தொலைநோக்கி
பிரபஞ்ச ரகசியம் – 45
தொலைநோக்கி
– சரவணா இராஜேந்திரன்
மனித நாகரீகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களின் விழிகள்தான் தொலைநோக்கியாக இருந்தது, மழைக்கால இரவில் விண்ணில் தெரியும் அன்னப்பறவை விண்மீன் குழுமத்தின் தலையைப் போன்ற பகுதியில் உள்ள நட்சத்திரத்திற்கு மேல் தெரியும் மங்கலான புள்ளி அண்டிரோமீடா என்ற பால்வெளிமண்டலம்தான் மிகவும் நீண்ட தொலைவில் உள்ள நமது பால்வெளிமண்டலத்தைப் போன்ற ஒரு பால்வெளிமண்டலம். இதன் தொலைவு பற்றிக் கூறவேண்டுமானால் நமது சூரியக் குடும்பம் உருவாவதற்கு முன்பே புறப்பட்ட அதன் ஒளி தற்போது நமது கண்களை வந்து சேர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனாலும் மனிதரின் ஆசைகள் நீண்ட தொலைவில் தெரிபவற்றை அருகிலே பார்ப்பது எப்படி என்ற கேள்விக்கு விடை காணும் திசையிலேயே ஓடிக்கொண்டே இருந்தன.
தொலைநோக்கிகளைப் பற்றிய வரலாறு சுமேரியர்களிடமிருந்து துவங்குவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் தூரத்தில் உள்ள பொருட்களை அருகில் பார்ப்பதில் ஆர்வமிக்கவர்களாக இருந்தனர். இதற்காக இவர்கள் கோட்டைகளின் மேற்புறத்தில் உருளை வடிவிலான அமைப்பு வைத்திருந்தனர். இதன் மூலம் பார்வையை ஒருமுகப்படுத்தி தூரத்தில் இருந்து வரும் எதிரிகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். ஆனால் இதைத் திருப்பவோ, அல்லது மடக்கவோ முடியாது. இது 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொலைநோக்கியாகும்.
அய்ரோப்பாவில் குன்றுகளின் மீது கற்பாறைகளை வைத்து தொலைதூரப் பொருளை அருகில் பார்க்கும்படி சில அமைப்புகளை உருவாக்கியிருந்தனர். அவை எதற்கு என்றால் குறிப்பிட்ட காலநிலையில் வானில் எவ்வகையான விண்மீன்கள் தெரிகின்றன என்பதைக் கண்டறிந்து காலநிலையை அறிவிக்கும் விதமாக அமைத்திருந்தனர். எடுத்துக்காட்டாக அவர்கள் அமைத்திருக்கும் கற்பாறைக் குன்றுகளின் வழியாகப் பார்க்கும்போது ஓரையான் விண்மீன் தொகுப்பு தெரிய ஆரம்பித்தால் குளிர்காலம் துவங்கப் போகிறது என்பதை உணர்ந்துகொள்வார்கள்.
காலநிலையை அறிவிக்க இவ்வாறான அமைப்புடன் கூடிய தொலைநோக்கிகளை உருவாக்கினர். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் பட்டுத்துணியால் ஆன தொலை நோக்கியைப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் அந்தத் தொலைநோக்கியில் கண்ணாடிகளை எப்படி பதித்தார்கள் என்ற சான்று இன்னும் கிடைக்கவில்லை. கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு அரேபியர்கள் உலோக உருளைகளைக் கையிலெடுத்துச் சென்றுள்ளனர். அதன் மூலம் அவர்கள் தூரப்பொருட்களைப் பார்க்க முயன்றுள்ளனர். அரேபியர்கள் இந்தியா, சீனம் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளுக்கு வணிகம் செய்தவதைத் தொழிலாகக் கொண்டனர். அரேபியப் பாலைவனம் முதல் சீனாவின் கோபிப் பாலைவனம் வரை அவர்கள் ஒட்டகங்களில் பயணம் செய்வார்கள். அப்படிப் பயணம் செய்யும்போது நீண்ட தூரத்தில் யாராவது வரும் போது அவர்கள் பகைவர்களா? வியாபாரிகளா? நம்மைப் போன்ற வியாபாரிகளா? அவர்களின் கைகளில் ஆயுதம் எதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்க அந்த உலோக உருளைகளைப் பயன்படுத்தினர். அதே காலகட்டத்தில் கடல் வாணிபம் செய்யும் ரோமானியர்களும், சீனர்களும் ஒருவித உலோக உருளைகளை வைத்திருந்தனர்.
