வால்மிளகு ராஜா
பக்கத்து நாட்டு ராஜா கேட்டார் என்பதற்காக நல்லெண்ண அடிப்படையில் தமது படைகளை உதவிக்காக அனுப்பினான் வால்மிளகு ராஜா. அந்த நேரம் பார்த்து எதிரி நாட்டு பூனைசேனன் வால்மிளகு ராஜாவை அமுக்கிப் பிடித்துவிடலாம் என்று தனது மிகப் பெரிய சேனையுடன் கிளம்பிவிட்டான். நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அக்கரைக்கும்
இக்கரைக்குமாக ஒரு பாலம் அமைத்தால்தான் உள்ளே செல்ல முடியும் என்று உணர்ந்த பூனைசேனன் அதற்கான பணிகளில் இறங்கினான். வால்மிளகு ராஜாவுக்குத் தகவல் எட்டியது.
கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த வால்மிளகு ராஜா திடுக்கிட்டு எழுந்தான். மந்திரியை அழைத்தான். “நமது சேனைகள் எப்போது திரும்பும்? பூனைசேனன் புலிபோல நம்மீது பாயப் புறப்பட்டு விட்டான்” என்று அவர் மீது பாய்ந்தான். “உதவிக்குப் போன படை திரும்புவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்” என்றார் மந்திரி. “அதுவரை பூனைசேனன் நம் மீதுப் பாயாமல் இருக்க ஏதாவது உபாயம் செய்தாக வேண்டும்” என்றும் கூறினார்.
“அபாயம் வந்துவிட்டது. இந்த நேரத்தில் உபாயமாவது… பெருங்காயமாவது.. வேறு நல்ல யோசனையாகக் கூறுங்கள்!”
“மூளையை எப்படிக் கசக்கினாலும், எந்தக் கோணத்தில் கசக்கினாலும் எத்தனை நேரம் கசக்கினாலும் ஒரே ஒரு யோசனைதான் எட்டிப் பார்க்கிறது மகாராஜா.”
“அது என்ன யோசனை? சொல்லித் தொலையும்… ஜவ்வு மிட்டாய் போல ஏன் இத்தனை இழுக்கிறீர்?”
“இதைத் தவிர வேறு வழி இல்லை” என்று சொல்லியபடி மகாமந்திரி தன் தலையிலே கட்டியிருந்த வெள்ளை வெளேர் முண்டாசை அவிழ்த்து கொடிபோல அதனை அப்படியும், இப்படியும் ஆட்டினார். வால்மிளகு ராஜாவுக்குக் கோபம் கொப்பளித்தது.
“இப்படிச் சொல்ல உமக்கு வெட்கமாக இல்லை? சமாதானமாம் சமாதானம். பண்புள்ளவனிடம் சமாதானமாகப் போனால் அர்த்தம் உண்டு. அவனோ பேராசைக்காரன். அவனிடம் போய் மண்டியிடுவதா? மன்னிப்பு கேட்பதா? முடியாது… முடியவே முடியாது. எப்படியும் பாலம் கட்டி முடிக்க ஓரிரு நாட்கள் ஆகும். அதற்குப் பிறகு நம்மை அடைய சில மணி நேரங்கள் பிடிக்கும். அதற்குள் நிலைமையை எப்படியேனும் முறியடிக்க வேண்டும்” என்றான் வால்மிளகு ராஜா.
அந்த நேரம் பார்த்து “தாத்தா தாத்தா! உங்களை அரண்மனையில் ஒரு பாட்டி அழைக்கிறாள்” என்று ராஜாவின் பேரன் வந்து அழைத்தான். அவன் கையில் ஒரு வெள்ளிக் கிண்ணம். அதில் நிறைய சீடைகள். எடுத்து எடுத்து வாயில் போட்டுக் கடகடவென்று கடித்தான். சட்டெனத் திரும்பிய மகாமந்திரி அவன்மீது மோத, கையிலிருந்த வெள்ளிக் கிண்ணம் கீழே விழுந்து சீடைகள் மூலைக்கொன்றாகக் கால்முளைத்து ஓடின. சீடைகள் சிலவற்றை ஓடிப்பிடித்த மகாமந்திரி, கிடைத்ததை ராஜா பார்க்காதபடி வாயில் போட்டுக்கொண்டு ஓடினார். “ஆஹா என்ன ருசி.. என்ன ருசி” என்று தனக்குத்தானே கூறியபடி. தற்செயலாக இதைப் பார்த்துவிட்ட மகாராஜா தலையிலே அடித்துக்கொண்டார். “நல்ல மந்திரி எனக்கென்று வாய்த்தானே” என்று.
ராஜாவின் பேரன் ‘ஓ’வென்று பெருங்குரல் எடுத்து அழுதான். கீழே விழுந்து விழுந்து புரண்டான். “என் சீடை வேண்டும். என் சீடை வேண்டும். எனக்குச் சீடை வேண்டும்” என்று ஆர்ப்பாட்டம் செய்தான். எவ்வளவுச் சமாதானப் படுத்தியும் அவன் அடங்கவில்லை. இடம் கொள்ளாது அரண்மனையே அலறியது.
