குழாயின் குமுறல்
பேசாதன பேசினால் – 12
குழாயின் குமுறல்
– மு.கலைவாணன்
பூஞ்சோலை எனும் சின்ன கிராமம். மாலை நேரத்தில் அந்தக் கிராமத்துத் தெருக் குழாயில் பெண்கள் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த ஊரிலேயே அய்ந்தாறு குழாய்கள்தான் இருந்தன. அதிலும் குறிப்பிட்ட ஒரு சில மணி நேரத்துக்கு மட்டுமே குடி தண்ணீர் வரும். அந்த நேரத்தில் நீரைப் பிடிக்கத் தவறி விட்டால் ஊர் மக்கள் குடிக்கத் தண்ணீரில்லாமல் தவிக்க வேண்டி வரும்.
குடி தண்ணீர் வரும் நேரத்துக்கு குழாயடியில் நீ முந்தி நான் முந்தி என போட்டி போட்டுக் கொண்டு தண்ணீர் பிடிப்பார்கள் ஊர் மக்கள்.
குழாயில் தண்ணீர் பிடித்த பெண்கள் குடங்களை இடுப்பிலும், தலையிலும் சுமந்தபடி வீடு நோக்கி நடந்தனர்.
எங்கேயோ விளையாடி விட்டு வந்த முத்து குடிநீர் குழாயடியில் யாருமில்லாததால் அழுக்கான தன் கால்களைக் குழாயில் கழுவினான். தண்ணீர் பிடிக்க வருகிறவர்கள் யாராவது தன்னைப் பார்த்துவிடப் போகிறார்கள் எனப் பயந்தபடி சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே கால்களைக் கழுவினான்.
தூரத்தில் யாரோ வருவதுபோல் தெரிந்ததும் சட்டென குழாயைச் சரியாக மூடாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லப் புறப்பட்டான் முத்து.
“நில் போகாதே” அப்படின்னு ஒரு மிரட்டல் குரல் கேட்டது.
ஒரு நொடி பயந்தே போனான் முத்து. யார் குரல் கொடுத்தது என சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரையும் காணோம்.
“யாரு? யார் பேசுறது?” என்று கேட்டான் முத்து.
“நான்தான் குழாய் பேசுறேன். என்னை முதல்ல ஒழுங்கா மூடு”… என்றது குரல். குழாயை சரியாக மூடியபடி அதை உற்றுப் பார்த்தான்.
“குடிக்கிற தண்ணி கிடைக்காம ஊரே அலையுது. நீ என்னடான்னா… அழுக்குக் காலை குடி தண்ணியில கழுவுறியே… கொஞ்சம் சிந்திச்சு பாரு.
குடிக்கிற தண்ணி இந்த கிராமத்துக்கு எப்படிக் கிடைக்குது தெரியுமா?”
முத்து யோசித்துக் கொண்டே குழாயைப் பார்த்தான்.
நானே சொல்றேன்! அதோ ஊர் எல்லையில் உயரமா தெரியிற நீர் தேக்கத்தொட்டி. அதுலே பக்கத்து ஊருல இருக்கிற ஆத்துக்குள்ள போர் போட்டு தண்ணியைக் கொண்டு வந்து மோட்டார் மூலமா தொட்டியிலே ஏத்தி இந்த கிராமத்துலே இருக்கிற குழாயிலயெல்லாம் வர்ற மாதிரி ஏற்பாடு செய்திருக்காங்க.
இப்ப தண்ணியே இல்லாத அந்த ஆற்றின் மணலும் சுரண்டப்படுது. அப்படிப்பட்ட நிலையிலே நாமதான் கவனமா தண்ணியைப் பயன்படுத்தி சிக்கனப்படுத்தி சேமிச்சு வச்சுக்கணும்.
“காசு பணத்ததான் சேமிப்பாங்க. குடிக்கிற தண்ணியைக் கூடவா சேமிப்பாங்க” என்றான் முத்து.
“காசு பணம் இல்லேன்னாக்கூட மனுசன் உயிர் வாழ முடியும். காற்றும் நீரும் இல்லேன்னா மனிதனாலே கொஞ்ச நேரம்கூட உயிர் வாழ முடியாது” என்றது குழாய்.
“அதெப்படி?” என வியப்புடன் கேட்டான் முத்து.
ஒவ்வொரு மனிதனும் தன்னையும், தன் வீடு, தோட்டம் இதையெல்லாம் நல்லபடி வச்சுக்கணும்னா கட்டாயம் தண்ணீர் தேவை.
தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடிக்க, பல் தேய்க்க, குளிக்க, துணி துவைக்க, இதுக்கெல்லாம் உவர்ப்பா உப்பா இருக்கிற தண்ணியைக்கூட பயன்படுத்திக்கலாம். இதுக்கு மட்டுமே சுமார் 89 லிட்டர் தண்ணீர் தேவை.
இதெல்லாம் முடிஞ்சா பசிக்குமில்லயா? அதுக்கு சமைக்க, தாகத்துக்கு குடிக்க நல்ல குடிநீர் தேவை. அதோட சமைப்பதற்கான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய, உணவு தயாரிக்க… இப்படி எல்லா தேவைக்கும் தண்ணீர் தேவைப்பட்டுக்கிட்டே இருக்கு.
குழந்தைகளாகிய நீங்க சாப்பிடுற சாக்லெட் 100 கிராம் தயாரிக்க, 2,400 லிட்டர் தண்ணி தேவை. ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய 3000 லிட்டர் தண்ணி தேவை. ஒரு கிலோ சர்க்கரை வேணும்னா 1500 லிட்டர் தண்ணி தேவை. நீங்க குடிக்கிற ஒரு கப் காபிக்கு 140 லிட்டர் தண்ணி தேவை.
இந்த மாதிரி ஒவ்வொரு பொருளின் உற்பத்தியிலும் மறை நீரா மறஞ்சு இருக்கிற தண்ணீரை… மனிதனாலே உற்பத்தி செய்யவே முடியாது. இயற்கையா மழை பெய்தாதான் உண்டு.”
“அதான் சரியாவே மழை வரலியே?” என்றான் முத்து.
“ஆமா! அதுக்காக வரண்ட ஏரியிலே நின்னு வயலின் வாசிச்சாலோ… கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வச்சாலோ… மழை வருமா? வரவே வராது. அது மனிதனோட மூடநம்பிக்கையைத்தான் காட்டுது.
இயற்கையை சிதைச்சு சீரழிச்சதே மனுசன்தானே. மனிதன் தன்னுடைய தேவைக்காக மரங்களை வெட்டி அழிச்சதுனாலேதான் மழை குறைஞ்சு போச்சு.”
“அப்படியே மழை வந்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுற மாதிரியில்லே வருது” என்றான் முத்து.
“அதுக்கும் மரம் குறைஞ்சதுதான் காரணம். நிலத்தடியிலே நீரை சேமிச்சு வச்சுக்கிற ஆற்றல் மரத்துக்குத்தான் உண்டு. அது குறைவா இருக்கிறதாலேதான் இந்த நிலை. ஆறு, குளம், ஏரியெல்லாம் அந்தக் காலத்திலே ஊருக்கே மழை நீர் சேமிப்புத் தொட்டியா இருந்தது.”
இப்ப… ஏரியெல்லாம் ஏரியாவா ஆயிடுச்சு. ஒவ்வொரு வீட்டுலயும் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டுற நிலையாயிடுச்சு! அதனாலேதான் ஒவ்வொருத்தரும் தண்ணீருல கவனம் செலுத்தி, சிக்கனமா பயன்படுத்தி தண்ணிய பாதுகாக்கப் பழகணும்.
நம் உலகமே நீரால சூழப்பட்டுதான் இருக்கு. உலக வரைபடத்தைப் பாத்தா தெரியும். 79 விழுக்காடு கடல் நீராலே சூழ்ந்து இருக்கும். அதை அப்படியே பயன்படுத்த முடியாது. ஒரே உப்பா இருக்கிற அந்தத் தண்ணிதான் சூரிய வெப்பத்தாலே நீராவியாகி மழை மேகமா மாறும். அந்த மழை மேகம் மரங்கள் தரும் குளிர்ச்சியாலே மழையா பெய்யும். இதுதான் இயற்கையின் நடப்பு. நம்ம உடம்புக்கு வெளியில எப்படி தண்ணீர் தேவையோ, அதுமாதிரி உடம்புக்கு உள்ளேயும் தண்ணி ரொம்ப ரொம்ப அவசியம்.
தண்ணி இல்லேன்னா உடம்புல இருக்கிற எந்தச் செல்லும் இயங்கவே முடியாது. உடம்புல உள்ள எல்லா செல்களுக்கும், திசுக்களுக்கும் தண்ணீர் அவசியம். இரத்த உற்பத்திக்கும் செல்களின் வளர்சிதை மாற்றப் பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் சரியான ஊடகம் தண்ணீர்தான்.
