எல்லாம் இனிதாகும்

வண்ணம் தூரிகை
வசமாய் ஆகிடின்
வரையும் ஓவியம்
வனப்பாய் ஆகிடும்!
கண்ணும் பார்வையும்
கனிவாய் ஆகிடின்
காணும் காட்சியும்
களிப்பாய் ஆகிடும்!
துன்பம் நேர்கையில்
துணிவாய் ஆகிடின்
தோள்கள் தாங்கிடும்
துணையாய் ஆகிடும்!
உண்மை நாவினில்
உருவாய் ஆகிடின்
உன்பேர் ஊரினில்
உயர்வாய் ஆகிடும்!
மண்ணில் நேர்மையும்
மலராய் ஆகிடின்
மனித நேயமும்
மணமாய் ஆகிடும்!
எண்ணம் யாவும்
இனிதாய் ஆகிடின்
எல்லாம் வாழ்விலும்
இனிதாய் ஆகிடும்!
– தளவை இளங்குமரன்
இலஞ்சி, திருநெல்வேலி