பேசாதன பேசினால் 5
“நிகரன்!… நிகரன்!’’ என அம்மா கூப்பிட்டதைக் கேட்டதும் தன் நண்பர்களோடு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த நிகரன் வீட்டிற்குள் ஓடோடி வந்தான்.
“நிகரன்! காலையிலேயே இந்தக் குப்பை டப்பாவிலே இருக்கிற குப்பையை குப்பைத் தொட்டியில கொண்டு போய் கொட்டிட்டு வான்னு… சொன்னனா இல்லியா?’’ என்றார் அம்மா.
“அம்மா கோவிச்சுக்காதீங்க! ஒரே நொடி இப்பவே போயி கொட்டிட்டு வந்திடுறேன்’’ என்று சொல்லியபடியே குப்பை டப்பாவை எடுக்கப் போனான்.
அந்த நேரம் அங்கே வந்த நிகரனின் பாட்டி, “விளக்க வச்ச பிறகு யாராவது குப்பையைக் கொண்டு போய் கொட்டுவாங்களா? வேணாம் வை’’ என்றார்.
“ஏன் பாட்டி விளக்கு வச்ச பிறகு குப்பையை கொட்டக் கூடாது? இருட்டிப் போனா குப்பைக்கு கண்ணு தெரியாமப் போயிடுமா?’’ எனக் கேட்டான் நிகரன்.
“விளக்கு வச்ச பிறகு குப்பையைக் கொட்டுனா லட்சுமி போயிடும்’’ என்றார் பாட்டி.
“குப்பையை பகல்ல கொட்டுனா மட்டும் லட்சுமி போகாதா பாட்டி’’ எனக் கிண்டலாகக் கேட்டான் நிகரன்.
“டேய்! பாட்டியையே கிண்டல் செய்றியா?’’ என்றார் அம்மா.
‘இல்லை… இல்லை… நம்ம கிட்ட இருக்கிற மூட நம்பிக்கையை கிண்டல் செய்றான்’’ என்றபடி வெளியிலிருந்து வந்தார் அப்பா.
“நான் எதைச் சொன்னாலும் கேலி பண்றது… அப்பனுக்கும் மகனுக்கும் வேலையாப் போச்சு’’ என்று அலுத்துக் கொண்டார் பாட்டி.
“சரி… சரி… குப்பை கொட்டுறதை நாளைக்குக் காலையிலே தூங்கி எழுந்ததும் நிகரன் சரியா செய்துடுவான். சூடா வாழைப்பூ வடை சுட்டு வச்சிருக்கேன். வாங்க எல்லாரும் சாப்பிடுவோம்’’ என கூப்பிட்டபடி சமையலறைக்குள் சென்றார் அம்மா. அனைவரும் பின்தொடர்ந்து சென்றனர்.
வழக்கம்போல மறுநாள் பொழுது விடிந்தது. காலை 5.30 மணிக்கு நடைப்பயிற்சிக்குப் புறப்பட்டார் அப்பா.
நிகரன் சற்று நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்தான். அம்மா சொன்னதுபோல் முதல் வேலையாக குப்பையைக் கொட்டி விட்டு வரவேண்டும் என நினைத்தான். குப்பை டப்பாவை எடுத்துக்கொண்டு தெருவின் கடைசியில் உள்ள விளையாட்டுத் திடலின் அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியை நோக்கி நடந்தான். இரண்டு நாட்களாக குப்பையை எடுத்துச் செல்லும் வண்டி வராததால் தொட்டி நிறைந்து சாலையெங்கும் வழிந்து கிடந்தது குப்பை.
அருகில் சென்ற நிகரன் குப்பைத் தொட்டியின் உள்ளே குப்பையைக் கொண்டு போய்க் கொட்ட முடியாததால் சற்றுத் தள்ளியிருந்தபடியே குப்பைத் தொட்டியை நோக்கி வீசினான். குப்பை தொட்டிக்குள் விழாமல் வெளியிலேயே விழுந்து சிதறியது. அதைக் கண்டுகொள்ளாமல் புறப்பட்டான் நிகரன்.
“தம்பி! நில்லுப்பா… பாத்தா நல்ல பையனா இருக்கே; நீ இப்படி செய்யலாமா?” எனக் குரல் கேட்டது.
திரும்பிப் பார்த்தான் நிகரன். அந்த இடத்தில் யாருமே இல்லை. யார் பேசியிருப்பார்கள் என சுற்றுமுற்றும் பார்த்தான் ஒருவரும் தென்படவில்லை.
