பேசாதன பேசினால் 11
நெல்லி…. சொல்லிய சேதி
அரசுப் பள்ளி அய்ந்தாம் வகுப்பு ஆசிரியர் சுடரொளி சமூக அறிவியலில் உள்ள தமிழ் இலக்கியப் பாடத்தை சொல்லால் காட்சிப்படுத்தி சுவையாக கற்பித்துக் கொண்டிருந்தார்கள். வகுப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் மிக ஆர்வத்துடன் ஆசிரியர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“இன்றைய தருமபுரி மாவட்டம், அன்றைய தகடூர். அதனை ஆண்ட தமிழ் மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி, தனக்குக் கிடைத்த நெடுநாள் வாழும் உடல் நலத்தைத் தரும் நெல்லிக்கனியை தமிழுக்குத் தொண்டாற்றும் புலமை பெற்ற அவ்வை மூதாட்டிக்கு ஏன் தந்தான்? தனக்குக் கிடைத்த ஊட்டச்சத்து மிக்க நெல்லிக்கனியை தானே சாப்பிட்டு நீண்ட நாள் இந்த நாட்டை ஆட்சி செலுத்தலாம் என்று எண்ணாமல் வயது முதிர்ந்த அவ்வைக்கு அதைத் தந்ததன் நோக்கம் என்ன? நாடாளும் மன்னன் நீண்ட நாள் வாழ்வதைவிட தமிழ்மொழியில் ஒற்றை வரியில் உலகுக்கே நீதி சொல்லும் “ஆத்திச்சூடி” தந்த அவ்வை மூதாட்டி நெடுநாள் வாழ்ந்தால் இன்னும் பல நீதிநெறிகளை இந்த மனித குலத்துக்கு தமிழ்மொழியில் தர முடியுமே என்ற நல்ல எண்ணம்தான் காரணம்.
“அது மட்டுமல்ல… இன்றைக்கும் நம் ஊரில் எளிதாகக் கிடைக்கும் நெல்லிக்கனி மிகமிக சத்தான உணவாகும்” என சொல்லிக் கொண்டிருந்தார் ஆசிரியர் சுடரொளி.
பாடத்தை கவனித்துக் கொண்டிருந்த அதே வகுப்பில் படிக்கும் மகிழினிக்கு காலையில் தன் வீட்டில் நடைபெற்றது நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது மகிழினியிடம் அவள் அம்மா நான்கு நெல்லிக்காய்களைக் கொண்டு வந்து கொடுத்து, “இதைச் சாப்பிடு உடம்புக்கு நல்லது” என்றார்கள்.
“போம்மா.. உனக்கு வேற வேலையே இல்ல. இதைச் சாப்பிடு உடம்புக்கு நல்லது. அதைச் சாப்பிடு கண்ணுக்கு நல்லது. மூக்குக்கு நல்லதுன்னு சொல்லிக்கிட்டே இருப்பிங்க. கடையில பாக்கெட்ல விக்கிற… பிஸ்கட்டு, கேக்கு, சாக்லெட் அதுமாதிரி எதுவும் வாங்கித் தராதீங்க. எனக்கு இது வேண்டாம்” என்றாள் மகிழினி.
“அதெல்லாம் பாக்க அழகாயிருக்கிற ஆபத்து. சாப்பிடும்போது சுவையா இருக்கும். சாப்பிட்ட பிறகு உடம்புக்கு பகையா மாறிடும். அதிகமா தின்னா.. ஆஸ்பத்திரியிலேயே தங்குற நிலைமைக்கு ஆளாக்கிடும். அது வேண்டாங்கண்ணு. பல கடைகள்ல வியாபாரம் செய்யப்படுறதுனாலேயும், அடிக்கடி விளம்பரப்படுத்தப்படுறதுனாலேயும் ஒரு உணவுப்பொருள் உடலுக்கு நல்லதுன்னு நினைக்காதே. ஆபத்து.. அழகான வடிவத்துலேயும் இருக்கும். புரிஞ்சுக்க இந்தா இந்த ஒரு நெல்லிக்காயாவது எடுத்துச் சாப்பிடு…” என்றாள் அம்மா.
வேண்டா வெறுப்பாய் ஒரே ஒரு நெல்லிக்காயை மட்டும் எடுத்து பென்சில், ரப்பர் போட்டு வைக்கும் சின்னப் பெட்டியில் போட்டுக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினாள். தான் தன் அம்மாவிடம் வாங்கி பென்சில் பெட்டியில் போட்டு வைத்த அந்த நெல்லிக்காயை புத்தகப் பையில் கையை விட்டு வெளியில் எடுத்தாள். விரித்துப் பிடித்த புத்தகத்தின் இடையில் அந்த நெல்லியை வைத்தாள்.