இந்த உலோக உருளைகள் மூலம் தூரப் பொருட்களை அருகில் பார்த்தனர். இந்த நிலையில் கலிலியோ கலீலி தூரப் பொருட்களை அருகில் பார்க்க உதவும் தொலைநோக்கி உருளையில் கண்ணாடிகளைப் பதித்து தூரப் பொருட்களைப் பார்த்துவந்தார். அவர் வானவெளி ஆய்வாளர். ஆகையால் நல்ல தொலைநோக்கி தேவை என்று பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தார். அப்போது ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவரின் கண்ணாடிக் கடையில் உள்ள கண்ணாடி வில்லை ஒன்று தூரத்தில் உள்ள பொருட்களை மிகவும் அருகில் காண்பிக்கிறது என்று அனைவரும் பேசுவதைக் கேட்ட கலிலீயோ கலீலி தனது வானியல் ஆய்விற்குத் தேவையானது அந்தக் கண்ணாடி வில்லைதான் என்று நினைத்து ஆலந்து நாட்டை நோக்கிச் சென்றார்.
அங்கே குறிப்பிட்ட கண்ணாடிக் கடைக்குச் சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அது ஒளியைப் பெருக்கித் தருவதை நேரில் கண்டறிந்தார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார். பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக தொலைநோக்கி என்று பெயரிட்டார். அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.
அவர் தனது சிறிய தொலைநோக்கியில் பல்வேறு மாற்றங்களைச் செய்து பெரிய தொலைநோக்கி (Telescope) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த தொலைநோக்கி மூலம் வானத்தை ஆய்வு செய்ய ஆரம்பித்தார். கலிலியோ கண்டுபிடித்த தொலைநோக்கியில் சில குறைபாடுகள் இருந்தன. அதாவது உருவங்கள் மங்கலாகவும் ஒளிசிதறல்கள் காரணமாக பல வண்ணங்களிலும் காணப்பட்டன. அதனால் காட்சிகள் தெளிவாகத் தெரியாமல் இருந்தன.
இந்தக் குறையைச் சரி செய்ய கலிலியோவிற்குப் பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் முயற்சி செய்தார். அப்பொழுது கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியூட்டன் அதற்கு மாறாக ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றிகண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலைநோக்கி கிடைத்தது. இத்தொலைநோக்கிகளுக்கு பிரதிபலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து தொலைநோக்கிகளும் செயல்படுகின்றன. இப்போது நமது புவிவட்டப் பாதைகளில் பல்வேறு தொலைநோக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் பல்வேறு விண்மீன்கள், பால்வெளி மண்டலங்கள், விண்மீன் மண்டலங்கள் போன்றவற்றைக் கண்டு மகிழ்கிறோம். விண்வெளி அறிவிலயாளர்கள் மிகவும் எளிதாக கோள்கள், விண்மீன்கள், ஒளிர்முகில்கள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இன்றையத் தொலைநோக்கிகள் மிகவும் உயரிய தொழில்நுட்பங்களில் உருவாகியுள்ளன. தற்போது ஒலி அலைகளை அனுப்பி அந்த ஒலிஅலைகள் திரும்ப வரும்போது அவை கொடுக்கும் முடிவுகளை வைத்துப் படம் எடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. இதனடிப்படையில் மிகச்சிறிய ஒளிப்புள்ளியைக் கூட நாம் விரிவாக்கம் செய்து அங்கு உள்ளது எவ்வகை விண்மீன், அந்த விண்மீனைச் சுற்றிக் கோள்கள் உள்ளனவா அல்லது அது விண்மீன்கள் அடங்கிய பால்வெளி மண்டலமா என்பதைக் கண்டறிந்துவிட முடிகிறது, மேலும் தற்போது உள்ள தொலைநோக்கிகள் மழை, மேகமூட்டம், பகல் இரவு என்று எப்போது வேண்டுமானாலும் செயல்படும் தன்மையுடன் கூடிய வகையில் செயல்பட்டு வருகின்றன.