“டேய்… டேய்… நிலைமையைப் புரிஞ்சுக்கோடா… இந்த நேரம் பார்த்து சீடை கேட்டு சேட்டை செய்றியே” என்று வால்மிளகு ராஜா அழாத குறையாகக் கெஞ்சினார் பேரனிடம்.
ஊஹும்… அவன் கேட்ட பாடில்லை. மடப் பள்ளியில் இருந்தவர்கள் எட்டிப் பார்த்து நிலைமையைப் புரிந்துகொண்டனர். சீடை கிடைக்காவிட்டால் கோடை இடிதான் என்று அவர்கள் மாவாட்டக் கிளம்பி விட்டார்கள். கொஞ்ச நேரத்தில் பதமாக மாவு தயார். எண்ணெய் தயார். தீ மூட்டப்பட்டது. நாலைந்து அண்டாக்கள் நிறைய மாவரைக்கப்பட்டு விட்டது. சீடை என்றால் பேரனுக்கு மட்டுமில்லாமல் மகாராணிக்கும் உயிர். மகாராஜாவின் மாமியாருக்கும் உயிர். அவளுக்கும் மூட்டை கட்டிக் கொடுத்தனுப்ப வேண்டும்.
தலைமைச் சமையல்காரர் வந்தார். மாவு பதந்தானா என்று வேவு பார்த்தார். “வெள்ளை எள்ளை நெய்யில் வறுத்துக் கொஞ்சம் போலத் தூவுங்கள்” என்றவர், “இன்னும் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக உருட்டி உருட்டிப் பிசையுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போனார். சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்தார். மாவு சிறுசிறு கோலி உருண்டைகளைப் போலப் பெரியப் பெரியத் தட்டுகளில் உருட்டி வைக்கப்பட்டிருந்தன.
“ஒன்றை மட்டும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். துருப்பிடிக்காத ஒரு குண்டூசியினால் ஒவ்வொரு உண்டையிலும் மறக்காமல் குத்திவிடுங்கள். ஞாபகம் இருக்கட்டும்” என்று சொல்லிவிட்டு அவர் நடந்தார்.
அதற்குள் அலைகடலைப் போல ஒரே பேரிரைச்சல். பூனைசேனன் நெருங்கிவிட்டான். பெரிய பெரிய கோட்டைக் கதவுகளையெல்லாம் யானைகளைக் கொண்டு இடிஇடி என்று இடித்துத் திறக்கச் செய்தான். வால்மிளகு ராஜா செய்வதறியாது திகைத்தார்.
திடீரென்று ஒரே வெடிச்சத்தம். வேட்டுச் சத்தம். உடனுக்குடன் மரப்பாலம் கட்டி தான் ஆற்றைக் கடந்து வந்தது இவனுக்கு எப்படித் தெரியும்? என்று பூனைசேனன் வியந்தான்.
சாளரத்தின் வழியாக குண்டுகள் கல்போல வந்து வந்து விழுந்தன. குபீர் குபீர் என்று ஒரே சத்தம். சடாலென்று திரும்பிய பூனைசேனன். “ஓடுங்கள், ஓடுங்கள்’’ என்று தன் படைகளுக்கு உத்தரவிட்டான். கூக்குரலிட்டான். நாம் மோசம் போய்விட்டோம் என்று அலறி அலறித் துடித்தான். சேனைகள் பின்னோக்கி ஓடின. அவன் புறமுதுகு காட்டி முன்னே ஓடினான். வால்மிளகு ராஜாவுக்கு எதுவும் புரியவில்லை. சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. பூனைசேனன் பின்னங்கால்கள் பிடறியில் பட ஓடிக்கொண்டே யிருந்தான்.
மடப் பள்ளியில் இருந்து தலைமைச் சமையல்காரர் ஓடோடி வந்தார். “மகாராஜா! நான் அப்போதே சொன்னேன். சீடை உருண்டையில் ஊசி கொண்டு குத்திய பின் கொதிக்கின்ற எண்ணெயில் போடுங்கள் என்று. தங்களுடைய பேரன்தான் அதெல்லாம் முடியாது. எனக்கு உடனே வேண்டும் என்று தாம்பாளம் தாம்பாளமாக எடுத்து உருண்டைகளை அப்படியே கொதி எண்ணெயில் கொட்டிவிட்டார். அதனால்தான் சத்தம் காதைப் பிளக்கிறது. வெடிகுண்டுபோல சீடைகள் ஒவ்வொன்றும் சீறிக்கொண்டு வெடிக்கின்றன” என்று அடக்கமாகக் கூறினார்.
வால்மிளகு ராஜாவுக்கு அப்போதுதான் ஒன்று நினைவிற்கு வந்தது. பூனைசேனன் என்னதான் வீரனாக இருந்தாலும் வெடியென்றால் வெலவெலத்துப் போவான். ஊசி வெடிக்கேகூட அவன் உடம்பு உதறல் எடுத்துவிடும் என்பது. உடனே பேரனைக் கூப்பிட்டான். அவனைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு ஒரு கைப்பிடிச் சீடையை எடுத்து அவன் வாயில் கொட்டிய வால்மிளகு ராஜா இடிஇடியென்று சிரித்தான் “சீடையால் நாட்டுக்கு வந்த பீடை தொலைந்தது” என்று.
– கலவை சண்முகம்