“என்ன பாக்குறே? யார் பேசறதுன்னு தேடுறியா? நான்தான் குப்பைத் தொட்டி பேசுறேன்’’ எனக் குரல் வந்தது.
குப்பைத் தொட்டி பேசுமா? அது எப்படிப் பேசும்? என சந்தேகத்துடனே குப்பைத் தொட்டியை உற்றுப் பார்த்தான்.
குப்பைத் தொட்டியின் மேலும் கீழும் நிரம்பி வழிந்த குப்பைகள் காற்றில் ஆடின. குப்பைத் தொட்டி பேசுவது போலவே தெரிந்தது.
அதற்குள் “தம்பி! குப்பையை தொட்டிக்குள்ள கொட்டாமல் தூரமா நின்னு வீசுறியே இது நியாயமா?’’ என்றது குப்பைத் தொட்டி.
“நான் என்ன செய்ய முடியும்? கிட்ட வந்து கொட்ட முடியாதபடி வெளியிலே எல்லாம் அசிங்கமா இருக்கே’’ என்றான்.
“உன்னை மாதிரி குப்பை கொட்ட வந்தவங்க ஒழுங்கா கொட்டாம போனதாலேதான் இப்படி ஆச்சு. ஒவ்வொருத்தரும் பொறுப்பா இருந்தாதான் ஊரும் நாடும் நல்லாயிருக்கும்’’ என்றது தொட்டி.
உடனே நிகரன், “நேத்து ராத்திரியே கொண்டு வந்து கொட்டலாம்ன்னு பாத்தேன். எங்க பாட்டிதான் நம்ம வீட்டு லட்சுமி போயிடும், இருட்டுன பிறகு கொண்டு போய் கொட்டாதேன்னு தடுத்துட்டாங்க!” என்றான்.
குப்பைத் தொட்டி சிரித்தபடி, “இராத்திரியிலே மட்டுமில்லே பகல்லே கூட நான் உங்க வீட்டு லட்சுமிதான்’’ என்றது.
“அது எப்படி?’’ எனக் கேட்டான் நிகரன்.
“முதல்ல குப்பை உங்க வீட்டுலே எப்படி உருவாகுது?” எனக் கேள்வி கேட்டது குப்பைத் தொட்டி.
“வீட்டுல சமைக்கும்போது கிடைக்கும் காய்கறிக் கழிவு, சாப்பிட்ட பிறகு தேவையில்லேன்னு போடுற மீதி உணவு, பொருட்கள் வாங்கும்போது அதை கட்டித் தர்ற பிளாஸ்டிக் கவர், பேப்பர், அட்டைப் பெட்டி, எண்ணெய் கவர், பருப்பு, பிஸ்கட் இப்படி எல்லா உணவுப் பொருளுமே பாக்கெட் செய்து தர்றாங்களே அந்தக் கவர்… இதெல்லாம்தான் குப்பையாகுது’’ என்றான் நிகரன்.
“ஆங்! இந்தக் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிக்கணும்.
காய்கறிக் கழிவு, பழத் தோலு, மீந்த உணவு, காகிதம், மக்கிய இலை, தழை இதெல்லாம் மக்குற குப்பை. பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் பாட்டில், ரப்பர், கண்ணாடி, பீங்கான் இதெல்லாம் மக்காத குப்பை.
மக்குற குப்பையை ஒரு தொட்டியிலெ கொட்டி சாணம், மண், சாம்பல் இதையெல்லாம் கலந்து பக்குவப்படுத்துனா அய்ம்பது அறுபது நாள்ல உரமாயிடும்.
பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி பொருளை-யெல்லாம் சேத்து வச்சு மறு சுழற்றி செய்யிறவங்ககிட்ட வித்துட்டா அது பணமாயிடும். உரமும், பணமும் செல்வம்தானே. லட்சுமி சாமின்னு நினைக்காதே! செல்வம்னு சொல்லத் தெரியாமத்தான் சாமி பேருன்னு குழம்புறாங்க. இப்பப் புரிஞ்சுதா?’’ என்றது குப்பைத் தொட்டி.
“அப்படின்னா.. இனிமே குப்பையைக் கொட்டாம மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிச்சு உரமாவும், பணமாவும் மாத்தலான்னு சொல்றீயா?’’ என்றான் நிகரன்.
