தேர்வுக்கான டிப்ஸ்
அய்யய்யோ…. இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்-களான்னு நினைச்சு பக்கத்தை மாத்திடாதிங்க!
இதுவும் உங்கள் பள்ளித் தேர்வை எதிர்கொள்வதற்கான சில அக்கறையான குறிப்புகள் தான். படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்
1. உங்கள் வழக்கத்துக்கு மாறாக மிகவும் விரைவாக அதிகாலை எழுந்து படிக்க வேண்டும் என்று முடிவு செய்யாதீர்கள். அப்புறம் முழுமையாகப் படிக்கவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தேர்வு அறையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டிருக்க வேண்டி-யிருக்கும். முடிந்தவரை காலையில் விரைவாக எழுங்கள், போதும். உற்சாகமாக இருக்கும்.
2. அய்யய்யோ… இதைப் படிக்கவில்லையே என்று புதிதாக எதையும் மனனம் செய்யத் தொடங்காதீர்கள். ஏற்கெனவே படித்திருக்கும் முக்கியமான பாடங்களை மீண்டும் ஒரு முறை புரட்டிப் பாருங்கள்.
3. தேர்வுகள் எல்லாம் நாம் படித்தவற்றைப் புரிந்து வைத்திருக்கிறோமா என்பதை அளவிடுவதற்குத் தானே தவிர, நம் வாழ்க்கையை முடிவு செய்பவை அல்ல. புரிந்ததை, தெரிந்ததை வெளிப்படுத்துங்கள். போதும்!
4. தேர்வில் சரியாக செய்யவில்லை என்பதால் மனதைக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. ஒரு தேர்வில் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. வாழ்க்கை பெரியது. உலகம் மிகப்பெரியது. வாழ்வில் மகிழ ஏராளம் உண்டு. தேர்வு, மதிப்பெண் எல்லாம் நம்மை செழுமைப்-படுத்தவே தவிர, மூழ்கடிக்க அல்ல.
அப்புறம்… உள்ளே கதைகளும், புதிர்களும் இருக்கின்றன. பாடம் படித்து போர் அடிக்கும்போது பெரியார் பிஞ்சைப் புரட்டி அவற்றையெல்லாம் படித்து முடித்துவிடுங்கள். அடுத்த இதழில் இருந்து இன்னும் பல புதுமைகள் இருக்கின்றன. அப்புறம் இதைப் படிக்க நேரமிருக்காது.
வாழ்த்துகள்!