போசாதன போசினால் – 9
யாழினி வீட்டு வாசலில் தன் தோழிகளோடு பாண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். ஏழாம் வகுப்பு படிக்கும் யாழினிக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆனால், தொடர்ந்து நீண்ட நேரம் விளையாட முடியாமல் சிறிது நேரத்திலேயே சோர்வு ஏற்பட்டுவிடும்.
அது தெரிந்த யாழினியின் அம்மா, “உடல் நலமாக சோர்வில்லாமல் இருக்கனும்னா, “அடிக்கடி சத்தான உணவு சாப்பிட வேண்டும்” என்று எடுத்துச் சொல்வார்கள்.
ஆனால் யாழினியோ சாப்பாட்டில் இருக்கும் காய்கறி, கீரை, பழம் என எதையும் சாப்பிடாமல் தட்டிலேயே வைத்துவிடுவாள். அப்போதெல்லாம் யாழினியின் அம்மா, “எப்போதுதான் உனக்கு இது புரியுமோ தெரியலியே” என மிகவும் வருந்துவார்கள்.
யாழினி தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்த போது அந்தப் பக்கமாக கீரை வியாபாரம் செய்யும் பாட்டி கூடை நிறைய கீரைகளை தலையில் வைத்துக் கொண்டு “கீரைம்மா.. கீரை… அரைக்கீரை.. முளைக்கீரை… சிறுகீரை.. பசலைக்கீரை..” என்று நீட்டிச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். பாட்டியின் எதிரே வந்த ஒரு ஆள் “பாட்டி, கீரை என்ன விலை?’’ என்று கேட்டார். பாட்டி, “கட்டு பத்து ரூபாப்பா… என்ன கீரை வேணும்?’’ என்றார்.
“கூடையை தலையிலேயிருந்து இறக்கு பாட்டி..’’ என்றார் அந்த ஆள். பாட்டி சடார் எனக் கூடையை இறக்கி வைத்தாள்.
இதையெல்லாம் யாழினி வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். வயதான பாட்டி அடுத்தவரின் உதவியின்றி தன் தலையிலிருந்த கீரைகள் நிறைந்த கூடையை இறக்கியது வியப்பாக இருந்தது.
அந்த ஆள் கூடை நிறைய ஒரு தோட்டம் போல இருந்த கீரைக் கட்டுகளில் ஒரு கீரைக்கட்டை கையில் எடுத்துக்கொண்டு தன் சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்ததும் பாட்டி, “யப்பா… வேற நோட்டுக் குடு…” என்றார்.
“ஏன்? இந்த நோட்டுக்கென்ன ஓட்டை” என்றார் அந்த ஆள்.
“கிழிஞ்ச நோட்டா இருக்குப்பா… இது செல்லாது… வேற நோட்டுக்குடு”… என்றார் பாட்டி.
“அய்நூறு, ஆயிரந்தான் செல்லாது பாட்டி, பத்து ரூபால்லாம் செல்லும். நீ வேற யார் கிட்டாயாவது தள்ளி உடு’’ எனக் கேலியாக சொன்னார் அந்த ஆள்.
“யப்பா.. ஒரு ஓட்டை ரெண்டு ஓட்டை இல்லே நாலு ஓட்டை இருக்கு… இந்தா புடி” என்றார் பாட்டி.
“பாட்டிக்கு கண்ணு தெரியாது ஓட்டை நோட்டைக் குடுத்து கீரை வாங்கலாம்னு பாத்தா… பாட்டி கண்டு புடிச்சிருச்சே” என முணுமுணுத்தார் அந்த ஆள்.
“யப்பா! கிழவி இதுக்கு கண்ணு தெரியாது… காது கேக்காதுன்னு நினைச்சியா.. நான் இப்பவும் எப்பவும் கீரை சாப்பிடுறவ… எனக்கு கண்ணும் தெரியும். காதும் கேக்கும். இப்பகூட ஒருத்தர் தயவுமில்லாமெ ஊசியில நூல் கோக்க முடியும் என்னாலே… என்ன ஏமாத்த நினைக்காதப்பா…” என உரத்த குரலில் சொன்னார் பாட்டி.
