நில்லாத நேரம்
மாலை நேரம் பள்ளி விட்டு குழந்தைகள் அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். எட்டாம் வகுப்புப் படிக்கும் தன் மகன் அகிலன் மட்டும் இன்னும் வரக்காணோமே என ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்தார் அம்மா மலர்க்கொடி. மாலை 5.30 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான் அகிலன். அம்மா மலர்க்கொடி, “ஏன்டா… பள்ளிக் கூடம் விட்டு எல்லாப் பிள்ளைகளும் எப்பவோ வந்துட்டாங்க. நீ மட்டும் ஏன் இவ்வளவு நேரங்கழிச்சு வர்றே?’’ என கோபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் பசங்களோட பள்ளிக்கூட மைதானத்திலே விளையாடிக் கிட்டிருந்தேன். நேரம் போனதே தெரியலம்மா”… என்றான் அகிலன்.
“தெரியாது! தெரியாது! விளையாடும்போது… டி.வி. பாக்கும்போது… தூங்கும் போதெல்லாம் நேரம் போறதே தெரியாது. படிக்கும்போது, எழுதும்போது… எதாவது வேலை சொன்னா செய்யும்போதெல்லாம் நேரமே இருக்காது. இல்லேன்னா சீக்கிரமா நேரமாயிடும். போ…போ… போயி கையை, காலைக் கழுவிட்டு வந்து பலகாரம் சாப்பிடு…’’ என்றார் அம்மா. அகிலனும் புத்தக மூட்டையை இறக்கி வைத்துவிட்டு முகம் கழுவச் சென்றான்.
“ம்… எப்பதான் இந்தப் பயலுக்கு நேரத்தோட அருமை புரியுமோ” என தனக்குள் புலம்பிக் கொண்ட அம்மா, தான் சுட்டு வைத்த இனிப்புப் பனியாரத்தை தட்டில் எடுத்து வைத்தார். முகத்தை துடைத்துக் கொண்டே வந்த அகிலன், “அம்மா நாளைக்கு காலையிலே ஆறு மணிக்கெல்லாம் நான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்மா…’’ “காலையிலே ஆறு மணிக்கா எதுக்கு?’’ என ஆச்சரியமாய் கேட்டார் அம்மா. “என்னம்மா.. மறந்துட்டிங்களா? நாளைக்கு பெங்களூருல நடக்கிற அறிவியல் கண்காட்சிக்கு எங்களையெல்லாம் கூட்டிக்கிட்டுப் போறாங்கன்னு போனவாரமே சொன்னேனே…’’ என்றான் அகிலன்.
“ஆமாமா! நான்தான் மறந்துட்டேன். சரி சரி… படிக்கவேண்டியது, எழுத வேண்டியதையெல்லாம், வேகமா முடி. நீ எடுத்துக்கிட்டு போக வேண்டிய துணி மணியெல்லாம் அந்த பையிலே எடுத்து வச்சிட்டு, சீக்கிரமா சாப்பிட்டுட்டு படுத்துத் தூங்கு” என்று சொல்லிவிட்டு சமையற்கட்டுக்குள் நுழைந்தார் அம்மா.
இரவு மணி பத்திருக்கும். அகிலனின் அப்பாவும் வீட்டில் இருந்தார். தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. அகிலன் அதைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். “அகிலன்! காலையிலே ஆறு மணிக்கெல்லாம் போகணும்னு சொன்னே. இன்னும் டி.வி. பாத்துக்கிட்டிருக்கியா? போ போயி படு… அப்பதான் காலையிலே சீக்கிரமா எழுந்திருக்க முடியும்’’ என்றார் அகிலனின் அம்மா மலர்க்கொடி. “இதோ போறேம்மா!” என்று சொல்லிக் கொண்டே தொலைக்காட்சியை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பாவும், “எனக்கு தூக்கம் வருது. தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு வந்து படு” என்று சொல்லியபடி போய் படுத்துவிட்டார். அகிலன் இரவு 12 மணி வரை அந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் தூங்கப்போனான்.
அகிலன் காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது கடிகாரம் மணி எட்டு என காட்டியது. கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து பார்த்தான். “அய்யய்யோ! நேரமாகிவிட்டதே’’ எல்லாரும் தன்னை விட்டுட்டு பெங்களூரு போயிருப்பார்களே என பயந்தபடி வேக வேகமா கிளம்பி ஓடினான் பள்ளிக்கு.
“தொடர் வண்டி 7.30 மணிக்கு என்பதால் வெகுநேரம் காத்திருந்துவிட்டு எல்லோரும் புறப்பட்டுப் போய்விட்டார்கள்’’ எனச் சொல்லி தலைமை ஆசிரியர் அகிலனைத் திட்டினார். தான் செய்த தவறால்தான் இப்படி ஆனது என்பதை எண்ணி வருத்தத்துடன் வீடு திரும்பினான் அகிலன்.
வீட்டுக்கு வந்ததும் அம்மா அப்பா இருவரிடமும் கோபித்துக் கொண்டான். “நான்தான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். நீங்களாவது என்னை எழுப்பி அனுப்பியிருக்கலாமில்லே”… என்றான் அகிலன். “காலையிலே அஞ்சு மணியிலேயிருந்து அம்மா உன்னை அகிலன் மணி ஆச்சு… எழுந்திரு எழுந்திருன்னு பலதடவை சொல்லுச்சு. நானும் உன்னை உலுக்கி உலுக்கி எழுப்பிப் பார்த்தேன் மணி ஆறாச்சுன்னு சொன்னா… பரவாயில்லே… நான் லேட்டா போயிக்கிறேன்னு சொல்லி தூங்குனே… நாங்க என்ன செய்ய முடியும்!” என்றார் அப்பா.
