படமும் ! அது சொல்லும் கதையும் !
‘பாட்டி’ கதை சொல்லி கேட்டிருப்பீங்க! ‘படம்’ கதை சொல்லி கேட்டிருக்கீங்களா? படம் போய் கதைசொல்லுமான்னு நினைக்காதீங்க. இந்த பூமியில் எல்லாமே கதைகளால் ஆனதுதான்!
சரி, எந்தப்படம் நமக்கு கதை சொல்லப்போகுது? இதோ 12-.05.-2017 அன்று விடுதலையில் 8 ஆம் பக்கத்தில் வந்த படம்தான்! அதை பெரியார் பிஞ்சிலும் உங்களுக்காக இங்கே காட்டப்பட்டிருக்கிறது.
நன்றாகப் பாருங்கள்! ஆறுபேர் இருக்கின்றனரா?. இடப்பக்கமிருந்து பார்த்தால், முதலில் கலைமணி, அவருடைய மகள் யாழினி, அடுத்தது திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள், அதற்கடுத்தது மோகனா அம்மையார், ஆசிரியர் தாத்தா கி.வீரமணி, இறுதியில் கலைமணியின் இணையர் ஆடிட்டர் சண்முகம் ஆகியோர்தான் அதில் இடம் பெற்றிருக்கின்றனர்.
கலைமணி-சண்முகம் இணையரின் மகளான யாழினி பன்னிரண்டாம் வகுப்பில் 1190 மதிப்பெண் பெற்றதன் மகிழ்வாக ஆசிரியர் தாத்தாவிடம், பெரியார் உலகத்திற்காக ரூபாய் 10,000 நன்கொடை கொடுத்திருக்கின்றார். இதுதான் அது சொல்லும் செய்தி! ஆனால் அதுக்குள்ளே ஒரு கதை இருக்கிறது! அப்படி என்ன கதை?
அதாவது, தமிழ்நாட்டுல… திருச்சியின்னு ஒரு மாவட்டம்… அதுல புத்தூருன்னு ஒரு ஊரு… அந்த ஊருல 1959 ஆம் ஆண்டு, ஒரு இல்லம் தொடங்குனாங்க. அதுக்குப் பேரு “நாகம்மையார் பெண்கள் அனாதை இல்லம்’’ அதைத் தொடங்கியது யாரு? தந்தை பெரியாரும் மணியம்மையாரும்தான்!
இல்லத்தோட பேரே சொல்லுது அது என்னமாதிரியான இல்லமுன்னு இல்லையா? அதுக்கப்புறம் 1978 இல் ஆசிரியர் வீரமணி தாத்தா இதன் பொறுப்பேற்ற போது, இந்த உலகத்தில் யாருமே அனாதைகள் இல்லை என்ற பரந்த கண்ணோட்டத்தில் அனாதை என்ற பெயரையும் நீக்கி, “நாகம்மையார் குழந்தைகள் இல்லம்’’ என்று பெயர் மாற்றம் செய்தார்.
அப்படி ஆதரவில்லாம சேர்க்கப்பட்டவர்கள்தான் அந்தப்படத்தின் முதலில் இருப்பவரான கலைமணியும், மூன்றாவதாக இருக்கும் சி.தங்காத்தாள் அவர்களும். இதே தங்காத்தாள்தான் பிறகு இந்த இல்லத்தையே நிர்வகிக்கிற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
இந்த இல்லத்தை இன்று நிர்வகிக்கிற எல்லோருமே இந்த இல்லத்தில் வளர்ந்தவர்கள்தான். இங்கு சேருகிற பெண் குழந்தைகளுக்கு அம்மாவாக, அப்பாவாக இருந்து அவர்களின் வாழ்க்கையின் எல்லா உயர்வுகளிலும் உடனிருந்து அவர்களுக்குத் திருமணமும் செய்துவைத்து, உறவுகளே இல்லேன்னு வந்தவங்களுக்கு இந்த உலகத்தையே உறவுகளாக்கிக் கொடுத்ததுதான் அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லம்! அதுக்குக்காரணமாக இருப்பவர்கள்தான் தந்தை பெரியார்! அன்னை மணியம்மையார்! ஆசிரியர் தாத்தா கி.வீரமணி!
அந்தக் கலைமணி அவர்களின் மகள்தான் யாழினி! அந்தப் படத்தில் இரண்டாவதாக இருப்பவர்! அவங்கதான் இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் 1,190 மதிப்பெண் வாங்கியிருக்காங்க!
ஆசிரியர் தாத்தாவிடம் பாராட்டுப்பெற்ற அந்த யாழினிகிட்ட பேசும் போது, “நான் அதிக சிரமப்பட்டு படிச்சேன் அப்படியிப்படின்னு அலட்டிக்கவே இல்லை! நான் நேரமேலாண்மையை சிறப்பாக கைக்கொண்டேன்! பாடப்புத்தகங்களே கதியென இல்லாமல் அன்றாடம் நாளிதழ்கள், கதைகள் ஆகியவற்றை படித்தேன்! இப்படிப் படித்துதான் 10 ஆம் வகுப்பிலும் 494 மதிப்பெண்கள் பெற்றேன்” என்கிறார்.
தேர்வில், விடைகளை ஒரு ஓவியத்தைப்போல கட்டம் கட்டி முறைப்படுத்தி எழுதுவார் என்றும் நல்ல கற்பனைத்திறன் உடையவர் என்றும் யாழினியைப் பற்றி அவருடைய அப்பா சண்முகம் சொல்கிறார். யாழினியைப்பற்றி தங்காத்தாள் அவர்களிடம் கேட்டபோது, “எங்க இல்லத்துப் பிள்ளை பெத்த பிள்ளை. என் சொந்தப் பிள்ளை இந்த மதிப்பெண் வாங்கியிருந்தாக்கூட இப்படி சந்தோசப் பட்டிருப்பேனான்னு தெரியாது.
இந்த இல்லம் இல்லேன்னா நாங்கெல்லாம் என்னவாகி யிருப்போமோ? எங்களின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும், அங்கீகாரத்திற்கும் காரணம் பெரியார்தான்! நாகம்மையார்தான்! ஆசிரியர் வீரமணிதான்! மோகனா அம்மையார்தான்! அவர்களுக்குத்தான் இந்தப்பெருமை! அவர்களால் நிர்வகிக்கப்படும் இந்த இல்லத்துக்குத் தான் அந்தப்பெருமை!‘’ என்று உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்.
அடேயப்பா… மானுடம் தலைநிமிர்ந்த 59 ஆண்டுகால வரலாறு! ஜாதி, மத பேதம் தகர்த்த மனிதநேய வரலாறு!! இதுதாங்க அந்தப்படம் சொல்லுகிற கதை…