பேசாதன பேசினால் – 7
தேனீயின் சேவை
மனிதர்க்குத் தேவை
– மு.கலைவாணன்
பூங்கோதை அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகள் இணைந்து நடத்தும் அறிவியல் கண்காட்சி இன்னும் ஓரிரு நாளில் நடைபெற இருக்கிறது. அதில் பல போட்டிகள் நடைபெறும். அதில் பூங்கோதை படிக்கும் அரசுப் பள்ளியும் பங்கேற்க உள்ளது.
எட்டாம் வகுப்பு அறிவியல் கற்பிக்கும் ஆசிரியை அறிவுச்செல்வி அக் கண்காட்சியில் புதுமையாக ஏதாவது செய்து தம் பள்ளி, பரிசு பெறவேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டார். அதற்கு கெட்டிக்காரச் சுட்டிப் பெண்ணான பூங்கோதையைத் தேர்வு செய்து தனியே அழைத்துச் சென்று கண்காட்சியில் நடைபெறும் மாறுவேடப் போட்டியில் நீதான் பங்கேற்க வேண்டும் எனச் சொல்லி பயிற்சியும் அளித்தார்.
ஆசிரியை அறிவுச்செல்வி சொல்லிக் கொடுத்ததைக் கவனமாகக் கேட்டுப் புரிந்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானாள் பூங்கோதை.
போட்டி நடைபெறும் அன்று வரை, அறிவியல் கண்காட்சியில் ஆசிரியை அறிவுச்செல்வியும், மாணவி பூங்கோதையும் என்ன செய்யப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாமல்… புரியாத புதிராகவே இருந்தது.
போட்டி நாள் வந்தது… பூங்கோதையின் அம்மா, அப்பா பல பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்கள் ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கில் கூடி இருந்தனர்.
மாறுவேடப் போட்டி தொடங்கியது. பல மாணவ, மாணவிகள் அறிவியல் அறிஞர்கள் போல் வேடம் போட்டு வந்து தம் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசிவிட்டுப் போனார்கள்.
பூங்கோதை படிக்கும் பள்ளியின் பெயர் அறிவிக்கப்பட்டது. எல்லோரும் மேடையைப் பார்த்தபடி என்ன நடக்கப் போகிறது என ஆவலோடு காத்திருந்தனர்.
மேடையின் ஒரு பக்கத்திலிருந்து பெரிய தேனீ ஒன்று மெல்லச் சிறகடித்துப் பறந்து வந்தது. மேடையின் நடுவில் நின்று பேசத் தொடங்கியது.
“எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாத இயற்கை உணவான தேனைத் தரும் தேனீ நான்தான்.
நான் உலகத்தில் மிக சுவாரசியமான நுணுக்கமான உயிரினம்… ரொம்ப ரொம்ப சின்ன அளவிலே இருக்கிற தேனீயான நான்தான் உலகத்தில் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர்.
தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள் போன்ற ஊட்டச்சத்து மிக்க பல பழவகைகள், காபி, ஏலக்காய், பருத்தி போன்ற பணப் பயிர்கள், உணவு தானியங்கள் என பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பதே தேனீக்களான நாங்கதான். உலகின் 80 விழுக்காடு உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கு நாங்கதான் காரணம்.
தேனீக்களான நாங்க, ஒருத்தரோட ஒருத்தர் தகவல் பரிமாறிக் கொள்ளும் முறை இருக்கே இன்னைக்கு இருக்கிற ஸ்கைப், வாட்ஸ் அப் முறைகளை விடத் துல்லியமானது.
யானைகளுக்கு, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம்னு சொல்லுவிங்க. அதைவிடவும் கூர்மையான ஞாபக சக்தி தேனீக்களான எங்களுக்கு உண்டு.
இதுமாதிரி பல ஆச்சரியங்கள் இந்தக் குட்டித் தேனீ உடம்புல இருக்கு. ஆனா அதிர்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி என்னன்னா… இப்போ அழிஞ்சு வர்ற உயிரினங்கள் பட்டியல்ல.. நாங்க இருக்கோம். ஆமா… இது உலகத்தையே உலுக்கும் செய்தி.
ஒட்டுமொத்த மக்கள் தொகையாலே இந்த உலகத்துக்கு ஏற்படாத நன்மை ஒரே ஒரு தேனீயாலே ஏற்படும்.
அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போர்த்துது.
