எது சுதந்திரம்
சுதந்திரம் என்றால் என்ன?
சுந்தரி தாயைக் கேட்டாள்;
எதனையும் அறிவால் ஆய்ந்து
ஏற்குமுன் பகுத்த றிந்து
விதவித கல்வி கற்று
விண்ணுயர் புகழும் பெற்று
நிதமுமே வாழ்வு யர்த்தும்
நெறியதே சுதந்தி ரம்தான்!
பெண்களின் கல்வி ஞானம்
பெரிதென ஓங்க வேண்டும்;
கண்களாய் இருபாலரென்றே
கருத்தினில் கொள்ளல் வேண்டும்;
மண்ணிலே வன்மு றைகள்
மறைந்திட வேண்டும்; வேண்டும்;
நண்ணிடும் மனித நேயம்
நலம்பெறின், சுதந்தி ரம்தான்!
சனங்களில் ஏழை செல்வன்
சரிநிகர் என்றே யாகி
இனமத சாதி யின்றி
இருப்பது சுதந்தி ரம்தான்;
மனப்பகை நீங்கி அன்பு
மலர்தலே சுதந்திரம்தான்;
எனச்சுதந் திரத்தைப் பற்றி
ஏற்றவா றுரைத்தாள் அன்னை!
– கே.பி.பத்மநாபன்.
சிங்காநல்லூர், கோவை