“நெல்லிக்கனியான நான்”… எனத் தன்னிலை விளக்கம் தரத் தொடங்கியது நெல்லி.
“நான் மனிதனுக்கு இயற்கை தந்த பரிசு. அதிசயமான அற்புதமான கனி (Miracle Fruit) என்று பலரும் கூறுவார்கள். ஒரு ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் ‘சி’யைவிட 30 மடங்கு அதிகமான வைட்டமின் ‘சி’ என்னிடம் உள்ளது. கொய்யா, தக்காளி, சிட்ரஸ் பழ வகைகளைவிட என்னிடம் வைட்டமின் சி’ அதிகம்.
ஒரு தேக்கரண்டி நெல்லிப் பொடியில் உள்ள வைட்டமின் ‘சி’… 102 கிலோ ஆப்பிள், அல்லது 59 கிலோ வாழைப்பழம், அல்லது 96 லிட்டர் பாலுக்கு சமம்னு பழங்களைப் பற்றி ஆய்வு செய்த அறிஞர்கள் சொல்றாங்க.
இந்த நாடுதான் என்னோட தாயகம். 7ஆம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லியான என்னைப் பத்தி குறிப்பிட்டிருக்காங்க. நீர், புரோட்டீன், கொழுப்பு, உலோகச்சத்து, சர்க்கரை, மாவுச்சத்து, நார்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் கலோரின்னு உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் எங்கிட்ட நிறைஞ்சு இருக்கு. அதோட வைட்டமின் சி 3000 மில்லிகிராமும், அஸ்கார்பிக் அமிலம் 500 முதல் 700 மில்லிகிராமும் இருக்கு. என்னை சாப்பிடும்போது ஏற்படுற சிறு கசப்பு உடம்புக்கு குளிர்ச்சியைத் தருது.
உடல் பலவீனத்தைப் போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உடம்புல உண்டாக்கி, இளமையை நீட்டிக்கும் ஆற்றல் எங்கிட்டே இருக்கு. என்னை சாப்பிட்டா புத்துணர்ச்சியைக் கொடுப்பேன். முடி உதிர்வதைத் தடுப்பேன். நகம் வளர உதவுவேன். கண்பார்வையைத் தூண்டுவேன். வாய்ப்புண் வராமல் பாதுகாப்பேன். பல், எலும்பு இதெல்லாம் உறுதியாக இருக்கச் செய்வேன். ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யிறதுக்கு நான்தான் நல்ல மருந்து. சிறுநீர் பெருக்கியாவும், மலமிளக்கியாவும் இயற்கையாவே செயல்படுறேன்.
மஞ்சள் காமாலை, இருமல் வராமல் தடுக்கவும் குறிப்பா பெண்களுக்கு ரத்த சோகை வராமல் தடுக்கவும், என்னை சாப்பிட்டாலே போதும்.
சாறா பிழிஞ்சாலும் சரி… பொடியாக்கினாலும் சரி… ஜாம், ஊறுகாய், சட்டினின்னு எப்படியாவது என்னை உணவுல சேத்துக்கிட்டாலே போதும். மனித உடலுக்கு நலமளிக்கிற நான் இயற்கையா கிடைச்ச கலப்படம் செய்ய முடியாத உணவு.”
இப்படி நெல்லியின் சிறப்பைப் பற்றி ஆசிரியர் சொல்லியதையெல்லாம் தன் கையிலிருந்த நெல்லி சொல்லியதாகவே கற்பனை செய்து கொண்டிருந்தாள் மகிழினி.
காலையில் அம்மா சொல்லி ஏற்றுக் கொள்ளாததை ஆசிரியர் பாடம் நடத்தும்போது தன் கையிலிருந்த நெல்லியோடு பொருத்திப் புரிந்து கொண்டாள் மகிழினி. உணவு இடைவேளைக்காக பள்ளி மணி ஒலித்தது.
குழந்தைகள் அனைவரும் சாப்பிடப் போனார்கள். மகிழினி தன் கையிலிருந்த நெல்லிக்காயைச் சாப்பிட்டபடி, ”மன்னன் அதியமான், அவ்வைக்கு நெல்லி தந்தது தமிழ் வளர வேண்டுமானால் தள்ளாத வயதிலிருக்கும் தமிழ் மூதாட்டி அவ்வை நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்.”
தன் அம்மா நெல்லி தந்ததும்… பாக்கெட் உணவுகளைத் தவிர்க்க வேண்டுமென சொல்லித் தந்ததும்… தன் மீதுள்ள நல்ல எண்ணத்திலேயே என்பதை உணர்ந்து கொண்டாள் மகிழினி. பிஞ்சுகளே… நீங்க?
– கதை, ஒவியம்: மு.கலைவாணன்