மேலங்கி
-விழியன்
காட்டை ஒட்டிய ஒரு கிராமத்தில், ஒரு குடியானவர் தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய வேலை தினமும் காட்டிற்குள் சென்று முறிந்த மரங்களின் கிளைகளை வெட்டி அதனை விறகாக ஊருக்குள் கொண்டுவருவது. சந்தையில் அதனை விற்றுவிட்டு வீட்டிற்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கனிகள் ஆகிய மளிகைப் பொருட்களை வாங்கி வருவார். கிடைக்கும் காசு, கைக்கும் வாய்க்கும் சரியாக இருந்தது. ஒரு நாள் காட்டிற்குள் போகவில்லை என்றாலும் உணவிற்குச் சிரமம் தான்.
அது பெரிய காடு. கொஞ்சம் உள்ளே சென்றால் மட்டுமே காட்டு விலங்குகள் இருக்கும். குடியானவருக்கு அதன் எல்லைகள் தெரியும். மேலும் சத்தம் மற்றும் வாசனையை வைத்தே மிருகம் ஏதேனும் வருகின்றதா எனக் கண்டுபிடித்து விடுவார். விலங்குகளைச் சீண்டவில்லை என்றால் அதுவும் சீண்டாது. இப்படியாகத் தினம் தினம் காட்டிற்குள் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடத்தி வந்தார்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக மழை. குடியானவர் வீட்டினை விட்டு வெளியே போகமுடியவில்லை. சேமித்து வைத்த உணவுப்பொருட்களால் கொஞ்சம் காலம் தள்ளினார்கள். சுத்தமாக எல்லாம் தீர்ந்துவிட்டது. காட்டிற்குள் சென்று ஏதாவது எடுத்து வருவது என முடிவுடன் கிளம்பினார். அவர் கிளம்பும்போது தன் இரண்டு மகள்களும் அவருக்கு ஒரு கதகதப்பான மேல் அங்கியினை கொடுத்தார்கள். தாங்கள் இருவரும் தங்கள் கைகளால் அதனை நெய்தனர் என்றனர். குளிருக்கும் இதமாக இருந்தது. தூறல் நின்று இருந்ததால் வேகமாக காட்டிற்குள் சென்றார்.
ஆனால் காட்டில் மரங்கள் முறிந்து இருந்தாலும் அவை நன்றாக நனைந்து இருந்தன. அவற்றை விறகாக்க முடியாது. விலங்குகள் இருக்கும் எல்லையையும் கடந்து சென்றார். எதுவும் கிடைக்கவில்லை. பசிக்கு எடுத்து வந்த உணவினை ஒரு மரப் பொந்திற்குள் அமர்ந்து உண்ண ஆரம்பித்தார். அந்த மரப் பொந்திற்குள் யாரும் இல்லை என நினைத்தார். ஆனால் உள்ளே ஒரு கரடி இருந்தது. பயப்படாமல் அதற்குப் பாதி உணவினைக் கொடுத்தார். “என்ன குடியானவரே விறகு எதுவும் கிடைக்கவில்லையா?” என்று எல்லாம் தெரிந்தது போலக் கரடி கேட்டது. தன் கதையினைக் கூறினார். “சரி நான் உங்களுக்கு ஒரு உதவி செய்கின்றேன், பதிலுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டது. “என்னிடம் கொடுக்க இருப்பது என் மகள்கள் கொடுத்து அனுப்பிய இந்த மேல் அங்கி மட்டுமே” என்று அதைக் கொடுத்தார்.
கரடி ஒரு மரத்தில் ஏறி சிறப்பான ஒரு தேனடையைக் கொண்டு வந்து கொடுத்தது. அது மற்ற தேனைவிடக் கூடுதல் சுவையாக இருக்கும். சந்தையில் நல்ல விலை போகும். மகிழ்வாக குடியானவர் வீடு நோக்கி நடந்தார். வீட்டில் நடந்ததைக் கூறி, காலையில் தேனடையில் இருந்து தேனைப் பிழிந்து விற்க வேண்டும் என சொல்லியபடி உறங்கினார். மகள்களுக்கு தேன் கிடைத்தது மகிழ்ச்சிதான் என்றாலும் தன் தந்தைக்குக் கொடுத்த மேல் அங்கி பறிபோனது பற்றிக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
காலையில் குடியானவனின் மனைவி கதவைத் திறந்ததும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வாசலில் அவருடைய மேலங்கியும் ஒரு கடிதமும் இருந்தது. “அய்யா, நான் உங்களுக்குத் தேனடையைக் கொடுத்த கரடி. உங்கள் மேலங்கியுடன் வீட்டிற்குச் சென்று நடந்ததை மகனிடம் கூறினேன். அவன் என்னை கண்டபடி திட்டிவிட்டான். அவருடைய மகள்கள் எவ்வளவு ஆசையாக ஆடையைத் தயாரித்து இருப்பார்கள், அதைப்போய் வாங்கி வந்துவிட்டாயே. மேலும் உதவி செய்தால் பிரதி பலன் எதிர்பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டான், அதனால் உங்கள் மேலங்கியை இங்கேயே வைத்துவிடுகின்றேன். நன்றி!” என்று அந்தக் கடிதத்தில் எழுதி இருந்தது.
