பள்ளிக்கூடங்கள் பழகுமுகாமாக மாறுவது எப்போது?
குழந்தைகள் உலகத்தின் தேசிய வார்த்தை ‘போரடிக்கிறது’ என்பதுதான். எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். மற்றதெல்லாம் ஆளுக்கும், இடங்களுக்கும் தகுந்த மாதிரி மாறுபடுகிறது. அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாகவே இருக்கிறது! எதையாவது ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ளும் முனைப்புடனேயே இருக்கிறது. அதற்கு உரிய தீனி போடப்படாவிட்டால் நாம் மட்டுமல்ல இந்த பூவுலகமே அவர்களுக்கு “போரடிக்கிறது’’தான்!
இவ்வளவு சின்ன வயதில் அவர்களது மூளையில் எதற்காகத் திணிக்கவேண்டும்? என்ற கேள்வி எழலாம். அளவு பற்றி கவலையில்லை. அது அவர்களுக்கு ஏற்ற வடிவத்தில் இருக்கிறதா என்பதுதான் அதற்கு பதில்! அம்மாவின் வயிற்றில் இருக்கும்போதேகூட அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்லும்போது அந்தக் கேள்விகளும் அடிபட்டுத்தான் போய்விடுகின்றன. இங்கேதான் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு ஓக்கேதான்! ஆனால், அது சுவையாகவும், போரடிக்காமலும் இருக்க வேண்டும்! அவர்களின் உலகத்தைப்பற்றிய இந்த அக்கறையும், புரிதலும் முழுமையாக இருந்துவிட்டால், அதுவும் உரியவர்களின் வழிகாட்டுதலில் அமைந்துவிட்டால் அந்த உலகம் இந்த பிரபஞ்சத்திற்கே வழிகாட்டக்கூடும்.
இன்றைய சூழலில் பெரும்பாலும் வீட்டிலும், பள்ளிக் கூடத்திலும் இந்த வாய்ப்பு பிஞ்சுகளுக்கு கிடைப்பதில்லை. ஆகவேதான், வெளியில் எங்காவது போகவேண்டுமென்றால் ஆவலுடன் புறப்படுகிறார்கள். ஆனால் அங்கே அவர்களுக்கு ஒரு புத்தறிவு இருக்கவேண்டும். இப்போதிருக்கிற வாழ்க்கை முறையில் இது சவாலானதுதான்! ஆனால், அறிவார்ந்த தலைமுறையின் பொருட்டு இந்த சவாலை ஏற்றுதான் ஆகவேண்டும். இந்த சவாலை பழகுமுகாம் ஏற்று பெரிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்! பழகுமுகாமுக்கு அவர்களோடு வரும் வாய்ப்பு கிடைத்தவர்கள் அவர்களுக்கு போரடிக்காமல் அவர்களுடன் ஏதாவது சளசளவென்று பேசிக்கொண்டே வரவேண்டும்.
அல்லது அவர்களுக்கு ஈடுகொடுத்து கடிஜோக்குகள் சொல்லி அவர்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களது வழக்கமான வார்த்தை சரளமாக வந்துவிடும்.
இந்த நிலையில்தான் பழகுமுகாமின் முதல்நாளும் தொடங்கியது. ஆனால், அடுத்த நாளிலிருந்து அந்த நிலை மெல்ல மெல்ல மாறத்தொடங்கியது. அவர்களுக்குள் ஒரு ரசவாதவித்தை அவர்களுக்கு தெரியாமலேயே நடந்து கொண்டிருந்தது. அந்த ரசவாதவித்தை அவர்களுக்குள் மற்றுமொரு உள்முரண்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, பழகுமுகாம் ஒருங்கிணைப்பாளர்களிடம் வீம்புக்காக முதல்நாளில் போரடிக்கிறது என்று சொல்லிவிட்டோமே. ஆனால், அப்படியெல்லாம் இல்லையே. இதை எப்படி மாற்றிச்சொல்வது என்கின்ற கவுரவப் பிரச்சினைதான் அந்த உள்முரண்பாட்டுக்கு காரணம். அதைச்சொல்லாமல் தொடர்ந்து இருக்கவும் இயலவில்லை.
