சனியை ஆய்வு செய்த காசினி
நமது சூரியக் குடும்பக் கோள்களில் மிகவும் அழகான கோள் சனி. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சிறிது தெளிவாக வெறும் கண்களால் பார்க்க முடிந்ததால் இந்தக் கோள் பல கற்பனைக் கதைகளுக்கு ஆளாகிய கோள் ஆகும், இன்று வரை சனி என்னும் கோளைக் கொண்டு இந்துமத்தில் பல்வேறு கட்டுக்கதைகள் பரப்பிவிடப்பட்டுள்ளன.
கலிலியோ தான் முதல் முதலாக இந்தக் கோளை, தானே செய்த தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தார். அதன் பிறகு விண்வெளி ஆய்வில் புதியதொரு திருப்பம் துவங்கியது, பல கோள்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தாலும், சனிக் கோளைப் பற்றி ஆய்வு செய்ய சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. சனிக்கோளை இதர கோள்களில் இருந்து தனித்து அடையாளப்படுத்துவது அக்கோளைச் சுற்றியுள்ள வளையங்கள் தான். எண்ணிக்கையில் 22 அடுக்குகளைக் கொண்டது. சனிக்கோள், அதன் வளையங்கள் பற்றி ஆராய முதன்முதலாக அனுப்பப்பட்ட விண்கலம் காசினி.
1950-களில் சனிக்கோளை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வகமான நாசாவால் ஒரு குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழு நீண்ட காலம் ஆய்வு செய்து அக்டோபர் 15, 1997-ஆம் ஆண்டு சனிக்கோளை நோக்கி காசினி என்ற ஆய்வுக்கலனை தயாரித்து அனுப்பியது. இந்த விண்கலம் ஜூலை 1ஆம் தேதி 2004 ஆம் ஆண்டு சனிக்கோளின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து அங்கிருந்து கொண்டு சனிக்கோளை ஆய்வு செய்யத் துவங்கியது.
இந்த விண்கலம் சனிக்கோளை மட்டுமல்லாது சனிக்கோளின் நிலவுகளைப் பற்றியும் ஆய்வு செய்தது, முக்கியமான டைட்டன் என்னும் சனியின் நிலவை அதன் தரையில் இறங்கி ஆய்வு செய்ய காசினி தன்னுடன் சுமந்து சென்ற ஹையோஜென்ஸ் ஆய்வுக்கலனை அனுப்பியது. இந்த ஆய்வுக்கலம் சனிக் கோளின் நிலவான டைட்டனில் தரையிறங்க ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் வடிவமைக்கப்பட்டு நாசா மற்றும் அய்ரோப்பிய விண்வெளி ஆய்வாளர்கள் குழுவுடன் இணைந்து உருவாக்கிய விண்வெளி ஆய்வுக் கலனாகும். இந்த ஆய்வுக்கலனுக்கு டச்சு அறிவியலாளர் கிரிஸ்டியன் ஹையோஜென்ஸ் (1629-_1695) நினைவாக ஹையோஜென்ஸ் எனப் பெயரிடப்பட்டது.
ஹையோஜென்ஸ், காசினி என்ற தாய்க்கப்பலில் இருந்து 2004 டிசம்பர் 25 இல் பிரிந்தது. இது பின்னர் 20 நாட்கள் தொடர்ந்து 36,000 மைல் தூரம் பயணம் செய்து டைட்டனின் வளி மண்டலத்தில் வினாடிக்கு 3.6 மைல் வேகத்தில் சென்று டைட்டனில் 2005 சனவரி 14 இல் தரையிறங்கியது. இதுவே டைட்டன் துணைக்கோளில் மட்டுமல்லாது வெளிப்புற சூரியக் குடும்பத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலமும் ஆகும். பூமியில் இருந்து மிகவும் தொலைதூரத்தில் தரையிறங்கிய ஒரேயொரு ஆய்வுக்கலனும் இதுவாகும். ஹையோஜென்ஸ் டைட்டனில் தரையிறங்கியதில் இருந்து 90 நிமிடங்கள் வரை செய்திகளை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. டைட்டானின் தரைப்பகுதியின் கடும் குளிர் காரணமாக (_-179 செ), ஆய்வுக்கலத்தின் மின்கலன்கள் நீடித்து இயங்க முடியாமல் உறைந்து போய்விட்டது.
