படங்களல்ல… எல்லாம் ஓவியங்கள்!
பின் அட்டையில் நீங்கள் பார்க்கும் அச்சு அசலான ஓவியங்கள் அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த திருமதி விமலா அவர்கள் வரைந்தவையாகும்.
கல்வி கற்பது வாழ்க்கைக்கு மிக மிக அவசியம். வளமான வாழ்வு அமைய மட்டுமன்றி, தன் கால்களில் தாமே நிற்க உதவும் ஊன்று கோலும் ஆகும். அப்படி கல்வி கற்கும் தருணத்தில், நமக்குப் பிற கலைகளில் ஆர்வம் தலையை நீட்டுவது தெரியும். அதை உணர்ந்து அவற்றையும் வளர்க்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க நன்றாய் இருக்கும்.
சுமார் 50 வருடங்களுக்கு முன் பிறந்தவர்களுக்கு, முக்கியமாக பெண்களுக்கு அந்த வசதி கிடையாது, அல்லது பெண்கள் கலைகளைக் கற்றுக் கொண்டால் அவமானமாக பெற்றோர்கள் கருதிய காலமும் உண்டு.
சிலர் அந்த ஆர்வத்தை மனதிலேயே வைத்திருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது அந்தக் கலை உணர்வை வளர்த்து வெற்றி பெறுவார்கள். அப்படி வெற்றி கொடி சூடியவர்தான் எங்கள் நண்பர் திருமதி விமலா.
அவர் எங்களுடைய தமிழ் புத்தகக் குழுவில் மாதந்தோறும் பங்கேற்கும் அங்கத்தினர். அவர் அமெரிக்கன் வங்கியில் மேற்பார்வையாளராய் வேலை செய்து ஓய்வு பெற்றவர். அவருடைய இணையர் திரு. அருணாச்சலம் முனைவர் பட்டம் பெற்றவர், விஞ்ஞானி.
விமலா அவர்கள் பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாம் திருச்சியில் முடித்தார். 1971ஆம் ஆண்டு தன் இணையருடன் அமெரிக்காவில் வாழ்வைத் தொடர்ந்தார்.
வங்கியில் வேலை செய்து கொண்டே, தன் கலை உணர்வை பல ஆண்டுகள் வளர்த்தார். ஓவியக்கலை அவருடைய செல்வம். பல ஓவியப் போட்டிகளில் கலந்து, முதல் பரிசுகளைத் தட்டிக் கொண்டு சென்றார். அவர் பழங்கால இசைக்கலையிலும் வல்லவர்.
அவருடைய ஓவியங்கள் எல்லாம் கண்களைக் கவர்ந்து மனதை இன்பத்தில் திளைக்க வைப்பன. சிறுவர்களான நீங்களும் அந்த ஓவியங்களைக் கண்டு களியுங்கள்.
உங்களுக்குள் உள்ள கலை உணர்வை வளர்க்கத் தவறாதீர்கள். பாடக்கல்வியும் கலைத் திறமையும் உங்கள் வாழ்க்கையை என்றும் செழிப்புடன் வளர்க்க உதவும் கரங்கள் என்பதில் அய்யமே இல்லை. அதற்கு திருமதி விமலா அருணாச்சலம் அவர்கள் ஒரு ஒப்பற்ற சான்று ஆவார்கள். ஆக, நீங்களும் ஓவியராகலாம்.
– சரோஜா இளங்கோவன்