“அகிலன்! இதுதான் உனக்குப் பாடம். கால தாமதத்தாலே ஒரு நல்ல வாய்ப்பை இழந்துட்டே… இனிமேலாவது ஒவ்வொரு செயலையும் நேரங்காலத்தோட செய்யப் பழகு. அதுதான் உனக்கு அழகு” என்றார் அம்மா.
தலைமை ஆசிரியர் கடிந்து கொண்டதால் மனவருத்தத்தில் இருந்த அகிலன் இரவு உணவைக் கூட சரியாகச் சாப்பிடாமல் படுக்கப்போனான். படுக்கையில் படுத்திருந்தாலும் தூக்கம் வரவில்லை.
கடிகாரத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான் அகிலன்.
திடீரென கடிகாரம் சிரித்தது. “என்ன அகிலன் அப்படி பாக்குறே. என்னைப் பாத்தியா யாருக்காகவும் எப்பவும் வேகமாகவோ, அல்லது மெதுவாகவோ ஓடுறதே இல்லை. எனக்குன்னு இருக்கிற கால அளவுப்படிதான் ஓடுறேன். அதனாலதான் எப்பவும் என் நேரம் சரியாயிருக்கு.
ஆனா! மனிதர்கள் நீங்க சரியா நடந்துக்காம விட்டுட்டு அப்புறம் நேரம் சரியில்லேன்னு என்னை குறை சொல்றிங்க.
ஒரு நாளைக்கு இருபத்து நாலுமணி நேரங்கிறது உலகத்தில உள்ள ஏழை, பணக்காரன், ஆண், பெண் எல்லாருக்கும் பொதுதான்.
அதுல பத்துலயிருந்து பன்னிரண்டு மணி நேரத்தை ஓய்வு, உறக்கம்னு சுய தேவைக்காக செலவு செய்யுறிங்க. மீதி பன்னிரண்டு மணிநேரத்தை முறையா, சரியா, கவனமா பயன்படுத்துனா எல்லாருக்குமே நேரம் சரியா கை கொடுக்கும். மனிதர்கள் பலபேரு ராகுகாலம், எமகண்டம், நல்ல நேரம், கெட்டநேரம்னு பலமணிநேரத்தை வீணாக்கிட்டு பின்னாடி வருத்தப்பட்டு நிக்கிறாங்க. இங்க நாம பாக்குற எமகண்டத்துலேயும், ராகு காலத்திலேயும் பல நாடுகள்லே பல நல்ல செயல்களைச் செய்து முன்னேறிக்கிட்டே இருக்காங்க.
உலகம் முழுக்க பல விமான நிலையங்களிலேயும், தொடர் வண்டி நிலையங்களிலேயும் அந்த நேரத்திலே விமானமும், தொடர் வண்டிகளும் புறப்பட்டுப் போயிக்கிட்டுதான் இருக்கு. எல்லா நேரமும் முறையாப் பயன்படுத்துனா எல்லாருக்கும் நல்ல நேரம் தான். உலகத்திலே பலபேர் பின்பற்றக்கூடிய ஒரே மதம் “தாமதம்” தான்.
ஒரு செயலை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டா நமக்கு கிடைக்கிற வெற்றியை நாமே தள்ளிப்போடுறோம்னு பொருள்.
நில்லாத நேரத்தை பொல்லாத நேரம்னு சொல்லி தன்னைத்தானே ஏமாத்திக்காம கவனமா இருந்தா எல்லாராலேயும் சிறப்பா மகிழ்ச்சியா வாழ முடியும். அதுக்கு நேரத்தை திட்டமிட்டு செலவு செய்யிறதுதான் சிறந்த வழி. பணத்தை செலவு செய்யிறதைவிட சிக்கனமா நேரத்தை செலவு செய்யணும். ஏன்னா செலவழிச்ச பணத்தை எப்ப வேணும்னாலும் திரும்ப சம்பாதிச்சிட முடியும். கடந்துபோன ஒரு நொடியைக்கூட நம்மாலே திரும்பப் பெறவே முடியாது. அதனாலேதான் காலம் பொன் போன்றதுன்னு சொன்னாங்க.
நம்ம நேரத்தை மட்டும் பார்க்காமல் அடுத்தவங்க நேரத்தையும் வீணாக்காம இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது. அடுத்தவங்களோட நேரத்தை கொள்ளை அடிக்கிறது மன்னிக்க முடியாத குற்றம்.
பல சமயத்தில நமக்கு நேரமில்லாமல் போறதுக்குக் காரணம் தேவையில்லாத வேற விஷயங்களுக்காக நாம நேரத்தை விரயமாக்கினதாத்தான் இருக்கும். எந்தச் செயலுக்கு முக்கியத்துவம் தரணும்னு திட்டமிட்டு கவனமா செயல்பட்டா எடுத்த எல்லா காரியத்துலேயும் வெற்றி பெறலாம். இதைத்தான் ஆங்கிலத்துலேTime Management t அப்படீன்னு சொல்றாங்க.
இதை உணர்ந்து நடந்தா நீ எல்லா செயலையும் சிறப்பா செய்து எல்லார்கிட்டேயும் நல்லபேர் வாங்க முடியும். புரிஞ்சுதா!”
“புரிஞ்சுது! புரிஞ்சுது!” என உரக்கக் கூறியபடி படுக்கையை விட்டு துள்ளி எழுந்தான் அகிலன்.
“அகிலன்… கடிகாரம் பேசுற மாதிரி அம்மாதான் இப்ப பேசுனாங்க!” என்றார் அப்பா.
நேரத்தின் அருமையை தனக்கு உணர்த்திய தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் அகிலன். பிஞ்சுகளே… நீங்க எப்படி?
– கலைவாணன்