எங்களோட வாழ்க்கை முறையை தெரிஞ்சுக்கிட்டாதான் அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்பட்ட நன்மையை உண்டாக்குதுன்னு புரியும்.
உலகத்தில் அஞ்சுவகை தேனீக்கள் இருக்கு. மலைத்தேனீ, இந்தியத்தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.
இதுல இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீயைத்தான் மனிதர்களாகிய நீங்க வளர்க்குறிங்க. மத்ததெல்லாம் தானாவே காட்டுல வளரும்.
ஒரு குடும்பத்திலே ஒரு ராணித்தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரக்கணக்கான பணித் தேனீக்கள் அதாவது பெண் தேனீக்கள் இருப்போம்.
இதில ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீயான பெண் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு 2 ஆண்டுகளும் ஆயுள் காலம்.
ராணித் தேனீக்கு முட்டையிடுகிறது மட்டுந்தான் வேலை.
ஆண் தேனீக்கு ராணியோடு புணர்வதும், தேன் கூட்டைப் பாதுகாப்பதும்தான் கடமை. மற்ற எல்லா வேலைகளுக்கும் பணித் தேனீக்கள்தான் பொறுப்பு.
உணவுச் சேகரிப்பு, தேன் கூடுகட்டுறது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாக பராமரிக்கிறதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கணும்.
அதாவது உங்க வீட்டுல எப்படி பெண்கள் உணவு தயாரிக்கிறது. துணி துவைக்கிறது, வீட்டை சுத்தமா வச்சுக்கிறதுன்னு செய்து சிறப்பா கவனிச்சுக்கிறாங்களோ அது மாதிரி.
தேனீக்களான எங்களோட பொறியியல் அறிவு அபாரமானது.
நாங்க எங்க கூட்டை அறுங்கோண வடிவத்துலதான் கட்டுவோம். ஏன்னா அப்பதான் ஒரு சென்ட்டி மீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசா பயன்படுத்திக்க முடியும். ஆண் தேனீக்களுக்கு பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்திலே கூடு கட்டிட்டு ராணித் தேனீக்கு மட்டும் சிலிண்டர் வடிவத்திலே செல் கட்டுவோம்.
கூட்டோட கட்டுமானம் திருப்தியா இருந்தா மட்டுந்தான் ராணித்தேனீ அதுல முட்டையிடும்.
பூக்களின் மகரந்தம், மதுரம் ரெண்டுந்தான் எங்களோட உணவு.
அப்போதைய பசிக்கு அப்பப்பவே சாப்பிட்டிடுவோம்.
அப்பறம் ஏன் தேன் சேகரிக்கிறோம்னு கேக்குறிங்களா? சொல்றேன்.
குளிர்காலத்திலே, தாவரங்கள் பூக்காத காலத்திலே உணவுத் தட்டுப்பாடு வந்தால் அதைச் சமாளிக்கத்தான் தேனைச் சேர்த்து வைக்கிறோம்.
நாங்க தேனைச் சேகரிச்சுப் பதப்படுத்துற முறைதான் உலகத்தின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில் நுட்பம்னு சொல்றாங்க.
தேனைத் தேடிப் போற பணித் தேனீக்கள் பூக்களோட மதுரத்தை உறிஞ்சி தன் உடம்புல இருக்கிற தேன் பையிலே சேகரிச்சுக்கும்.
அந்த மதுரம் முழுசும் செரிக்காம எங்க வயித்தில இருக்கிற நொதிகளோட சேர்ந்து திரவமா மாறிடும்.
கூட்டுக்குத் திரும்பி வந்து கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்கள் கிட்ட அந்த திரவத்தை ஒப்படைப்போம். அதுக்காக ஏப்பம் விட்டு ஏப்பம் விட்டு திரவத்தை வெளியிலே கொண்டு வந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டுவோம்.
ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினாதான் ஒரு துளி தேன் சேரும்.
கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தை கூட்டின் ஒரு ஓரத்திலே இருக்கும் தேனடையிலேல கக்கி அதில இன்வர்டோஸ்ங்கிற நொதியை சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில இருந்து நீர்த்தன்மை வத்திப்போறதுக்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்குவோம்.,
அப்புறம் தேனைப் பாதுகாக்க ஒரு வகையான மெழுகைப் பூசி வைப்போம்.
இத்தனைக்குப் பிறகுதான் நீங்க சுவைக்கிற தேன் உருவாகுது.
தேன் எடுக்கிறவங்க கொஞ்சம் தேனை தேனீக்களுக்குன்னு கூட்டில விட்டுட்டுத்தான் எடுப்பாங்க. அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்.
இந்த வேலை நடக்கும்போது ராணித்தேனீ அதை வேடிக்கை மட்டும் பார்க்கும்.
இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதுக்கு வேலை வரும். அந்த சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்குதோ, அது கூடத்தான் இணை சேரும் ராணி.
புணர்ச்சி முடிஞ்சதும் ஆண் தேனீ இறந்துடும். அதுக்குப் பிறகு ராணி தேனீ முட்டையிடும். அந்த முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக இருந்து வளர்க்கும்.
தேன் சேகரிப்பதற்கானத் தகவல்களை நாங்க பகிர்ந்துக்கிற முறை அட்டகாசமானது.
உணவுத் தேவை ஏற்படும் போது “ஸ்கவுட்” ஆக சில தேனீக்கள் முன்னே போயி பூக்கள் இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சிட்டு கூட்டுக்கு திரும்பும்.
கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள் தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் இருக்கு என்பதை நடனம் ஆடி தெரிவிக்கும்.
இதுல வட்ட நடனம், வாலாட்டு நடனம்னு இரண்டு வித நடனம் இருக்கு. வட்ட நடனத்தில வட்டம் போட்டு வட்டம் போட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
வாலாட்டு நடனத்திலே உயரப் பறந்து வாலை ஆட்டுனா.. சூரியன் இருக்கும் அதே திசையில் தோட்டம் இருக்குன்னு அர்த்தம். வாலை வேகமா ஆட்டுனா.. சோலை… பக்கத்திலேயே இருக்குன்னு அர்த்தம். மெதுவா ஆட்டுனா தூரத்திலே இருக்குன்னு அர்த்தம்.,
சூரியன், சோலையின் திசை, கூட்டின் இருப்பிடம் இந்த மூன்றையும் தொடர்புபடுத்தித்தான் நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடிச்சவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்க்கு நோபல் பரிசு கொடுத்தாங்க.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிருக்கிற பூக்களின் மகரந்தம் அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது விதவிதமான கூட்டணியுடன் பரவும்.
இதுதான் காடுகளின் சோலைகளின் பரவலுக்குக் காரணம்.
தேனீக்களாகிய நாங்க இருக்கிற இடத்திலே இயற்கையாவே அடர்ந்த காடுகள் உருவாயிடும்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிஞ்சு போச்சு. இப்ப தேனீக்களின் அழிவு 42 விழுக்காடு அதிகரிச்சிருக்கு.
இன்னும் இந்தியாவிலே அந்த அளவுக்கு பெரிய அபாயம் ஏற்படல. ஆனா, கூடிய சீக்கிரம் அந்த நிலைமை வரலாம்.
இதுக்கு முக்கியக் காரணம் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப் பொருள் தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அதோட நினைவை மழுங்கடிச்சுடும்.
இதனாலே கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்து போய் பறந்து போய் அலைஞ்சு திரிஞ்சு அந்தத் தேனீ இறந்திடும்.
மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனிக்களுக்கு செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி ஒரு கட்டத்தில் தேனீக்களை சாகடிக்கவே செய்யுது.
இப்படி விவசாயத்தில வணிக லாபத்துக்காக மனிதன் செய்யுற பல மாற்றங்கள் தேனீக்களாகிய எங்களை அழிக்குது.
தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்து விட்டால் மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்று சொல்லி இருக்கிறார் அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். அதை உங்களுக்கு நினைவு படுத்திட்டு நான் புறப்படுறேன். எனக்கு நிறைய வேலையிருக்கு மனிதர்களாகிய உங்களை காப்பாத்திக்க தேனீக்களாகிய எங்களை காப்பாத்துங்க” என்று கூறியபடி மேடையை விட்டு பறந்து சென்றது தேனீ!
அறிவியல் கண்காட்சியைக் காண வந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டிப் பாராட்டினார்கள்.
தேனீயாக நடித்த பூங்கோதையும், ஆசிரியை அறிவுக் கொடியும் ஒரு நல்ல சேதியை எல்லோர்க்கும் சொன்ன மன நிறைவோடு மேடைக்கு வந்து பரிசு பெற்றனர்.
பிஞ்சுகளே… நீங்க…?