படிச்சா மட்டும் போதாது பல்லவி
“எல்லோரும் ஒரு சார்ட் பேப்பரில் பத்து முழக்கங்களை எழுதி வாருங்கள்” என்று சொல்லிவிட்டார் ஆசிரியர். இந்த வாரம் சுற்றுச்சூழல் வாரத்தை பள்ளி விமரிசையாகக் கொண்டாடுகின்றது. நாளும் காலை பள்ளிக் கூட்டத்தில் ஒரு மாணவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பினைப் பற்றி பேசுகின்றார். பல்லவிக்கு என்ன எழுதி வருவது என தெரியவில்லை. அப்பா வெளியூர் போய் இருக்கின்றார். அம்மாவைக் கேட்டதற்கு எனக்குத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் பல்லவிக்கு தன் வீட்டின் அருகில் இருக்கும் நூலகம் செல்லும் பழக்கம் இருந்தது. நூலகரும் குழந்தைகளிடம் பாசமாக நடந்து கொள்பவர். “மாமா, எங்க பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் கொண்டாடுகிறோம். எனக்கு பத்து முழக்கங்கள் வேண்டும் மாமா, சில புத்தகங்களை எடுத்துத் தாங்களேன்” என்றாள். இன்னும் ஒரு மணி நேரத்தில் நூலகம் மூடிவிட வேண்டும். சில புத்தகங்களை எடுத்துக்கொடுத்தார். அதில் இருந்து அய்ந்து முழக்கங்களை எழுதினாள். மீதி அய்ந்திற்கு மீண்டும் நூலகரிடமே வந்தாள். “இந்த உலகினை பத்திரமாக நாம பாதுகாக்கணும் அதற்கு என்னவெல்லாம் நாம செய்யணுமோ அதைத்தான் முழக்கமா எழுதணும். நீயே எழுது பார்க்கலாம்” என்று ஊக்குவித்தார். பல்லவி தட்டுத்தடுமாறி மீதி அய்ந்தினைத் தானே எழுதினாள். “எழுதினா மட்டும் போதாது பல்லவி இதன்படி நீ நடக்க வேண்டும்” என்றார்.
அம்மாவிடம் முழக்கங்களை இரவு காட்டினாள். “அம்மா, நம்ம தோட்டத்தில் மரம் வைக்கலாமா?” என்றும் விண்ணப்பித்தாள். அம்மாவும் “சரி” என்றார். காலை எழுந்தபோது “என்ன பல்லவி கனவில் எல்லாம் முழக்கம் சொல்ற? மரத்தினை காப்போம். மண்ணை காப்போம்னு கத்திட்டே இருந்தடா” என்றார். பள்ளிக்குக் கிளம்பும்போது அந்தக் முழக்கங்கள் கொண்ட விளக்கப்படத்தினை சுருட்டி பத்திரமாக எடுத்து வைத்தாள்.
“பள்ளி வகுப்பில் நாம இப்ப இந்த முழக்கங்களைக் கத்தியபடி பள்ளியைச் சுற்றி இருக்கும் நான்கு வீதியில் சுற்றி வர இருக்கோம். போகலாமா?” என்றார் ஆசிரியர். வகுப்பினை விட்டு வெளியே என்றால் தான் குழந்தைகளுக்கு கொண்டாட்டமாச்சே. எல்லோரும் வரிசை கட்டி நின்றுகொண்டார்கள். மாணவத் தலைவி என்னென்ன முழக்கம் போடவேண்டும் என ஒரு தாளில் எழுதிக்கொண்டாள். அவள் கூற மற்ற மாணவர்கள் திரும்பக்கூறினார்கள். அந்த நடை அவர்கள் ஒவ்வொருவருக்கும் மகிழ்வூட்டக் கூடியதாக இருந்தது.
நான்காவது தெருவின் முடிவில் எல்லோரும் நின்று தங்களிடம் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் குடித்தார்கள். முழக்கங்கள் ஓய்ந்தன. ஆனால் ஒரே ஒரு குரல் மட்டும் ஒலித்துக்கொண்டு இருந்தது. “மரத்தினைக் காப்போம், மண்ணைக் காப்போம்.” யாருடைய குரல் என்று எல்லோரும் தேட ஆரம்பித்தனர். அவர்கள் கடந்து வந்த ஒரு மரத்திற்கு கீழே இருந்து வந்தது. அது பல்லவியின் குரல்தான். அவள் அந்த மரத்திற்கு கீழே அமர்ந்துகொண்டிருந்தாள். அவள் அருகே கடப்பாறைகள் இருந்தன. ஆமாம் அந்த மரத்தை வெட்டுவதற்கு ஆயத்தமாக இருந்தனர்.
எல்லோரும் பல்லவியைப் பார்த்தார்கள். அவள் முழக்கத்தை நிறுத்தவே இல்லை. வெட்ட வந்தவர்கள் தேநீர் குடித்துவிட்டுத் திரும்பினார்கள். ஒரு மாணவி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு அதிர்ச்சியுடன் நின்றனர். “எம்மா பொண்ணு எழுந்து ஸ்கூல் போ” என்றார்கள்.
பல்லவி தொடர்ந்தாள். “மரத்தினைக் காப்போம், மண்ணைக் காப்போம்.” மாணவர் கூட்டத்தில் இருந்து குமார் அதே வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு பல்லவியின் அருகில் அமர்ந்தான். அதன் பின்னர் பாலு சென்றான். இப்படியாக ஒவ்வொருவராக அதே முழக்கம் எழுப்பியபடி மரத்தைச் சுற்றி அமர்ந்தனர். இவர்களை வழிநடத்திய ஆசிரியருக்கும் என்ன செய்வது என புரியவில்லை.
மரத்தை வெட்ட வந்தவர்கள் அவர்கள் மேல் அதிகாரிக்கு போன் செய்தார்கள். ஆசிரியர் தன் பள்ளிக்கு போன் செய்தார். சில நிமிடங்களில் மாணவர்களுடன் அவரும் அமர்ந்து கொண்டார். பல்லவி முன்மொழிய, எல்லோரும் அவள் சொல்வதையே கூறத் துவங்கினார்கள். சத்தம் கேட்டு வந்த தெருவாசிகளும் இவர்களுடன் அமர்ந்தார்கள். அரசு அதிகாரியும் வந்தார். செய்தியாளர்களுக்கும் செய்தி சென்றுவிட சிலர் கேமராக்களுடன் வந்துவிட்டனர்.
“இந்த மரத்தை அகற்ற மட்டோம்” என அதிகாரி உறுதியாக வாக்களித்த பின்னரே மாணவர்கள் எல்லோரும் கலைந்து சென்றனர். பல்லவி கடைசியாக எழுந்தாள். ஊரே அவளுக்குக் கை தட்டியது. தலைமை ஆசிரியர் அவளுக்குக் கை கொடுத்துப் பாராட்டினார். “நூலக மாமா கொடுத்த ஊக்கம்தான் காரணம்” என தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்தாள்.
இரவுச் செய்தியில் இந்தக் காட்சிகளைப் பார்த்த நூலகருக்கு கண்களில் நீர் நின்றபாடில்லை.