அக்கா தம்பியும் அக்கா தம்பியும்
அக்காவும் தம்பியும் மினியேச்சர் உருவங்களை செய்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்கள். பூதக்கண்ணாடி வைத்து சின்னச் சின்ன உருவங்-களை உருவாக்க ஆரம்பித்தார்கள். அரிசியில் முதலில் பெயரை எழுத ஆரம்பித்தார்கள். “அதனை எல்லோரும் செய்கின்றார்கள். நாம் ஏதேனும் புதுமையாக செய்யலாம்’’ என்றான் தம்பி.
“அக்கா, நாம ஒரு எறும்பு வீடு செய்வோமா? அழகான அறை. படுக்கை. சாப்பாடு அறை செய்வோம். அழகான வண்ணத்தில் செய்து வைப்போம். இரண்டு எறும்புகளை பிடித்து உள்ளே போடுவோம். சாப்பாடு வைக்க ஒரு இடத்தை மட்டும் திறந்து வைப்போம்’’ என்று கூறினான்.
“அடடா நல்ல யோசனையாக இருக்கே’’ என்று அக்காவும் தம்பியும் அந்த வேலையில் இறங்கினார்கள். எறும்புக்கு அழகான வீட்டினைச் செய்ய ஆரம்பித்தார்கள். எறும்பின் வீடு எப்படி இருக்கும் என்று முதலில் அவர்களால் கற்பனை செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரியதாக இருக்கும் எவ்வளவு உயரத்திற்கு அறை இருக்கும் என முடிவு எடுக்க முடியவில்லை. எறும்பை விட எல்லாமே பத்து மடங்கு அதிகமாகச் செய்யலாம் எனத் தம்பி கூறினான். மிகச்சிறிய கட்டில் ஒன்றினையும் எறும்பிற்குப் போர்வையையும் தயார் செய்தனர். இரண்டு குட்டிக் கட்டில்கள் தயாரானது. ஒரு குட்டி மேசையும், ஒரு குட்டி இருக்கையும் செய்ய யோசித்தார்கள். “அவங்க டேபிள்ல உட்கார்ந்தா சாப்பிடுவாங்க’’ என்ற கேள்வியால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அக்கா.
ஒரு மாதத்திற்கு பிறகு எறும்பின் வீடு தயாரானது. பள்ளிக்கு சென்று வந்த பிறகு கிடைத்த நேரத்திலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஓய்வு நேரத்திலும் எறும்பின் வீட்டினைச் செய்தனர். உள்ளே அழகிய வண்ணங்களைத் தீட்டினர்.
“அக்கா, இப்ப நாம எறும்புகளை இங்கே கொண்டு வரவேண்டும்’’ என்றான். அதற்கும் அவனே திட்டம் போட்டான். வீட்டில் எந்த பகுதியில் எறும்புகள் இருக்கின்றது எனத் தேடினான். வீட்டிற்குள் அவை எங்கும் இல்லை. தோட்டத்தில் ஓர் இடத்தில் எறும்புப் புற்று இருப்பதைப் பார்த்தான். ஒரு தாளில் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு புற்றின் அருகே வைத்தான். அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது அதில் ஒரே ஒரு எறும்பு இருந்தது. “ஹைய்யா..’’ எனத் துள்ளிக் குதித்தான்.
“அக்கா…’’ “அக்கா…’’ “அக்கா… எங்க இருக்க. நான் எங்கயோ மாட்டிகிட்டேன். என்னை காப்பாத்து’’ என கத்திக்கொண்டே இருந்தது தம்பி எறும்பு. அது மாட்டிக்கொண்டு இருந்த தாளை யாரோ எடுப்பது அதற்குத் தெரிந்தது. “எங்கோ அழைத்துச் செல்கின்றார்கள், நாம மாட்டினோம்’’ என நினைத்துக்கொண்டது தம்பி எறும்பு. மேலே இருந்து தாள் மடிப்பு திறந்து விடப்பட்டதும் அழகிய மாளிகைக்குள் சென்றது போன்ற உணர்வு. அழகான குட்டிக் கட்டில்களும் குட்டிப் போர்வையும், சின்னச் சின்ன சன்னல்களும் இருந்தன. நான்கு கண்கள் தம்பியைப் பார்ப்பது போல இருந்தது. ஆனாலும் பாதுகாப்பாக எண்ணியது.
“அக்காவை எப்படியாவது இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டும். அக்கா மகிழ்வாள்’’ என எண்ணியது. சின்னக் கதவு வழியே வெளியே சென்றது. தான் வந்த பாதையை நினைவில் வைத்துக்கொண்டது. தோட்டத்தின் பக்கம் எந்த திசை என அங்கே சென்ற கரப்பான்பூச்சியிடம் கேட்டுக்கொண்டது. கரப்பான் வழிகாட்ட தோட்டத்தை அடைந்து அதன் பொந்தினை அடைந்தது. அக்காவிடம் காதில் ரகசியமாக வெளியே வா என அழைத்தது. “என்னடா தம்பி, என்னாச்சு சொல்லு’’ என வெளியே வந்தது. அங்கே எறும்புகள் கூட்டமாக வாழ்ந்து வந்தன.
“அக்கா உனக்கு நான் ஒரு மாளிகை கண்டுபிடிச்சி இருக்கேன். வா என்கூட’’ என்றது வந்த வழியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றது. எறும்பு வீட்டின் கதவைத் திறந்தது. அவர்களுக்கு உள்ளே ஓர் ஆச்சர்யம் காத்து இருந்தது. அழகிய வீட்டிற்குள் சின்ன டப்பாவிற்குள் சர்க்கரை. மூன்று நாட்கள் அதனைச் சாப்பிடலாம். வேலையே செய்யத் தேவையில்லை.
கட்டிலில் இருவரும் படுத்துக்கொண்டார்கள். மகிழ்வாகக் கதைகள் பேசினார்கள். உறங்கினார்கள். மறுநாள் காலை எழுந்தார்கள். சாப்பிடச் சாப்பிட சர்க்கரை நிரம்பிக்கொண்டே இருந்தது. யாரோ நிரப்பிக்கொண்டே இருந்தார்கள். மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது. நான்காம் நாள் காலையில், “தம்பி, நாம நம்ம இடத்துக்கே போகலாம். நம்ம உணவைத் தேடிச் சாப்பிட்ற சுகம் இதில வரல. அதுவும் இல்லாம நம்ம நண்பர்கள் உறவினர்கள் கூட பாதி வயிறு சாப்பிட்டாக்கூட போதும். வா’’ என்று இருவரும் கிளம்பிவிட்டனர்.
ஏன் எறும்புகள் காணாமல் போனது என அக்காவும் தம்பியும் குழம்பினார்கள். அந்த எறும்பின் வீட்டினை எறும்புப் புற்றுக்கு அருகிலே வைத்துவிட்டார்கள். எறும்பின் வீடு எறும்புகளின் சுற்றுலாத் தலமானது.