பிஞ்சுப் பருவம் பிற்கால வாழ்வின் அடித்தளம்
பிஞ்சுகளே, கட்டடம் கட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். முதலில் கட்டடத்திற்கேற்ப நிலத்தில் குழிதோண்டி, அடித்தளம் போடுவார்கள். அந்த அடித்தளத்தின் மீதுதான் எத்தனை மாடி கட்டடமானாலும் நிற்கும். எனவே, அந்த அடித்தளம் வலுவாக, சரியாக இல்லாமல் போனால் கட்டடம் வலுவாக இருக்காது, முறையாகவும் இருக்காது.
அப்படி மனித வாழ்வின் அடித்தளம் பிஞ்சுப் பருவந்தான். பிஞ்சுப் பருவத்தில் நீங்கள் எப்படி உங்களை உருவாக்கிக் கொள்கிறீர்களோ அப்படித்தான் உங்கள் எதிர்கால வாழ்வு அமையும். எனவே எதிர்காலம், வளமாக, நலமாக, மகிழ்வாக, பெருமையாக இருக்க வேண்டுமானால் அதற்கான அடிப்படையான செய்லகளை பிஞ்சுப் பருவத்திலே நீங்கள் செய்ய வேண்டும்.
அது ஒன்றும் கடினமான வேலை அல்ல. சிலவற்றை அறிந்து அதன்படி உங்கள் செயல்களை நீங்கள் செய்தாலே போதும்.
“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை”
“அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது” என்று கிராமத்தில் பழமொழிகள் உண்டு. இவை தங்கள் வாழ்வில், பெரியவர்கள் பட்டுணர்ந்து சொன்ன உண்மைகள். எனவே, பிஞ்சுப் பருவத்திலே நீங்கள் உங்களைச் சரியாக உருவாக்கிக் கொள்ள வேண்டுவது கட்டாயக் கடமையாகும்.
பழக்கங்கள்: நல்ல பழக்கங்களை ஏற்றல்:
சிறுவயது முதலே சுறுசுறுப்பையும், நல்ல பழக்கங்களையும் வளர்த்துக்கொண்டால் அது வாழ்நாள் முழுவதும் வரும்.
காலையில் 6 மணிக்கு எழுதல், கழிவு அகற்றல், பல் துலுக்கல், குளித்தல், நல்ல உணவுகளை உண்ணுதல் என்று எல்லா செயல்களையும் உரிய நேரத்தில் தவறாது செய்யப் பழகிக்கொண்டால், இப்பழக்கம் வாழ்நாள் முழுக்க வரும்.
கெட்ட பழக்கங்களை கைவிடல்:
பொய் பேசுதல், திருடுதல் போன்றவற்றை சிறுவயதிலே தவிர்க்க வேண்டும். சிறுவயதில் இவற்றைத் தொடர்ந்து செய்தால் பெரியவர் களானாலும் இந்த கெட்டத் தொழில்களை நீங்கள் செய்வீர்கள். எனவே, கெட்டப் பழக்கங்களைத் தவிர்த்து, நல்ல பழக்கங்களை பின்பற்றுவதைப் பிஞ்சுப் பருவத்திலே செய்ய வேண்டும்.
திறன் வளர்த்தல்:
ஓவியம், நாட்டியம், இசை, விளையாட்டு, பேச்சு, எழுத்து போன்ற திறமைகளை சிறுவயதில் வளர்ப்பது எளிது. சிறுவயதில் இவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால், பெரியவர் களானாலும் இவ்வார்வம் நிலைத்திருக்கும். பின்னாளில் இவற்றில் சாதிக்கவும், புகழ்பெறவும், வாழ்வில் உயரவும் வாய்ப்பு, வழிகிடைக்கும்.
இலக்குகள்:
இளம் வயதிலே ஏதாவது சில இலக்குகளை, குறிக்கோள்களை நீங்கள் வகுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக, விளையாட்டு வீரராக, நடிகராக, பாடகராக, இயக்குநராக, கவிஞராக, பொறியியல் வல்லுநராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக எப்படி வரவேண்டும் என்பதை நீங்களே உங்கள் விருப்பப்படி முடிவு செய்து அதை அடைய, பிஞ்சுப் பருவத்திலிருந்தே முயற்சி செய்ய வேண்டும்.
சிந்தனைத் திறன் வளர்த்தல்:
மனிதனுக்குள்ள தனிச் சிறப்பே சிந்தனைத் திறன்தான். யார் எதைச் சொன்னாலும், செய்தாலும் அது சரியா என்று சிந்தித்து சரியென்றால், உண்மையென்றால் மட்டும் ஏற்க வேண்டும்.
எந்தவொன்றைப் பற்றியும் நன்கு சிந்திக்க வேண்டும். அறிவியல் கருவிகள் எப்படி இயங்குகின்றன என்று அறிந்து, நாம் அதில் புதிதாக என்ன கண்டுபிடிக்கலாம், உருவாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.
நோய்கள் தீர, வராமல் தடுக்க, என்ன மருத்து? எதிலிருந்து தயார் செய்யலாம்? என்று சிந்தித்தால், நீங்களும் புதய மருந்துகளைக் கண்டுபிடிக்கலாம்.
இதற்கு நீங்கள் எது பற்றி ஆய்வு செய்கிறீர்களோ, சிந்திக்கிறீர்களோ அது பற்றிய நூல்களை நிறைய படிக்க வேண்டும்; அதுசார்ந்த செய்திகளை நிறைய கேட்க வேண்டும். எந்த அளவிற்கு பலவற்றைப் படிக்கின்றோமோ, கேட்கின்றோமோ அந்த அளவிற்கு நம் அறிவு வளரும். எனவே, பாடநூல்களை மட்டுமின்றி நம் ஆர்வத்திற்கும், ஆய்விற்கும் உரியவற்றையும் படிக்க வேண்டும்; கேட்க வேண்டும்.
பொதுத் தொண்டு:
சிறு வயது முதலே அடுத்தவர் நலனை விரும்புதல், அடுத்தவர்க்கு உதவுதல், மன்னித்தல், பொதுப் பணிகளாக மரம் நடுதல், தூய்மை செய்தல் போன்ற நற்பணிகளைச் செய்ய நம்மைப் பழக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களோடு பகை கொள்ளாமல், நட்போடு, உறவோடு இணக்கமாகப் பழக வேண்டும்.
கோபப்படுதல், தாக்குதல், இழிவான சொற்களால் பேசுதல் போன்றவற்றை விலக்க வேண்டும். அன்போடு பழகுதல், கருணையோடு பழகுதல் போன்ற நற்குண, நற்செயல்களைப் பிஞ்சுப் பருவத்திலே வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழ்வில் சாதித்தவர்கள், விஞ்ஞானிகள், நாட்டுக்குத் தொண்டாற்றியவர்கள், நேர்மையாக, தூய்மையாக வாழ்ந்தவர்களின் வரலாறுகளை சிறுவயதிலே படிக்க வேண்டும்.
இப்படி பிஞ்சுப் பருவத்தில் நீங்கள் வளர்த்துக் கொள்ளும் பழக்கம், திறமை, விருப்பம் போன்றவைதான் உங்கள் எதிர்கால வளர்ச்சியை, நன்மதிப்பைத் தீர்மானிக்கும் என்பதால், பிஞ்சுப் பருவத்திலே இவற்றில் நீங்கள் உங்களைச் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயக் கடமையாகும்.