பெண் மருத்துவர்கள்
ஆண்கள் மட்டும் மருத்துவத்தை
அந்த நாளில் கற்றறிந்தார்;
மாண்பு நிறைந்த கல்விதனை
மங்கை நானும் கற்றறிந்து
ஈண்டு மனித சேவைக்காய்
என்றும் உழைப்பேன் என்றுறுதி
பூண்ட முத்து லட்சுமிநம்
மண்ணின் முதல்பெண் மருத்துவராம்!
அன்பு கனிவு கருணையெலாம்
ஆட வர்க்கும் உண்டிங்கே;
துன்பம் தீர்க்கும் பரிவுள்ளம்
தூய ஆட வர்க்குண்டு;
தன்னை என்றும் அர்ப்பணிக்கும்
தாய்மை நெஞ்சம் பெண்ணன்றோ?
மென்மை மங்கை மருத்துவத்தை
மெய்யாய்க் கற்றல் மேலேன்றார்!
முத்து லட்சுமி துவக்கிட்டார்;
முனைந்தே அந்தப் பாதையிலே
எத்த னைப்பெண் மருத்துவர்கள்
இன்று இங்கே காண்கின்றோம்?
உத்த மங்கள் நிறைந்திட்ட
உயர்ந்த இந்தச் சேவைக்கு
மெத்தப் பொருத்தம் மங்கையரே;
மேலும் மேலும் அவர்வாழ்க!
– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை