நம் தமிழ்!
இயலும் இசையும் நாடகமும்
இணைந்த மொழியே முத்தமிழாம்;
நயமும் சுவையும் நடையழகும்
நாவில் பெருக்கும் நற்றமிழாம்.
தேனும் பாலும் கலந்திட்ட
தித்திப் பான தீந்தமிழாம்;
மானும் மயிலும் சேர்ந்தாற்போல்
மனதை மயக்கும் மாத்தமிழாம்.
வாக்கில் இனிமை நிறைந்திட்ட
வாய்மை நிறைந்த வண்டமிழாம்;
சீக்கி ரத்தில் கற்பதற்குச்
சிறந்த எளிய செந்தமிழாம்.
அவ்வை கபிலர் இளங்கோவும்
அனுப வித்த அருந்தமிழாம்;
இவ்வை யத்தில் யாவருக்கும்
ஏற்ற மொழியே இன்தமிழாம்.
தந்தை தாயைப் போல்நம்மைத்
தாங்கும் பாசத் தண்டமிழாம்;
நந்த வனத்தின் தென்றல்போல்
நம்மை வருடும் நந்தமிழாம்.
பூவின் வாசம் போல்மணக்கும்
புகழைக் கொண்ட பூந்தமிழாம்;
ஆவின் கன்றும் ‘அம்மா’வை
அழைக்கும் உயர்ந்த எம்தமிழாம்!
– கே.பி.பத்மநாபன்
சிங்கநல்லூர், கோவை