இதுவும் கடந்து போகும்
இது ஒரு நிமிடக் கதை. என்னைக் கவர்ந்த ஒரு கதை இது. சரி, அப்படி என்ன கதை? வாங்க இப்போ படிக்கலாம்… 20ஆம் நூற்றாண்டைவிட 21ஆம் நூற்றாண்டின் கதையாக இதைப் படிப்போமா?
ஒரு ஊரில் தனியார்ப் பள்ளி ஒன்று இருந்தது. அப்பள்ளி எப்போதும்போல் இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது. அப்போது அதனைக் கொண்டாடும் விதமாக அப்பள்ளியின் துணை முதல்வர், அப்பள்ளியின் தாளாளருக்கு ஒரு நினைவுப் பரிசளித்தார். மகிழ்ச்சியில் இருந்த தாளாளர் அப் பரிசைக் கண்டதும், துணை முதல்வர் அவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினார். அப்படி என்ன இருந்தது அந்த பரிசில்?
நாட்கள் உருண்டோடின. 10ஆம் வகுப்புத் தேர்வில் இம்முறை அப் பள்ளி முதலிடம் பிடிக்கவில்லை. தாளாளர் மிகுந்த துக்கத்தில் இருந்தார். அப்போது துணை முதல்வரின் பரிசைக் கண்டு புத்துணர்வைப் பெற்றார். அப் பள்ளியின் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, இலக்கை நோக்கிப் பயணித்தார். அனைவரின் உறுதுணையால் 2016ஆம் வருடத்தின் 10ஆம் வகுப்பு தேர்வில் மீண்டும் முதலிடம் பிடித்தது அப் பள்ளி.
இப்போது அனைவரின் கேள்வி, அப்படி என்ன இருந்தது அப் பரிசில் என்பது. அதன் விடை, “இதுவும் கடந்து போகும்’’. இதை நம் மனதில் வைத்துக்கொண்டு வாழ்க்கை எனும் பயணத்தை மேற்கொள்வோம்.
– எஸ்.எம்.அபிநயா,
வேதவல்லி வித்யாலயா, வாலாசா