பெரியார் செய்த குறும்பு
நாகம்மையை தன் கொள்கைப்படி மாற்றுவதற்காக பெரியார் செய்த குறும்புகள் ஏராளம்.
அதில் இதுவும் ஒன்று, பெரியாருக்கு கோயிலுக்கு செல்வது பிடிக்காது. நாகம்மை கோயிலுக்குப் போவதைத் தடுக்க விரும்பினார்.
ஒரு திருவிழா வந்தது. நாகம்மை கோயிலுக்குப் போனார்.
பெரியார் மைனர்போல் வேடம் போட்டுக்-கொண்டார். தன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போனார்.
நாகம்மையை கூட்டாளிகளுக்குக் காட்டி ‘இவள் யாரோ புதிய தாசி, இவளை நம் வசமாக்க வேண்டும். அவள் நோக்கத்தை அறிய முயற்சி செய்யுங்கள்’ என்றார்.
அவர்களும் நாகம்மையை நெருங்கினர். கேலி செய்தனர். நாகம்மை பயத்தால் துடித்தார். கை கால் நடுங்கினார். வியர்வையால் நனைந்தார். ஒருவாறு சமாளித்துக் கொண்டு அந்தப் போக்கிரிகளிடமிருந்து தப்பினார்.
வீட்டிற்கு வந்து பெரியாரிடம் கோயிலில் நடந்த சம்பவத்தைப் பற்றி கூறினார்.
பெரியார் நல்லபிள்ளை மாதிரி பதில் சொன்னார். ‘நீ ஏன் கோயிலுக்குப் போனாய்? அதனால்தான் இந்தத் துன்பம்.’ அதற்குப் பிறகு நாகம்மை கோயிலுக்குப் போவதை நிறுத்திவிட்டார். அ
பெரியார் செய்த வேடிக்கை
நாகம்மையாரை மூடநம்பிக்கை-யற்றவராக செய்ய வேண்டும் என்பது பெரியாரின் ஆசை.
பெண்களுக்குத் தாலியின் மேல் உள்ள நம்பிக்கை மூடத்தனமானது என்பது பெரியாரின் கருத்து.
நாகம்மையாருக்கோ தாலியின் மீது அதிக பக்தி.
ஒரு நாள் இரவு பெரியார் நாகம்மையாரை தாலியை கழற்றி விடும்படிச் சொன்னார்.
‘தாலியைக் கழற்றுவது கூடாது’ என்று கெஞ்சினார் நாகம்மை.
‘நானே பக்கத்தில் இருக்கும்போது தாலி எதற்கு? நான் ஊரில் இல்லாதபோதுதான் தாலி இல்லாமல் இருக்கக் கூடாது’ என்ற பெரியார் ஒரு கதையை அளந்தார்.
நாகம்மையும் அதை உண்மை என்று நம்பிவிட்டார். தாலியை கழற்றி பெரியாரிடம் கொடுத்தார். பெரியார் சட்டைப் பையில் போட்டுக்கொண்டு தூங்கிவிட்டார். நாகம்மையும் விடிந்தவுடன் தாலியை கேட்க மறந்துவிட்டார். பெரியாரும் கொடுக்க-வில்லை.
பிறகு, நாகம்மைக்கு தாலியின் நினைப்பு வந்தது. சேலைத் தலைப்பால் தன் கழுத்தை மறைத்துக்கொண்டு நடமாடினார். பெரியாரின் அம்மா உண்மையைக் கண்டுபிடித்து விட்டார். தாலி எங்கே? என்றார். மற்ற பெண்களும் அங்கே கூடிவிட்டனர். கேலி செய்தனர்.
நாகம்மைக்கு கோபம் வந்தது. ‘கணவர் ஊரில் இருக்கும்போது தாலி எதற்கு?’ என்று ஒரு போடு போட்டார்.
‘புருஷனுக்கேற்ற பொண்டாட்டிதான் அம்மா நீ’ என்றனர் எல்லோரும், நாகம்மையைப் பார்த்து. <