“என்ன பாட்டி சொல்றே… ஒருத்தர் தயவுமில்லாம ஊசியில நூல் கோப்பியா?’’ என வியப்பாக கேட்டார் அந்த ஆள்.
“ஆமப்பா! கீரையை தினமும் சாப்பிடுறவங்-களுக்கு கண்ணு நல்லா தெரியும். காது நல்லா கேக்கும். உடம்பு வலுவா இருக்கும். ஏன்னா இதுக்கெல்லாம் கீரைதான் காரணம்’’ என்றார் பாட்டி.
“சரி… சரி… இந்தா வேற பத்து ரூபா… ஆளை விடு பாட்டி” என்றபடி புது ரூபாய் நோட்டை கொடுத்துவிட்டு, பழைய ரூபாய் நோட்டை வாங்கி சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான் பாட்டியை ஏமாற்ற நினைத்த அந்த ஆள்.
“பாட்டின்னா… கண்ணு தெரியாது, காது கேக்காது ஏமாத்திப்புடலாம்னு நினைச்சா நான் விடுவனா… நான் சாப்பிடுற இந்தக் கீரை சத்துணவு ராணியாச்சே…” என கீரையைப் புகழ்ந்தபடி கூடையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு புறப்பட்டார் பாட்டி.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த யாழினி கீரைக் கூடையை உற்றுப் பார்த்தாள். கூடையிலிருந்து ஒரு கீரைக் கட்டு மகாராணி போல தெரிந்தது. அது ஆட்டம் ஆடி பாட்டுப்பாடுவது போலத் தெரிந்தது.
சத்துணவு ராணி _ நான்
சகலரோக நிவாரணி
தெரிஞ்சுக்க என் பேரை _ நான்
தோட்டங்காட்டுக் கீரை!
ரத்த விருத்திக்கும் ஜீரண சக்திக்கும்
நானே ராஜாத்தி _ இந்த
நாடு நகரத்தில் ஈடு இணை சொல்ல
ஏது என் போலொருத்தி (சத்துணவு)
கர்ப்பிணிப் பெண்ணுக்கும் கருச்சிசுவுக்கும்
இரும்புச் சத்தளிப்பேன் _ மாலைக்
கண்ணோய் வராமலே எந்நாளும் மக்களைப்
பொன்போலே காத்திருப்பேன் (சத்துணவு)
வளரும் பிள்ளைகள் நலனைக் காப்பதில்
நானும் ஒரு தாய்தான் _ சுக
வாழ்வும் தரும் எனைத்தேடிக் கொண்டவர்க்கு
இல்லை ஒரு குறைதான் (சத்துணவு)
இதைப் பார்த்துக் கொண்டிருந்த யாழினியை யாரோ தட்டுவது போல உணர்ந்தாள். அது வேறு யாருமல்ல யாழினியின் அம்மாதான். “என்ன யாழினி காலை உணவைக் கூட சாப்பிட வராமே… விளையாடிக்கிட்டிருக்கியேன்னு கூப்பிட வந்தா கீரைக்கார பாட்டியை முறைச்ச பாத்துக்கிட்டு நிக்கிறே” என்றார்கள்.
“இல்லம்மா… அந்த கீரைக்கார பாட்டி ஒருத்தரு பெருமையைச் சொன்னாங்க. அதை அந்த கீரையே பாட்டா பாடுற மாதிரி கற்பனை செய்து பாத்தேன். அடிக்கடி நீங்க சத்தான உணவைச் சாப்பிடு, கீரை சாப்பிடுன்னு சொல்லுவிங்க! அப்பவெல்லாம் அதை கேக்கவே மாட்டேன்… ஆனா இப்ப.. பாட்டி சொன்னதும், பாட்டி கூடையில இருக்கிற கீரை பாட்டா சொன்னப்பதான் எனக்குப் புரிஞ்சுது. இனி கட்டாயம் உணவுல கீரையை சேத்து சாப்பிடுவேன்.