நுண்ணலைத் தொலைநோக்கியின் வகைகள்:
காமாக் கதிர்களை கண்டறியும் தொலை-நோக்கிகள்
அகச்சிவப்புத் தொலைநோக்கிகள்
நுண்ணலைத் தொலைநோக்கிகள்
நுண்பெருக்கித் தொலைநோக்கிகள்
புறவூதாத் தொலைநோக்கிகள் மற்றும் எக்ஸ்ரே தொலைநோக்கி போன்றவைகள் கண்ணாடி வில்லைகளைப் பயன்படுத்தி பார்க்கக் கூடியவை அல்ல. இவை அனைத்தும், கதிர்களை வெளியிட்டு, அதில் வரும் பிம்பங்களை படமாக்கும் திறன் பெற்றவை.
எடுத்துக்காட்டாக நமது பால்வெளிமண்டலத்தின் மய்யத்தில் மிகவும் ஆபத்து மிக்க காமா கதிர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன, இதைக் காமா கதிர் கண்டறியும் தொலைநோக்கியால்தான் கண்டறிய முடியும். இதை வெறும் கண்களால் பார்க்கும் தொலைநோக்கி கொண்டோ அல்லது வேறு ஏதாவது தொலைநோக்கி மூலமாகவோ கண்டறிய முடியாது. காமா கதிர்கள் மிகவும் அபாயகரமானவை. எங்கோ வெடிக்கும் விண்மீன்களில் இருந்து கிளம்பும் காமா கதிர்கள் ஒட்டுமொத்த சூரிய மண்டலத்தையே அழிக்கும் தன்மை கொண்டவை, ஆகையால் இந்தக் கதிர்கள் குறித்த கண்காணிப்பு மிகவும் அவசியமாகும்.
அதே போல் நுண்ணலைத் தொலைநோக்கி, இந்த வகைத் தொலைநோக்கிகள் விண்வெளியில் இருந்து வரும் மிகவும் மெல்லிய கதிரியக்க அசைவுகளைக் கூடக் கண்டறிந்துவிடும். எடுத்துக்காட்டாக, நியூட்ரினோ போன்றவைகளைக் கூறலாம்.
நுண்பெருக்கித் தொலைநோக்கிகள் விண்வெளியில் இருந்து வந்த மெல்லிய ஒளியைக்கூட பல மடங்கு உருப்பெருக்கி அந்த ஒளி எங்கிருந்து வருகிறது அந்த ஒளிமூலத்தின் உண்மை நிலையை நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது, ஆண்டிரோமீடா என்ற புதிய பால்வெளிமண்டலம் குறித்த பல தகவல்களை இவ்வாறு நுண்பெருக்கி தொலைநோக்கிகள் கொண்டுதான் அறிந்துகொண்டோம்.
புற ஊதாக்கதிர் தொலைநோக்கி புற ஊதாக்கதிர்களை வெளியிடும் விண்மீன்களைக் குறித்து அறிய நமக்கு பெரிதும் பயன்படுகிறது. அதேபோல் எக்ஸ்ரே தொலைநோக்கியும் எக்ஸ்ரே கதிர்களை அனுப்பி அது கொண்டுவரும் பிம்பங்களை ஒன்று சேர்த்துப் படமாக நமக்கு கொடுக்கிறது. ஹப்பிள் தொலைநோக்கி போன்று இதுவரை 10-க்கும் மேற்பட்ட தொலைநோக்கிகள் நமது புவியின் வட்டப் பதையில் சுற்றிவந்து நமக்கு பல தகவல்களைத் தந்துகொண்டிருக்கின்றன.
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் என்று இதுவரை நாம் கண்டறிந்திருப்பவை எல்லாம் மிக மிகச் சொற்பமானவை. இன்னும் ஏராளமாக அறிய வேண்டியிருக்கிறது. அறிவியல் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து கொண்டே இருக்கும். நாம் பிறிதொரு தொடரில் இந்தச் செய்திகளைப் பற்றிப் பார்ப்போம்.
நன்றி!