கிளியோபாட்ரா
வகுப்பிற்குள் கவிநயா டீச்சர் நுழைந்த அய்ந்தாவது நிமிடத்தில் பரத் எழுந்தான். சுண்டு விரலை மட்டும் காட்டினான். வழக்கமாக ஆசிரியர்கள் சூச்சூ போகவிடமாட்டார்கள் ஆனால், கவிநயா டீச்சர் அப்படி இல்லை, அன்றையப் பாடம் பிடிக்கவில்லை என்றால்கூட சொல்லிவிடலாம். பாடத்தை நிறுத்திவிட்டு வேறு ஏதேனும் செய்வார்கள். பரத் வேகமாக வகுப்பைவிட்டு ஓடினான். பாவம் அவசரம் போல என வகுப்பே சிரித்தது. ச்சு! என்றார் கவிநயா டீச்சர்.
சென்றவன் அய்ந்து நிமிடத்தில் ஓடி வந்தான். அவன் முகத்தில் அத்தனை பிரகாசம். இன்று மதியம் வரையில் கவிநயா டீச்சர் தான் வகுப்பில் இருக்கப் போவதாகச் சொல்லி முடித்து இருந்தார். மற்ற ஆசிரியர்கள் ஏதோ பயிற்சிக்கு சென்று இருக்கின்றார்களாம். வகுப்பு ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இரண்டு சுண்டு விரல்கள் எழுந்தன. இம்முறை பரத்துடன் ரித்தேஷு விரலும். சீக்கிரம் என்றார் ஆசிரியர். இருவரும் ஓடினார்கள். அய்ந்தாவது நிமிடத்தில்
திரும்பினார்கள். இம்முறை ரித்தேஷின் முகம் பிரகாசமாக இருந்தது. என்ன நடக்கின்றது என யாருக்கும் புரியவில்லை. அடுத்த அய்ந்தாவது நிமிடம் மீண்டும் இரண்டு சுண்டு விரல்கள் எழுந்தன. என்னப்பா நடக்குது? என்று கேட்டார் ஆசிரியர். அவரசம் என காட்டிவிட்டு ஓடினார்கள். புதிதாக சென்ற இருவரும் முகப் பொலிவுடன் திரும்பினார்கள்.
வகுப்பில் குசுகுசுவென தகவல் பரவியது. பரத் ஒரு குட்டிக் கிளியை பார்த்திருக்கின்றான். அது அவ்வளவு அழகாக இருந்ததாம். அது நடக்க முடியாமலும் பறக்க முடியாமலும் அதே இடத்தில் நின்று இருக்கின்றது. அது அவனைப் பார்த்து சிரித்ததாம். இப்படியே ஒவ்வொருவராக சென்று பார்த்து வந்திருக்கின்றார்கள். குழந்தைகள் பேச்சு சத்தம் ஆசிரியரை தொந்தரவு செய்தது.
என்னாச்சு, என்ன வகுப்பே பரபரப்பா இருக்கு? எனக்கும் சொல்லுங்க என்றார் ஆசிரியர் கவிநயா.
ஒரு மாணவி எழுந்து, “பரத் ஒரு குட்டிக் கிளியை பார்த்திருக்கான் டீச்சர். அது ரொம்ப அழகா இருக்காம். உடம்பு முழுக்க பச்சையாம், மூக்கு சிவப்பு நிறத்தில இருக்காம்.”
செய்தி அறிந்ததும் உடனே கவிநயா ஆசிரியர் தலைமையில் எல்லோரும் அந்த இடத்தினை நோக்கி சென்றனர். ஓவியாவிற்கு அந்தக் கிளியைப் பார்த்ததும் மகிழ்ச்சி தாங்கவில்லை. “மிஸ், மிஸ் நம்ம வகுப்புக்கு எடுத்துகிட்டு போயிடலாம்” என்றாள். அதன்படியே கிளியை வகுப்பிற்குள் எடுத்து வந்தார்கள். வகுப்பின் மூலையில் இருந்த அட்டைப்பெட்டியில் அதனை வைத்தார்கள். கிளி என்ன சாப்பிடும் என்று தெரியவில்லையே என்றார்கள் குழந்தைகள்.