“ஆமா! நம்ம தமிழ்நாடு முழுக்க ஒரு நாளைக்கு பதினான்காயிரம் மெட்ரிக் டன் குப்பை சேருது. அதாவது ஒரு மெட்ரிக் டன்-னுங்கிறது ஆயிரம் கிலோ. ஆயிரம் கிலோவை பதினான்காயிரத்தால பெருக்கினா எவ்வளவு வருதுன்னு கணக்குப் போட்டுப் பாத்துக்க தம்பி. ஒரு லாரிலே நாலு டன் குப்பைதான் ஏத்த முடியும். எத்தனை லாரி தேவைப்படும்னு பாறேன்’’ என்றது குப்பைத் தொட்டி.
“அய்யய்யோ கணக்குப் போட்டா தலையே சுத்துது” என்றான் நிகரன்.
“2016ஆம் ஆண்டுல நாம கொட்டுன குப்பைகளைக் கொட்டி வைக்கவே ஆயிரத்து நானூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை.
ஆண்டுக்கு ஆண்டு குப்பையின் அளவு கூடிக்கிட்டே போகுது. இதையெல்லாம் எங்கே கொண்டு போய் கொட்ட முடியும்.
எதுக்குமே உதவாத, யாருக்கும் பிரச்சினையில்லாத குப்பையா இருந்தா அப்படியே மக்கிப் போகட்டும்னு விட்டுவிடலாம். அப்படி இல்லியே… மனித உயிர்களை பலி வாங்கக் கூடிய உயிர்க் கொல்லியா மாறுறதுதான் ஆபத்து! அடுத்த தலைமுறையான உன்னை மாதிரி குழந்தை களுக்குத்தான் ஆபத்து அதிகமாயிருக்கு. அதை நினைச்சாதான் பயமா இருக்கு.
குப்பையிலே… உணவுக் கழிவுங்க, மருத்துவக் கழிவுங்க, கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் போன்ற எலக்ட்ரானிக் கழிவுங்க, அணுக் கழிவுங்க, கட்டிடக் கழிவுங்க, தொழிற்சாலைக் கழிவுங்கன்னு பல வகையான குப்பைகள் இருக்கு. இதனாலே நீர், நிலம், காற்றுன்னு எல்லாமே பாழாகுது. இப்ப இருக்குற மனிதர்கள் பயன்பாட்டுலே நெகிழின்னு நல்ல தமிழ்ல சொல்லப்படுற பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாயிட்டதாலே நகரம் மட்டுமில்லே… பசுமையா இருந்த கிராமங்கள்கூட பாழாப் போச்சு.
தமிழ்நாட்டு அளவுல மக்கும் குப்பை 60 விழுக்காடு, மக்காத குப்பை 35 விழுக்காடு, மத்தது 5 விழுக்காடு இருக்கு.
இந்த மக்கும் குப்பையை சரியா, முறையா பராமரிக்காமல் விட்டுட்டா அதுல உண்டாகிற கிருமிகளாலே தொற்று நோய்களும், சுகாதாரக் கேடும் வரும், கொசுக்கள் உற்பத்தியாக இதுவே காரணமாயிடும்.
குப்பைகளை மொத்தமா கொட்டி வைக்கிற பகுதிகளிலே வசிக்கிற தாய்மார்களின் தாய்ப்பால்கூட விஷத்தன்மை உடையதா இருக்குன்னு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிச்சிருக்காங்க.
மக்காத குப்பையை பல இடங்கள்ல சேர்த்து வச்சுக் கொளுத்துறாங்க. அப்படி செய்யவே கூடாது. ஏன்னா குப்பையில பிளாஸ்டிக், ரப்பர், டயர் இதெல்லாம் எரியும்போது டயாக்சின்கிற புகை உண்டாகுது. அந்தப் புகையை சுவாசிக்கிறவங் களுக்கு நுரையீரல் புற்று நோய் வரும். குறிப்பா தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரவும் வாய்ப்பிருக்கு. கருவுல இருக்கிற குழந்தைக்குக்கூட புற்று நோயை உண்டாக்கும்.
இந்த டயாக்சின், காற்றோட மூலக் கூறுகள்ல ஒளிஞ்சுக்கிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய வல்லமை உள்ளது.