பின்னே, உள்ளுக்குள் பொங்கி வழிகின்ற அந்த இனிய மாற்றத்தை, மகிழ்ச்சியை, பரிணாமத்தை எவ்வளவு நேரம்தான் மறைக்கமுடியும்? முடியவில்லை. ஆகவே தன்னையறியாமல் ஒரு தருணத்தில் பூ மலர்வதுபோல “அய்யா… ஜாலியாக இருக்கிறது’’ என்று ஆனந்தமாக ஒத்துக்-கொண்டதையும், அதைக் கண்டு மற்றவர்கள் கைதட்டி ஆரவாரித்ததையும் காணும்போது பழகுமுகாம் அந்த இளஞ்சிறார்களின் உலகத்தைப்பற்றிய அக்கறையையும், புரிதலையும் மிகச்சரியாகப் புரிந்து வைத்திருந்தததை முழுமையாக உணர முடிந்தது. அதுவொன்றும் வெறும் விளையாட்டும், பொழுதுபோக்கும் மட்டுமல்ல, அதிகாலை எழுந்ததிலிருந்து நடைப் பயிற்சி, சிலம்பப் பயிற்சி, கராத்தே போன்ற தற்காப்புக்கலைகள், யோகா, நீச்சல் பயிற்சி, வகுப்புகளில் சிந்தனையைத் தூண்டும் விடுகதைகள், முதலுதவிச் சிகிச்சைகள், ஓவியங்கள் வரைதல், கிரிகமி, ஓரிகமி போன்ற வண்ணத் தாள்களில் வெவ்வேறு வகையான அழகிய வடிவங்கள் உருவாக்குதல், பகுத்தறிவு கருத்துகள், கேட்டதை மேடையில் பேசுதல், ஆடல், பாடல் என்று மாறிமாறி நடைபெற்ற வகுப்புகளும்தான்! ஒன்று! ஒன்றைக்காட்டிலும் மற்றொன்று என்று விடாமல் அவர்களின் மூளைகளின் தேவைக்கேற்ப கற்றல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதனால், போர் (ஙிஷீக்ஷீமீபீஷீனீ) என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் போய்விட்டது.
அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு வேறொரு அரிய வாய்ப்பும் வாய்த்தது. அது ஆசிரியர் தாத்தாவுடன் அருகில் நின்று பேசுவதற்கும், அறிவு ஆசானின் மாணவரிடமே கேள்விகளைக் கேட்பதற்குமான ஒரு வகுப்பு! கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டனர். மூன்றாவது நாளில் பெரியார் பிஞ்சுகள் செம்மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் ஆசிரியர் தாத்தாவும் கலந்துகொண்டார். அங்கே ஆசையுடனும், உற்சாகத்துடனும், வாஞ்சையுடனும் பிஞ்சுகளிடம் பேசினார்.
அந்த உரையாடல் வெடிச்சிரிப்புகளை அனைவரிடமும் அலையலையாக எழுப்பிவிட்டது. இது ஒருபக்கம் இருந்தாலும் இதற்குத் தொடர்பேயில்லாத பழகுமுகாமின் உணவு அவர்களை ஒரு ரசிக மனநிலைக்கே கொண்டு போய்விட்டது. அவர்களிடம் நிறைவு நாளில் ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அதில் இந்த 5 நாள் பயிற்சி தொடர்பான பிஞ்சுகளின் கருத்தறியும்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதில் 95 விழுக்காட்டு கேள்விகளுக்கு மிக அருமை என்பதைத்தான் பிஞ்சுகள் எழுதியிருந்தனர்.
சிலர் மாறாக எழுதியிருந்தனர். அதுவும் எப்படியிருந்தது என்றால், பழகுமுகாமை 10 நாட்கள் வைக்கவேண்டும் என்பது போன்றதுதான் அந்த மாறுதல்! குறிப்பாக உணவு சூப்பர்! என்றுதான் பலரும் எழுதியிருந்தனர். இதுதானே அவர்களது இயல்புக்கேற்றது. ஏன் அதுபோல நடைமுறையில் இல்லை? இந்த அய்ந்து நாட்களில் அவர்களுக்குக் கிடைத்த அறிவுடன் கூடிய ஆனந்திற்கும், பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் அனுபவத்திறகும் இருக்கும் இடைவெளி குறைவது எப்போது? பள்ளிக்கூடங்களே பழகுமுகாமாக மாறுவது எப்போது? என்கின்ற கேள்விகள் நமக்கும் ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன.