அந்த ஏழுநாட்களும்! இடுக்கிமலைகளும்!
கோடை விடுமுறையில் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை என்பதால், “எங்காவது சுற்றுலா போகலாம்’’ என்று அம்மாவிடம் கேட்டேன். “எங்கே போகலாம்?’’ என்று அலுவலகத்திற்கு சென்று சிந்தித்த அம்மா, “மூணாறு போகலாம்’’. ஒரு வாரச் சுற்றுலா என்று முடிவு செய்து அப்பாவிடமும் சொல்ல, இருவரும் தங்கள் அலுவலகத்தில் விடுமுறை எடுத்துக் கொண்டார்கள்.
முதல் இரண்டு நாள்கள்: நாங்கள் குடும்பத்துடன் (நான், அப்பா, அம்மா, தங்கை) ஒருவாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்று வரலாம் என்று மே 8ஆம் தேதி ஒரு மகிழுந்தில் புறப்பட்டோம். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் பயணத்தில் இடுக்கிக்குச் சென்றோம். எங்களுடன் எங்கள் மாமா, அத்தை மற்றும் அவர்களின் குட்டிப் பையனும் வந்திருந்தனர். மூணாறு செல்ல நள்ளிரவாகிவிடும் என்பதால் இடுக்கியில் தங்கினோம்.
மூன்றாம் நாள்: இடுக்கியிலேயே படகுப் பயணம் சென்றோம். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் பார்த்ததிலேயே அதுதான் எனக்குப் பிடித்தது. அடுத்தது அங்கிருந்து ஹில்வியூ (Hill view point) சென்றோம். இவ்வளவு குறுகிய இடத்தில் இருந்து பார்க்கும்போது இவ்வளவு விரிந்த காட்சிகளா? என்று வியந்துபோனேன்! அங்கு அணையுடன் மலைப்பகுதிகள் முழுமையும் தெரிந்தது. அங்கு விளையாடுவதற்கு பூங்காவும் இருந்தது. அங்கு சிறிது நேரம் விளையாடினோம். இடுக்கி அணைக்குச் சென்றோம். அங்கு தேனீக்களின் தொல்லைகளால் அதை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.
நான்காம் நாள்: மூணாறு சென்று, அங்கு யானை மீது சவாரி செய்தோம்! அங்குள்ளவர்கள் யானையை அடித்து வேலை வாங்கியது எனக்கு வருத்தமாக இருந்தது.
அய்ந்தாம் நாள்: கடைக்குச் சென்றோம். அங்கு விலை குறைவாக இருந்ததால் நிறையப் பொருள்களை வாங்கினோம். நான் ஒரு தொப்பி மட்டும்தான் வாங்கினேன். பிறகு மலர் கண்காட்சிக்குச் சென்று ரசித்துவிட்டு, இடுக்கியில் ஒரு காட்டுக்குள் பயணம் செய்தோம். அங்கு எட்டு யானைகள் கொண்ட ஒரு குடும்பத்தை மிக அருகில் பார்த்தோம்! எங்களை அழைத்துச் சென்றவர் காட்டில் இருந்த பூக்களை அறிமுகம் செய்துகொண்டே வந்தார்.
ஆறாம் நாள்: பாபு என்பவர் ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். அது ஒரு மலை! அதில் ஒரு மணி நேரமாக ஏறிக்கொண்டே இருந்தோம். மேலே ஏறியதும் அந்த மலை முழுவதும் தெரிந்தது! அது நம்பமுடியாத காட்சியாக இருந்தது. ஆனால் மேகம் அதை மறைத்து இருந்ததால் அதையும் சரியாகப் பார்க்க முடியவில்லை. அன்றே தஞ்சாவூருக்குச் சென்றோம்.
ஏழாம் நாள்: அங்கிருந்து சென்னைக்குத் திரும்பினோம். விடுமுறையில் இயற்கையின் வனப்பைக் கண்டு மகிழ்ந்ததில் “சார்ஜ்’’ ஏறியதுபோல் உள்ளது.