வகுப்பே அந்த அட்டைப் பெட்டியை சுற்றி நின்றது. வகுப்பு நின்றது ஆனால் கற்றல் தொடர்ந்தது. அவரவருக்கு கிளியைப் பற்றித் தெரிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். கிளி வரும் கதைகளைக் கூறினார்கள். மூக்கு சிவப்பானதற்கு பரத் ஒரு பழங்கதையைக் கூறினான். பச்சையாக இருப்பதற்கு ஓவியா ஒரு கதை கூறினாள். மதிய இடைவேளை வந்தது.
கிளியை நடுவில் வைத்து, சுற்றி மாணவர்களும் ஆசிரியர் கவிநயாவும் அமர்ந்தார்கள். கிளிக்கு வாழைப்பழம் வைத்தார்கள். சாப்பிடவில்லை. திராட்சைப் பழத்தை வைத்தார்கள். ஒரு பழத்தை சாப்பிட்டது. ஹே என எல்லோரும் கைத்தட்டினார்கள். “டேய், கிளிக்கு ஒரு பேரு கூட வைக்கல பார்த்தியா?” என்றதும் ஒரு குரல் “கிளியோபாட்ரா” என்றது. அவள் ஏதோ வரலாற்றுப் புத்தகத்தில் அந்தப் பெயரைப் படித்ததாகக் கூறினாள். ஆமா நல்லா இருக்கு பேரு. “கிளியோபாட்ரா” என்று எல்லோரும் அதன் காதில் கூறினார்கள்.
மதியம் கடைசி வகுப்பிற்கு மீண்டும் கவிநயா டீச்சர் வந்தார். இப்போது விவாதம் கிளியை என்ன செய்யலாம் என்று சென்றது. யார் யார் வீட்டில் எல்லாம் வைத்து வளர்க்க வாய்ப்பு உள்ளது என கை உயர்த்தினார்கள். என்ன வகுப்பில் ஒரே சத்தமாக இருக்கின்றது என பக்கத்து வகுப்பில் இருந்து எல்லாம் எட்டிப்பார்த்தார்கள். விவாதித்து விவாதித்து கடைசியாக பரத் வீட்டிலா ஓவியா வீட்டிலா என்ற நிலைக்கு வந்தார்கள். பரத் வீடு அருகே இருப்பதால் அவன் வீட்டில் வைக்க கடைசியில் எல்லோரும் ஒருமித்த முடிவிற்கு வந்தார்கள்.
பள்ளி நேரம் முடிந்தது. “பத்திரம்” எனச் சொல்லிவிட்டு ஆசிரியர் வீட்டிற்கு கிளம்பினார். ஆனால் மாணவர்கள் நகரவே இல்லை. எல்லோரும் பரத் வீடு வரை செல்வது என முடிவெடுத்தனர். இரவிற்கு கிளியோபாட்ரா என்ன சாப்பிடும் என வீட்டில் கேட்டு சாப்பாடு எடுத்து வருவதாக ஓவியா கூறினார். வகுப்புக் கதவு சாத்தப்பட்டது. மெல்ல பள்ளியை விட்டு வெளியே செல்ல ஆரம்பித்தனர்.
திடீரென மெல்லிய சத்தம். “ம்மா” என்பது போல சத்தம். அந்தக் குட்டிக் கிளி தான். முதல் முறையாக ஒலி எழுப்புகின்றது. சிறிது நேரத்தில் மரத்தின் மேல் இருந்து பறவைகளின் சத்தம். நான்கு கிளிகள் மரத்தின் மேலே இருந்து கத்தின. அம்மா கிளி அங்கே இருந்தது. தன் பிள்ளையை அட்டைப்பெட்டியில் பார்த்ததும் அதற்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பரத் கையில் இருந்து பெட்டியை வாங்கி மரத்தின் கிளை மீது வைத்தாள் ஓவியா.
கிளிகளின் மகிழ்வான இசை அந்த மாலையை அழகாக்கியது.
– விழியன்