பெரியார் திடலுக்கு கல்விச் சுற்றுலா!
“ஒரு ஊருல…”
“உம்…”
“ஆங்… அது! அதாவது, நம்ம சென்னையில எழும்பூரையையும் வேப்பேரியையும் இணைக்கும் காந்தி இர்வின் பேருல ஒரு மேம்பாலம்.”
“உம்…”
“அந்த மேம்பாலத்துக்கு கீழேதான் அம்பேத்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கு. “ம்…” “அந்த மாணவர்களும், ஆசிரியர்களும் ஒவ்வொரு ஆண்டும் என்ன பண்ணுவாங்கன்னா?” “ம்..” “அந்தப் பள்ளிக்கு பக்கத்தில் இருக்கிற பெரியார் திடலுக்கு கல்விச்சுற்றுலா வருவாங்க!”
“அட! பெரியார் திடலுக்குக் கல்விச் சுற்றுலாவா…?” “ஏன் கூடாதா? இங்கதான் மனிதனையும் மனிதனையும் பிரிக்கிற எந்த பேதமும் இருக்காது! இங்க வந்தா உங்க சுயமரியாதையை இழக்க மாட்டீங்க! அதனால, உங்க தன்னம்பிக்கை மேலோங்கும்! முக்கியமாக முழுமனிதரா இருக்கலாம்! அப்படி இல்லேன்னாலும் மாறலாம்! அதனால தமிழ்நாட்டில் இருக்கிற முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் மிகமிக முக்கியமானது பெரியார் திடல்தான்.”
“ஓ!… சரி, சரி கதைக்கு வாங்க.”
“ஆங்… அந்த மாணவர்கள் இந்த ஆண்டும் வந்து பெரியார் திடலைச் சுத்திப்பாத்தாங்க.”
“சரி, அப்படி என்னதான் இருக்கு பெரியார் திடலில்?’’
“தமிழ்நாட்டோட உண்மையான வரலாறு இங்கதான் இருக்கு. இதை பயன்படுத்தி பலபேர் ஆய்வுப் படிப்பே படிக்கிறாங்க. இங்கதான் பெரியார் காட்சியகம் (மியூசியம்) இருக்கு. இதுல ஏறக்குறைய பெரியாரோட வாழ்க்கை வரலாறு முழுவதும் ஓவியங்களாகவும், ஒளிப்படங் களாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. அதைவிட முக்கியமா பெரியார் பயன்படுத்திய பொருட்களையும், அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்ட பொருட்களையும் பத்திரமாக வைத்திருக்கின்றனர். இதையும் உலகம் முழுவதுலிருந்தும் வந்து, வந்து பார்த்துச் செல்கின்றனர்.”
“உண்மையாகவா சொல்றிங்க?”
“பின்னே! அப்புறம் கேளுங்க. பெரியார் நினைவிடமும் அங்ககேதான் இருக்கிறது. அதுல அவருடைய சிந்தனைகளை சின்னச்சின்ன கல்வெட்டுக்களாக செதுக்கி வைச்சிருக்காங்க. நீங்க வேற எங்க போனாலும் இந்தக்கல்வெட்டுகளில் இருக்கிறதை பார்க்கவே முடியாது. அவ்வளவு புரட்சிகரமானது.”
“நீங்க சொல்றதைப் பார்த்தா எங்களுக்கும் பெரியார் திடலை பார்க்கனும் போலிருக்கு!”
“பாத்துட்டாப் போச்சு! பிறகு, இதையெல்லாம் முடிச்சிட்டு, அந்த மாணவர்களே தலா அய்ந்து பேர் கொண்ட நான்கு குழுவாகத் தங்களைத் தாங்களே பிரிச்சுகிட்டு, அன்னை மணியம்மையார் அரங்கத்தில் எய்ஸ்ட், பெண்ணுரிமை, கல்வியுரிமை ஆகியவைபற்றிய விழிப்புணர்வை ஊட்டுகின்ற சின்னச்சின்ன நாடகங்களை அருமையாக நடத்திக்காட்டினர்.”
“அடடே…’’
“இங்கதான் கதையில ஒரு சின்ன திருப்பம்.”
“ஓ… என்ன திருப்பம்?”
“அதாவது அவங்ககூட அவர்களது ஆசிரியர்களும் வந்திருந்தனர். அதில ஒரு மாணவன்தான் அந்தத் திருப்பத்திற்கேக் காரணம்”
“என்ன! ஒரு மாணவனா?”
“ஆமாம், அந்த நாடகத்தில் நடித்திருந்த ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பார்த்து”, “சார்.. எங்களுக்கு பெரியாரைப் பத்தியெல்லாம் நீங்க நிறைய சொல்லித்தர்றீங்க. ஆனால், நீங்களே கையிலே கயிறு கட்டியிருக்கிங்களே அப்பிடின்னு போட்டானே ஒரு போடு! அதைப்பார்த்து அனைவரும் ஆச்சர்யத்துடன் படபடவென்று கைதட்டினர். அந்த ஆசிரியரோ சங்கடத்தில் நெளிந்தார்…”
“அப்புறம் என்னாச்சு?”
“இரண்டுநாள் கழிச்சு, அதே மணியம்மையார் அரங்கத்தில் வேறொரு நிகழ்ச்சிக்கு மாணவர்களின் முன்னிலையில் சங்கடத்தில் நெளிந்த அந்த ஆசிரியரும், நாடகம் நடந்தபோது பார்வையாளராக அங்கிருந்தவரும் ஒருவரையொருவர் சந்தித்து பேசிக்கொண்டனராம். அவர்தான் ஒரு செய்தி சொன்னார். அந்த செய்திதான் இந்தக்கதையோட கிளைமேக்ஸ்.”
“கிளைமேக்ஸா! அப்படி என்ன சொன்னார்?”
“அந்த ஆசிரியர் தன்னோட கையில் கட்டியிருந்த கயிறை இப்போ கழட்டிட்டாராம்.”
“அட!”
“இதிலிருந்து என்ன தெரியுது?”
“என்ன தெரியுது?”
“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு”
“சரிதான். நல்ல கதைதான். ஆனால், அதுக்குள்ள முடிஞ்சிருச்சே?”
“இவ்வளவுதானே! சரி, ஒரு ஊருல…”
“ம்…”
– ஹுவாமை