்னிக்_1), 2.அமெரிக்கா 1958 (ஜூனோ), 3.பிரான்ஸ் 1965 (டைமண்ட்ஆஸ்டரிக்ஸ்), 4.ஜப்பான் 1970 (லாம்டா–4S ஓசுமி), 5.சீனா 1970 (லாங் மார்ச் 1 டாங் பாங் ஹாங்), 6, உக்ரைன் 1971 (ப்ளாக் ஆரோ பரோஸ்பேரோ X-3), 7.இந்தியா 1980 (ரோகிணி), 8.இசுரேல் 1988 (சாவித்ஒபெக்), 9. ஈரான் 2009 (சாபிர்_-2 ஓமிட்) ஆகியவை ஆகும்.
(தொடரும்)