கொடி முல்லையும் கொடை ஒரு வள்ளலே!
ஆசை யோடு தாத்தா பாட்டி
அமைத்த முல்லைத் தோட்டம்!
வாசத் தோடு பூத்து வீட்டின்
வனப்பின் எல்லை கூட்டும்!
வாசல் தேடி யார்வந் தாலும்
வணங்கிக் கொடியும் வாழ்த்தும்!
பாசத் தோடு நீர்தந் தோரைப்
பணிந்து முடியைத் தாழ்த்தும்!
வீசும் காற்றில் தலையை ஆட்டும்
வெள்ளை மலரின் கூட்டம்!
ஊச லாட மகளிர் சூட்டின்
உள்ள மகிழ்வை மீட்டும்!
வாரித் தேனை வழங்கி மாந்தும்
வண்டின் பசியை ஆற்றும்!
பாரில் நாமும் விருந்து ஓம்பும்
பண்டை மரபைச் சாற்றும்!
நாரில் மாலை ஆகிச் சேர்ந்து
நல்ல மணத்தை ஊட்டும்!
பாரி தேரைத் தானம் ஈந்த
பண்பை நினைவில் நாட்டும்!
ஓசோன் படல ஓட்டை அடைக்க
உதவிக் கரத்தை நீட்டும்!
மாசில் லாத சூழல் படைத்து
மகிழும் இலக்கைக் காட்டும்!
தளவை இளங்குமரன்
திருநெல்வெலி