ஆகாய வீடு
உழவுப் பூங்காவுல எப்பவுமே கூட்டம் இருந்துட்டே இருக்கும். அதுவும் சனி, ஞாயிறுகளில் சொல்லவே முடியாத அளவுக்குக் கூட்டம் இருக்கும்.
அந்தப் பூங்காவுல இருந்த மரத்தடியில்தான் கணபதியும், கவினும் எதையோ பேசிக்கிட்டிருந்தாங்க.
“டேய் கிரி! இந்தக் கோடை விடுமுறைக்கு எங்கடா போயிருந்தே?’’ என ஆரம்பித்தான் கணபதி. இந்தக் கேள்விக்காகக் காத்திருந்த கவின் பேச்சைத் தொடர்ந்தான்.
“நான் விண்வெளி வீட்டிற்குப் போயிருந்தேன்’’ என்று புதிர் போட்டான்.
“விண்வெளி வீடா?’’
“அது யாரு வீடுடா? உங்க சொந்தக்காரங்க வீடா?’’ என்றான் கணபதி.
வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “விண்வெளி வீடு, எங்க சொந்தக்காரங்க வீடெல்லாம் கிடையாது. முதல்ல அந்த வீடு இந்த பூமியிலேயே இல்ல. ஆகாயத்துல இருக்கு. அதுக்கு ராக்கெட்டுல மட்டும்தான் போக முடியும்’’ என்ற வரிசையாகப் புதிர் போட்டு முடித்தான் கிரி.
‘கணபதியின் புருவங்கள் உயர்ந்தன’
‘என்ன கதை சொல்றயா? அந்த வீட்ட நீயா கட்டின? யாரை ஏமாற்றப் பார்க்குற? ஆகாயத்துல எப்படி வீடு கட்ட முடியும்? அதுக்கு அஸ்திவாரம் எப்படி தோண்டுவ?’’ என்ற கணபதியின் கேள்வியில் உண்மை கலந்த கோபம் இருந்தது.
“நான் ஒண்ணும் பொய் சொல்லல, அந்த வீட்டை நான் கட்டல. அமெரிக்கா, ரஷ்யா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான் போன்ற 11 நாடுகள் சேர்ந்து விண்வெளி நிலையத்தைக் கட்டியிருக்காங்க. இது கிட்டத்தட்ட கால்பந்து மைதானத்தைவிட நீளமாக இருக்கும்’’ என்று விளக்க முயன்றான் கவின்.
“என்னடா சொல்ற, கேட்கறதுக்கே புல்லரிக்குதுடா, அங்க யாரெல்லாம் இருப்பாங்க. ரோபோவா? மனிதர்களா?’’ என்றான் கணபதி.
“ரோபோக்கள் எல்லாம் அங்கே கிடையாது. மனிதர்கள் இருக்காங்க. விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே நட்சத்திரங்கள், வானிலை, கோள்களின் இயக்கம், பூமியில் ஏற்படும் மாற்றம், இதைப்பற்றி எல்லாம் ஆய்வு செய்வாங்க.”
இதைக் கேட்டுகிட்டு விண்வெளி நிலையம் இப்படி இருக்குமோ எனக் கற்பனை பண்ண ஆரம்பிச்சுட்டான் கணபதி.
“அதுமட்டும் இல்லாம உயிரியல், இயற்பியல், விண்வெளி ஆய்வு, வானிலை போன்றவற்றை ஆய்வு செய்ய தனித்தனியா பரிசோதனைக் கூடம் இருக்கு.”
“நாம இங்க தினமும் சாப்பிடுறோம், விளையாடுறோம், டி.வி. பார்க்கிறோம். அப்ப விண்வெளி நிலையத்துல இருக்கவங்க… இதற்கெல்லாம் என்ன பண்ணுவாங்க?’’ என ஆர்வம் பொங்கக் கேட்டான் கணபதி.
“தினமும் காலையில ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருச்சிடுவாங்க. 7 மணிக்கு உடற்பயிற்சி செய்து முடிச்சுட்டு உடனே காலை உணவு,
8 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதுல விண்வெளி வீரர்கள் ஒரே இடத்தில் கூடி தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்புகொண்டு பேசுவார்கள். அப்போது நண்பர்கள், உறவினர்களிடமிருந்து வந்த தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படும். இது முடிஞ்சு சரியா 10.30 மணிக்கு வேலை தொடங்கிவிடும்.
மதியம் 1 மணிக்கெல்லாம் உணவு இடைவேளை. இடைவேளை முடிஞ்சதும்,
2 மணிக்கு மறுபடியும் வேலை தொடங்கி 5 மணிக்கு முடிந்துவிடும்.”
“நமக்கு இங்க வகை வகையா உணவு கிடைக்குது. அங்க என்ன பண்ணுவாங்க?’’ என்று கேட்டான் கணபதி.
“நீ சொல்றது சரிதான். ஒரு காலத்துல அவர்களுக்கு உணவுகளை மாத்திரையாகவும், பல்துலக்கும் பேஸ்டுகளாகவும்தான் கொடுப்பாங்களாம். ஆனா, இப்பெல்லாம் மீன், கறி, நண்டு, கேக் என எல்லா வகையான உணவும் அங்க கிடைக்குது. விண்வெளி வீரர்களை உற்சாகப்படுத்த நாசா பிறந்தநாள் கேக்கையும் அனுப்பி வைக்குதாம்’’ என்று பட்டியலிட்டான் கவின்.
“சிறு சிறு விளையாட்டு, புத்தகம் படித்தல், டி.வி. பார்த்தல், இசை கேட்டல் என அங்கேயும் எல்லா பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு’’ என்றான் கவின்.
“சரி. இந்த விண்வெளி நிலையம் ஒரே இடத்துல இருக்குமா? இல்லை நகர்ந்துகிட்டே இருக்குமா?’’ என ஆர்வம் குறையாமல் கேட்டான் கணபதி.
“இது பூமியில இருக்குற வீடுகள் மாதிரி ஒரே இடத்துல இருக்காது. மேகங்களைப் போல நகர்ந்துகிட்டே இருக்கும். இதுவரைக்கும் 87,600க்கும் மேலான தடவை நம்ம பூமியைச் சுற்றி வந்திருக்கு. விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மிதந்தபடிதான் போக வேண்டும். இங்க நடக்கிற மாதிரியெல்லாம் அங்க நடக்க முடியாது. பறக்கத்தான் முடியும்’’ என்றான் கவின்.
இதைக் கேட்டதும் கணபதியின் தலை சுற்றி நின்றது.
“நீ சொல்றத கேட்டதும் ரொம்ப ஆச்சரியமா இருக்குதுடா, எனக்கு அங்க போகணும்போல இருக்கு கவின்’’ _ என்றான் கணபதி.
“கவலைப்படாதடா அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு கண்டிப்பாக நாம விண்வெளி நிலையத்திற்கு போகலாம்’’ என்று சொல்லிக்கொண்டே இருவரும் தங்கள் வீடுகளை நோக்கி நடந்தனர்.
– உமையவள்