9 அடி விட்டமும் 318 கிலோகிராம் எடையும் கொண்ட ஹையோஜென்ஸ் ஆய்வுக்கலன், ஆறு ஆய்வுக் கருவிகளைக் கொண்டது. ஹையோஜென்ஸ் கருவிகளை இயக்கும் மின்கலங்கள் 1.8 கிலோவாட் மின்னாற்றல் பெற்றவை. இவை சூரிய ஆற்றலாம் மின்சக்தியைப் பெற்றுக் கொண்டு இயங்கியது. 20 நாட்கள் டைட்டான் வாயுமண்டலத்தில் பயணம் செய்து இறங்கிய பின், மொத்தம் 120 நிமிடங்கள் மின்கலங்கள் இயக்கத்தில் இருந்த அதன் கருவிகள் டைட்டானின் தரைப்பகுதியில் காற்றின் அழுத்தம், வெப்பநிலை ஆகியவற்றைப் பதிவு செய்து அதன் தாய் விண்வெளி ஆய்வுக்கலனான காசினி மூலமாகப் பூமிக்கு அனுப்பியது
காசினி சனிக்கோளின் நிலவுகளைத் தானே தனித்தன்மையுடன் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பியது, இதில் போபே என்ற சனி நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள், பனிப்பாறைகள் இருப்பதை காசினி படமெடுத்து அனுப்பியது.
சனிக்கோளின் மற்றொரு நிலவான ரியோ பற்றிய பல அரிய தகவல்களை காசினி பூமிக்கு அனுப்பியுள்ளது. ரியோவின் விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது காசினி அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்தது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனைத் தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ரியோவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை பனிக் கட்டிகளில் மூலக் கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனிக் கோளைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி தவிர பிற கோள்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்-பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியோவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.
இன்னொன்று ரியோ ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரியோவின் மேற்பரப்பில் 3564 மைல்கள் பறந்து காசினி விண்கலம் இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.
இதேபோல கார்பன் டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மனிதன் உயிர்வாழ மிகவும் முக்கியமான காரணிகள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தண்ணீர். இன்னொரு முக்கிய தேவை ஈர்ப்பு சக்தி. இவை அனைத்துமே ரியோவில் போதிய அளவுக்கு உள்ளது.
ரியோவின் மேற்பரப்பில் 70 சதவீதம் ஆக்ஸிஜனும், 30 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் உள்ளது. பூமியில் உள்ளதைப் போல 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன் இந்த ரியோவில் உள்ளது. பூமியில் 21 சதவீதம் வாயு நிலையிலும், 45 சதவீதம் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலும் ஆக்ஸிஜன் உள்ளது. கார்பன் டை ஆக்ஸைடு 1.4 சதவீதம் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக நைட்ரஜன் உள்ளது.
இவ்வளவு அறிய தகவல்களைத் தந்த இந்த விண்கலம் விரைவில் தன்னுடைய பணியை முடிக்கப் போகிறது.
பன்னிரண்டு ஆண்டு காலமாக சனிக்கோள் குறித்து நாசா நடத்தி வந்த ஆராய்ச்சி முடிவுக்கு வரவிருக்கிறது. கூடிய விரைவில் கோளின் மேல்பரப்பில் காசினி சிதறி செயல் இழக்கவுள்ளது. சனிக்கிரகத்தின் வட்டப்பாதை, வளிமண்டலம், வேற்றுக் கிரகம் ஒன்று மோதியதால் உருவான நிலவு போன்ற அறிவியல் ஆச்சரியங்களை உலகுக்கு வெளிப்படுத்திய பின்னரே காசினி தன் ஆயுட்காலத்தை நிறைவு செய்யவுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் தனது அனைத்து மோட்டார்களையும் இயக்கி சனிக்கோளின் ஈர்ப்புவிசையுடன் சேர்ந்து சனிக்கோளின் மேற்பரப்பில் பயணிக்கும். சனிக் கிரகத்தின் இறுதி வளையங்கள் வழியே ஊடுருவி உள்ளே செல்லும். இறுதியாக காசினி விண்கலத்தில் புற இணைப்பு பாகங்கள் தனியாக வீசி எரியப்பட்டு அனைத்தும் வெடித்துச் சிதறிவிழும். இறுதியாக காசினி விண்கலத்தில் சிறிய ராக்கெட் வெடித்து வெளியேறும். அதன் பிறகு 96 நிமிடம் தீப்பிழம்புகளை கக்கிக்கொண்டு சனிக்கோளின் மேற்பரப்பைச் சென்றடையும். சனிக்கோளின் மேற்பரப்பு நமது பூமியைப் போன்று தரைத்தளம் கொண்டது அல்ல கடினமான வாயுக்களாலான கோளமாகும், ஆகவே காசினி இந்த வாயுக்களின் இடையில் சிக்கி அதன் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறி சனிக்கோளுடன் கலந்துவிடும்.
சனிக்கிரகம் குறித்த பல புரிதல்களை ஏற்படுத்தியுள்ள காசினி, விஞ்ஞானிகளின் அறிவியல் பார்வைக்கு மாற்றுச் சிந்தனையை அளித்துள்ளது. நாசா மட்டுமல்லாது பன்னாட்டு அறிவியலார்களும் காசினியை மகத்தான சாதனையாகவே கருதுகின்றனர்.
காசினி அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மூலம் அழகான சனிக்கிரகத்துக்குள் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கான விடையை உலகம் தெரிந்துகொண்டது. <