ஒரு பக்கம் அலை; மறுபக்கம் அமைதி – ஏன்?
கேள்வி: பாபுண்ணே, என் மகள் ஒரு கேள்வி கேட்டா…. ராமேஸ்வரம் போற பாதைல இரண்டு பக்கமும் கடல் இருக்கு.. அதுல ஒரு பக்கம் அலை கம்மியாவும், அடுத்த பக்கம் ஆக்ரோசமாவும் இருக்கு… எதனால இப்டி…..?
— — -ஷெரிப் ஜமால்
பதில்: முதலில் இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்காக, உங்கள் மகளுக்கு உச்சி முகர்ந்து என் அன்பு முத்தங்கள். இராமேசுவரத் தீவின் அமைப்பு அப்படி. வடமேற்குப் பகுதியில் இருந்து வடகிழக்குப் பகுதி நோக்கியே பலத்த காற்று வீசுகின்றது. காரணம், தென்மேற்குப் பகுதியில் வீசும் காற்றைத் தடுக்க எந்த நிலப்பரப்பும் இல்லை. ஆனால், வடகிழக்குப் பகுதியில் இலங்கைத் தீவின் மேற்பகுதி நிலப்பரப்பு சற்றுத் தள்ளி சூழ்ந்து இருக்கின்றது.
இராமேசுவரத் தீவிற்கு வடகிழக்கில் இருந்தும் காற்று வீசும். ஆனால், தென்மேற்கில் இருந்து அதிவேகத்திலும், வடகிழக்கில் இருந்து சற்று மிதமான வேகத்திலும் காற்று வீசும்.
இராமேசுவரத்தில் அலை இருக்காது, தனுஷ்கோடியில் அலை அதிகமாக இருக்கும். இராமேசுவரத்தருகே இருக்கும் கடலைப் பெண்கடல் என்றும், தனுஷ்கோடிக்கருகே இருக்கும் கடலை ஆண்கடல் என்றும் செல்வார்கள். வீசும் காற்றின் காரணமாகவே அலைகள் ஏற்படுகின்றன என்பது நமக்குத் தெரியும்.
கடற்பரப்பில் இருந்து நிலப்பகுதிக்கு பகலில் காற்று பலமாக வீசக்காரணம், நிலப்பகுதி எளிதில் சூடாகி, அங்கிருக்கும் காற்றையும் சூடாக்கும். சூடான காற்று மேல்நோக்கிச் சென்றவுடன் அங்கே ஏற்படும் வெற்றிடத்தைச் சமன் செய்ய கடற்பரப்பில் இருக்கும் குளிர்ந்த காற்று நிலப்பகுதியை நோக்கிப் பாயும். இதனாலேயே கடலில் கரைக்கு அருகே காற்றினால் ஏற்படும் அலைகள் தோன்றுகின்றன.
இராமேசுவரத்தில் அலைகள் பெரிய அளவில் இல்லாததற்குக் காரணம், தென்மேற்கில் இருந்து வரும் காற்றை தனுஷ்கோடி நிலப்பரப்பு தடுத்து விடுவதால், அங்கே அலைகள் ஏற்படுவதில்லை. அதனால், தனுஷ்கோடியின் தென்மேற்கில் அலைகள் அதிகமாகவும், வடகிழக்கில் அலைகள் குறைவாகவும் காணப்படும்.
நன்றி : Google Map மற்றும் https://www. meteoblue.com/en/weather/forecast/modelclimate/rameswaram_india_1258698
-பாபு.பி.கே.