கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்த பெரியார்
தந்தை பெரியாரின் கதை – 6
கோயில் நிர்வாகத்தைச் சீர் செய்த பெரியார்
பெரியாரின் பொது வாழ்வு மிகுந்த சிறப்புடையது; தன்னலமற்றது; நேர்மையுடையது.
பெரியார் ஜாதி வேற்றுமை அறியாதவர். மத வேறுபாடு உணராதவர். கடவுள் வணக்கம் செய்யாத நாத்திகர்.
ஆனால் ஆத்திகர்களுக்கே வழிகாட்டும் விதமாக ஒரு கோயில் நிர்வாகத்தை நடத்திக் காட்டினார் என்று சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா?
ஈரோட்டில் ஒரு கோயிலுக்கு பொறுப்பாளராக வேண்டிய சூழல் பெரியாருக்கு ஏற்பட்டது.
அப்பா வகித்த பதவி பிள்ளைக்கு வந்தது.
சிலர் பயந்தனர், கடவுள் இல்லை, கோயிலுக்குப் போகாதே என்று சொல்லுகிறவர் பெரியார், அவரிடம் கோயிலை நடத்தும் பொறுப்பைக் கொடுப்பது சரியா? கோயில் குட்டிச் சுவராகப் போய்விடும் என்று வாய்க்கு வந்தபடி பேசினர்.
ஆனால், நடந்தது என்ன?
பெரியார் கோயிலைச் சீர்செய்தார். கோயிலில் உள்ள பணம், நகைகள் திருட்டுப் போகாமல் பாதுகாத்தார்.
முதலில் கோயில் கடனில் இருந்தது. பெரியார் தலைவராக வந்தபின், கடனைக் கட்டினார். ரூ.45,000/_ கோயிலுக்கு சேமித்து வைத்தார்.
முதலில் பெரியாரைக் குறை சொன்னவர்கள் பிறகு பாராட்டினர்.
கருத்து வேறுபாடு இருந்தாலும், ஏற்றுக்கொண்ட செயலை பொறுப்பாகச் செய்யும் குணம் பெரியாரிடம் இருந்தது.
நகரசபைத் தலைவரானார்
1917ஆம் ஆண்டு.
ஈரோட்டு மக்கள் பெரியாரை நகரசபைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். சிலருக்கு இது பிடிக்கவில்லை.
ஈரோட்டுக்கு கலெக்டர் வந்தார். அவரிடம் போய், ‘பெரியார் நகரசபைத் தலைவர் பதவிக்கு தகுதி இல்லாதவர். பொறுப்பில்லாமல் திரிகிறவர்’ என்று கண்டபடி புகார் எழுதிக் கொடுத்தனர்.
பெரியாருக்குத் தலைவர் பதவி கிடைக்கவிடாமல் செய்துவிட்டோம் என்று நிம்மதி அடைந்தனர்.
பெரியாரும் கலெக்டரிடம் போனார். உண்மையை எடுத்துக் கூறினார். 29 பதவிகள் வகித்து வருகிறேன். எனக்குத் தகுதிகள் உண்டு என்று குறிப்பிட்டு பதிலுக்கு மனு கொடுத்தார்.
கலெக்டர் பெரியாரின் மனுவை ஏற்றுக் கொண்டார். பெரியார் ஈரோடு நகரசபைத் தலைவரானார். பெரியாரைப்பற்றிப் பொய் சொன்னவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர்.
அந்தச் சமயம் சேலத்தில் இராஜாஜி நகரசபைத் தலைவராக இருந்தார்.
ஈரோடு நகரசபை சிறப்பாகச் செயல்படுவதை அறிந்தார். ஊரைச் சுற்றிப் பார்த்தார். ஈரோடு நல்ல சுத்தமாக இருக்கிறது. உங்களுடைய ஊழியர்களை எங்களுக்குத் தாருங்கள் என்று பெரியாரிடம் கேட்டார்.
பெரியாருக்கு இராஜாஜியை மிகவும் பிடித்துவிட்டது. இருவரும் நண்பர்களாக மாறினார்கள். உயர்ந்த நட்புக்கு உதாரணமாக வாழ்ந்தார்கள்.