சென்னை அருங்காட்சியகம் (எழும்பூர்)
29.04.2017 அன்று நான் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சி-யகத்திற்கு என் பெற்றோருடன் சென்றிருந்தேன். நுழைவாயில்… அடேங்கப்பா! நாங்கள் நுழைவாயிலின் அருகாமையில் கன்னிமாரா நூலகத்தைப் பார்த்தோம். கன்னிமாரா நூலகம் 1860ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் ஆறு இலட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. 1890 இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தில் நாட்டின் மதிக்கத்தக்க புகழ்பெற்ற பழமையான புத்தகங்கள் பாதுகாக்கப்-படுகின்றன. மேலும் இது அய்க்கிய நாடுகளின் களஞ்சிய நூலகமாகவும் உள்ளது. இந்நூலகத்தை அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களும் எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் மாணவர்களும் பயன்படுத்தியுள்ளனர்; பயன்படுத்துகின்றனர்.
அடுத்து நாங்கள் உள்ளே சென்று பெரிய அளவிலான கலையரங்கத்தைப் பார்த்தோம். வெளித்தோற்றமே வியக்கவைத்தது. நான் உள்ளே உள்ள முதல் கட்டடத்திற்குச் சென்றேன். ஆம் முதல் கட்டிடத்தை சுற்றிப் பார்க்கவே அரை நாள் ஆயிற்று. முதல் கட்டடத்தில் கீழ்த்தளத்தில் சிற்பங்கள், இந்துக் கோவில் சிற்பங்கள், அமராவதி, சமணச் சிற்பங்கள், பொது விலங்கியல், பறக்கும் விலங்குகள், வெளிநாட்டு விலங்குகள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், பொது நிலவியல் போன்றவற்றிற்கான 13 காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்தளத்தில் தபால் தலைகள், முறைமை சார் தாவரவியல், பொருளாதாரத் தாவரவியல், பவளப்பாறைகள், முதுகெலும்பிகள், மீன்கள், பறவைகள், பொருளாதார நிலவியல், கல்வெட்டியல், சிந்து வெளி நாகரிகம், சிற்பம் போன்றவற்றுக்கான காட்சிக் கூடங்கள் உள்ளன.
அடுத்து நாங்கள் இரண்டாவது கட்டடத்திற்குள் சென்றோம். அங்கு முன்பகுதியில் மானிடவியல் பகுதியில் படைக்கலன்கள், வரலாற்று முந்தைய காலம், இனவியல், இசைக் கருவிகள், நாட்டார் கலைகள் ஆகியவற்றுக்கான காட்சிக் கூடங்கள் உள்ளன. வெண்கலக் காட்சிக் கூடக் கட்டடம், தொல்லியல், நாணயவியல், வேதிக் காப்பு ஆகிய பிரிவுகளில் வைணவ, சைவ, பௌத்த, சமண மதங்களைச் சார்ந்த வெண்கலச் சிற்பங்களுக்கான காட்சிக் கூடங்களும் உள்ளன.
அடுத்து நாங்கள் சிறுவர் காட்சிக் கூடத்திற்கு சென்றோம். சிறுவர் அருங்காட்சியகத்தில் நாகரிகம் சிறுவர் பகுதி, அறிவியல், போக்குவரத்து, தொழில்நுட்பம், பல்வேறு வகையான ஆடைகளுடன் கூடிய பொம்மைகள் ஆகியவற்றுக்கான காட்சிக்கூடங்கள் காணப்படுகின்றன.
அடுத்து நாங்கள் தேசிய ஓவியக் காட்சிக் கூட கட்டடத்தில் இந்திய மரபு ஓவியப் பிரிவில் இந்திய சிற்றோவியங்கள், தஞ்சை ஓவியம், பிற இந்திய மரபு ஓவியங்கள் ஆகியவற்றுக்கான காட்சிக் கூடங்கள் உள்ளன.
சமகால ஓவியக் காட்சிக்கூடக் கட்டடத்தில் பிரித்தானிய ஓவியங்களும் தற்கால ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன. அருங்காட்சியகம் முதல் கட்டடத்தில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை ஒரு மணி நேரம் இடைவெளிவிட்டு டயனோசர்ஸ் நிஜமாகவே கத்துவது போலவும், பறவை பறப்பது போலவும் அய்ந்து நிமிடம் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன.
குழந்தைகளும் பெரியவர்களும் இவற்றை ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்ப்பதைக் கவனித்தேன்.
இதில் முக்கியம் பார்க்க வேண்டியவை:
பாரதியார் கவிதைகளின் கையெழுத்துப் பிரதி, பல்வேறு அரசுகளின் செப்புப் பட்டயங்கள், புத்த, சமண காலத்துச் சிற்பங்கள், ரவிவர்மாவின் ஓவியங்கள்
இந்த அருங்காட்சியகம் மூலம் அக்காலத்துத் தமிழரின் கலை, வீரம், வாழ்க்கை முறையை நம்மால் அறிய முடிகிறது. நண்பர்களே, நீங்களும் ஒரு முறை சென்று பாருங்களேன்!
– நா.குறிஞ்சி, 10ஆம் வகுப்பு,
அரசு மகளிர் மேனிலைப் பள்ளி,
பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி மாவட்டம்