சென்னையில் சந்திர கிரகணம் மெட்ராசில் சூரிய கிரகணம்
வானியல் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கனவான நிலவு மறைப்பும் (சந்திர கிரகணம்), கதிரவன் மறைப்பும் (சூரிய கிரகணம்) கடந்த மாதம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகத் தெரிந்தது.
ஆகஸ்ட் 7–ஆம் தேதி இரவு 10:53க்குத் தொடங்கிய பகுதியளவு நிலவு மறைப்பு, ஆகஸ்ட் 8ஆம் தேதி நள்ளிரவு 12.:49 வரை நீடித்தது. அதாவது கிட்டத்தட்ட 1 மணிநேரம் 55 நிமிடங்கள். இது சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெறுங் கண்ணால் பார்க்கக் கூடியதாயிருந்தது. சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் இதைப் பார்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொலைநோக்கி மூலம் குழந்தைகள், பொதுமக்கள் இதனைக் கண்டு ரசித்தனர்.
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முழுமையான கதிரவன் மறைப்பு நிகழ்வு நடந்தது. மெட்ராசில் இதனை மிகத் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால், உலக ஊடகங்கள் பலவும், பொதுமக்களும் மெட்ராசில் குவிந்தனர். இந்திய நேரப்படி இது இரவு 9:15க்குத் தொடங்கி 5 மணிநேரம் வரை நீடித்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் 5 நிமிடம் முழுமையாக கதிரவன் மறைப்பு நிகழ்ந்தது. எனினும் இரவு நேரமாதலால் இது இந்தியாவில் தெரியவில்லை.
“என்னப்பா குழப்புறீங்க? மெட்ராசில் தெரிந்ததுன்றீங்க… இரவு நேரத்தில் சூரியன் எப்படி தெரியும்? அதுவும் இந்தியாவில தெரியலைன்னு வேற சொல்றீங்க.. அப்பறம் மெட்ராசில் எப்படி?” என்று நீங்கள் குழம்புவது புரிகிறது.
மெட்ராசில் தெரிந்ததும் உண்மைதான். இந்தியாவில் தெரியவில்லை என்பதும் உண்மை தான். ஏனெனில் நாம் குறிப்பிட்ட மெட்ராஸ் இங்கல்ல… அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் இரவு என்றால் அமெரிக்காவில் பகல்தானே! சூரியன் தெரியும்போது தானே அங்கே மறைக்க முடியும்.
சரி, சுருக்கமா சூரிய கிரகணம் அல்லது கதிரவன் மறைப்புன்னா என்ன?
நிலவு பூமியைச் சுற்றுகிறது. நிலவும், பூமியும் சேர்ந்து கதிரவனைச் சுற்றுகின்றன. நாம் பூமியில் இருக்கிறோம்.
இப்படி சுற்றும்போது கதிரவன், புவி, நிலவு மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தால், மூன்று பொருள்களில் ஏதோ ஒன்று மறையும் தானே? ஆம்.
கதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு வந்து கதிரவனை பூமியிலிருந்து பார்க்கும் நம் கண்களிலிருந்து மறைத்தால் அது கதிரவன் மறைப்பு (Solar Eclipse)..
கதிரவனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது, கதிரவனிடமிருந்து வரும் ஒளியால் ஏற்படும் பூமியின் நிழல் நிலவை மறைத்தால் அது நிலவு மறைப்பு (Lunar Eclipse). மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதுங்கள். பெரியார் பிஞ்சில் விரிவாக எழுதுவோம்.