உண்மையில் அந்தத் தேன் மற்ற தேன்களை விடப் 10 மடங்கு சுவையானதாகவும் நிறைய மருத்துவக் குணம் வாய்ந்ததாகவும் இருந்தது. ஒரே தேனடையில் கணிசமானத் தொகை கிடைத்தது. அதனையே முதலாகக் கொண்டு சின்னதாக வியாபாரம் துவங்கினார் குடியானவர். அதன் பின்னர் காட்டிற்குப் போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அடுத்த மழைக்காலமும் வந்தது. ஆனால் இந்தச் சமயம் வீட்டில் போதுமான வசதி இருந்தது.
இரண்டு மகள்களும், “அந்தக் கரடியுடன் நடந்த சம்பவத்தினை மறக்கவே இல்லை. கரடியின் உயரம், உருவம், எங்கே சந்தித்தீர்கள்’’ என ஆண்டு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தார்கள். கேட்டதோடு மட்டும் அல்லாமல் அந்த உருவத்திற்கு ஒரு மேலங்கியினைத் தயார் செய்தார்கள். தாங்கள் இருவரும் காட்டிற்குள் சென்று அந்த மரப்பொந்தின் அருகே காத்திருந்தார்கள். அந்தக் கரடியும் வந்தது. ஆனால் அதற்கு வயதாகிவிட்டு இருந்தது. தாங்கள் அந்தக் குடியானவரின் மகள்கள் என அறிமுகம் செய்துகொண்டார்கள். “வீட்டிற்கு வாருங்கள் குழந்தைகளே” என்று கரடி அழைத்தது. “இந்த அன்புப் பரிசினை ஏற்றுக்கொண்டால் போதும். நாங்களே உங்களுக்கு ஆடை செய்தோம்” என அந்த அங்கியினைக் கொடுத்தார்கள். கரடிக்கு கச்சிதமாக பொருந்தியது. உள்ளுக்குள் மகன் திட்டுவானோ என்றும் இருந்தது. ஒரு துண்டு காகிதத்தில் “அண்ணா, தங்கைகளின் அன்புப் பரிசினை ஏற்றுக்கொள்ளுங்கள்” என கரடியின் மகனுக்கு கடிதம் கொடுத்தார்கள்.
வீடு நோக்கி புறப்படவும் கரடியின் மகன் அங்கே வரவும் சரியாக இருந்தது. விஷயம் எல்லாம் கேட்டறிந்த கரடி மகன் மகிழ்ந்தது. “சகோதரிகளே, காட்டிற்குள் இப்படி தனியாக வருவது ஆபத்தானது. உங்கள் அப்பாவிற்கு ஆபத்து எங்கே இருக்கு எனத் தெரியும், நீங்கள் குழந்தைகள். சரி வாருங்கள் எல்லை வரை உங்களைக் கொண்டு சேர்க்கின்றேன்” என அவர்களுடன் நடந்தது.
காட்டின் எல்லை வரை கதைகள் பேசி வந்தார்கள். கரடியின் பள்ளிக்கதைகளை சொல்லிச் சிரித்துச் சிரித்து மகள்களுக்கு வயிறே வெடிப்பது போல இருந்தது. எல்லை வந்தது. “அதோ அந்த மரத்தின் மேல் ஏறி நீங்கள் ஊருக்குள் செல்வதை பார்க்கின்றேன்” எனக் கையசைத்து விடை கொடுத்தது.
காட்டில் நடந்த சம்பவத்தினைத் தன் நண்பர்களுக்குச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.<
குறிப்பு: குடியானவர்னா விவசாயின்னு பொருள்… கொஞ்சம் பழைய வார்த்தை. அவ்வளவுதான்!