தேவையில்லேன்னு தூக்கிப்போடுற டியூப்லைட்டுன்னு சொல்லப்படுற குழல் விளக்கு கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இப்படி மக்காத குப்பையாலும் பல ஆபத்து இருக்கு. குப்பைகளை மொத்தமாகக் கொட்டி வைக்கிற இடத்திலே புகையா வரும் பார்த்திருப்பீங்க. அதுக்கு என்ன காரணம் தெரியுமா?’’ என்றது குப்பைத் தொட்டி.
“என்ன காரணம்?’’ என வியப்பாகக் கேட்டான் நிகரன்.
“பல நாள் சேந்திருக்கிற குப்பையிலே மீத்தேன் வாயு உண்டாகும். அது எரியும் தன்மை கொண்டது. அதனாலே குப்பை எரியும். காற்றிலே உள்ள கார்பன்_டை_ஆக்ஸைடு அதை முழுமையா எரிய விடாமல் தடுக்கும். அதனாலேதான் புகைஞ்சுக்கிட்டே இருக்கும். இதுவும் மனித உடல் நலத்துக்குத் தீங்கானது _ ஆபத்தானது.
அதை எல்லாம் புரிஞ்சுக்கிட்டு குப்பைகளைக் குறைக்கவும், முறையா பராமரிக்கவும் மனிதர்கள் தெரிஞ்சுக்கணும்” என்றது குப்பைத் தொட்டி!
“அதெல்லாம் சரி… குழந்தையா இருக்கிற நான் என்ன செய்ய முடியும்?” என்றான் நிகரன்.
குப்பைகளைக் கண்ட இடத்திலே போடாம இருக்கலாம்! வீட்டுல மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு பிரிச்சு வச்சு முறையா _ சரியா வெளியேத்தலாம். மக்கும் குப்பையை உரமாக்கி செடி வளர்த்து அதுக்கும் போடலாம்.
திறந்த வெளியிலே, சாலை ஓரத்திலே, கழிவுநீர் கால்வாய்களிலே ஏரி, குளம், கிணறுகள்ல குப்பைகளை கொட்டாம இருக்கலாம், குப்பையை எரிக்காம இருக்கலாம். கடைக்குப் போகும்போது துணி அல்லது சணல் பைகளை எடுத்துக்கிட்டுப் போகலாம்.
நெகிழின்னு சொல்ற பிளாஸ்டிக் பையை வாங்காம _ பயன்படுத்தாம தவிர்க்கலாம். இதுபோக பேராசையினாலும், மூடநம்பிக்கையினாலும் ஏராளமான குப்பை உருவாகுது. மத்ததை அகற்றுவதை விட இத அகற்றுவதுதான் பெரிய வேலை. இதனால உள்ள பின்விளைவுகளும் மோசம்.
இப்படியெல்லாம் செய்தா எல்லாரும் நல்லாயிருக்கலாம். இப்ப நான் சொன்னதை எல்லாருக்கும் எடுத்தும் சொல்லலாம்’’ என்றது குப்பைத் தொட்டி.
“கட்டாயம் நீ சொன்னதை நான் செய்வேன்! நீ கவலைப்படாதே!’’ என்றான் நிகரன். குப்பைத் தொட்டியை ஒட்டி இருந்த மதில் சுவருக்கு பின்னால் இருந்து கைதட்டியபடி வெளியே வந்தார் நிகரனின் அப்பா.
“அப்பா காலையில நடைப்பயிற்சிக்கு வந்த நீங்கதான் மதில் சுவத்துக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு குப்பைத் தொட்டி மாதிரி பேசுறிங்கன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டேன். ஆனாலும், நீங்க சொன்ன தகவல் என்னை மாதிரி குழந்தைகளுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும் முக்கியமானதாச் சேன்னு கேட்டுக்கிட்டு இருந்தேன்.”
“குப்பைத் தொட்டி பேசாதுன்னு தெரியும்! ஆனா, குப்பைத் தொட்டிக்குப் பேசும் திறமை இருந்தா இதத்தானே பேசும்!”
“அப்பா! நீங்க சொன்ன தகவலையெல்லாம் என் நண்பர்களுக்குச் சொல்லுவேன்” என்றான் நிகரன். மகனை கட்டியணைத்து முத்தம் தந்தார் அப்பா.
திடக்கழிவு மேலாண்மையைப் பற்றி, தான் தெரிந்து கொண்டதை நண்பர்களுக்குச் சொல்ல நிகரன் கிளம்பிவிட்டான்.
பிஞ்சுகளே நீங்கள்?