இரத்த ஓட்டத்துக்கு, சுவாசத்துக்கு, உணவு செரிமானத்துக்கு உடம்பு வியர்ப்பதுக்கு, சிறுநீர் கழிக்கிறதுக்கு, உடலின் வெப்பத்தை சமப்படுத்துறதுக்கு இப்படி உடம்போட முக்கியமான இயக்கத்துக்கு தண்ணீர் இல்லேன்னா ஒண்ணுமே செய்ய முடியாது.
உடம்பு ஆரோக்கியமா உள்ள ஒருத்தர் ஒரு நாளைக்கு சுமார் 2 முதல் 3 லிட்டர் வரைக்கும் தண்ணீர் குடிக்கணும்.
இரத்த பிளாஸ்மாவில 92 விழுக்காடும், இரத்த சிவப்பணுவில 70 விழுக்காடும் தண்ணி இருக்கு. தண்ணீரின் அளவு உடம்புல சரியா இருந்தாதான் இரத்தம் திரவ நிலையில இருக்கும். அப்பதான் இதயத்துக்கு தேவையான இரத்தம் சரியா கிடைக்கும். இல்லேன்னா மாரடைப்பு வந்துடும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
நம்ம உடம்புக்கு உள்ளேயும், ஊருக்கு உள்ளேயும் தண்ணி சரியா இல்லேன்னா மனித உயிருக்கே ஆபத்து. அப்படிப்பட்ட தண்ணியை இப்படி கவனக் குறைவா பயன்படுத்துனா… எல்லாருக்குமே கேடுதானே” என்றது குழாய்.
முத்து தண்ணீரின் பயனை உணர்ந்தவனாய் ‘ஆமாம்’ என தலையை ஆட்டினான்.
“இதையெல்லாம் உணர்ந்துதான் அன்னைக்கே நம்ம திருவள்ளுவர் ‘நீரின்றி அமையாது உலகு’ன்னு சொன்னாரு. மனித வாழ்வுக்கு நீர் இன்றியமையாததை இதுவரையில உணராம போனதுனாலேதான் இன்னைக்கு இவ்வளவு சிரமம், சிக்கல்” என்று குழாய் குமுறியது.
குழாய் கூறிய செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்த முத்துவுக்கு குழாய் பேசவில்லை. வேறு யாரோ ஒளிந்திருந்து குரல் கொடுக்கிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் எங்கிருந்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த முத்துவுக்கு குழாயடிக்கு அருகிலிருந்த வீட்டின் ஜன்னலுக்குள்ளே கல்லூரியில் படிக்கும் வெண்ணிலா அக்கா ஒளிந்திருந்து பேசுவது தெரிந்துவிட்டது. பதுங்கிப் பதுங்கி வீட்டிற்குள் சென்றான் முத்து. குழாய் பேசுவதுபோல ஜன்னலின் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்த வெண்ணிலா அக்கா முத்து உள்ளே வருவதை கவனிக்கவில்லை.
“பே…” என ஓங்கிக் குரல் கொடுத்தான் முத்து. வெண்ணிலா அக்கா ஒரு நொடி பயந்து போனார். “அக்கா! நீங்கதான் ஒளிஞ்சுக்கிட்டு குழாய் மாதிரி பேசுனீங்களா! நான் குடிக்கிற தண்ணியில கால் கழுவுனது தப்புதான். இனிமே அப்படிச் செய்ய மாட்டேன். நீங்க தண்ணீர் பற்றி சொன்ன நல்ல செய்திகளை என் நண்பர்கள் எல்லாரையும் கூட்டிக்கிட்டு வர்றேன். அவங்களுக்கும் சொல்லுங்கக்கா” என்றான் முத்து.
“நான் படிச்சு தெரிஞ்சுக்கிட்ட இந்தச் செய்தி உன் நண்பர்களுக்கு மட்டுமில்ல. தண்ணியை பயன்படுத்துற ஒவ்வொருத்தரும் தெரிஞ்சுக்க வேண்டிய செய்திதான். உன் நண்பர்களை கூட்டிக்கிட்டு வா சொல்றேன்” என்றார் வெண்ணிலா அக்கா. நீரின் சிறப்பை உணர்ந்தவனாய் புறப்பட்டான் முத்து. பிஞ்சுகளே நீங்க…?