பெரியோராய் வாழ்!
போலி யான தற்புகழ்ச்சி
பொய்யாய்த் திரியும் அகங்காரம்
கேலி செய்யும் புறங்கூற்று
கீழ்மைப் பண்பின் அடையாளம்!
கண்கள் காணும் பொய்யையும்
காதும் மூக்கும் அணிவித்து
உண்மை தன்னைப் புறந்தள்ளி
உரைக்கும் வதந்தி கீழ்ப்பண்பே!
உருவு கண்டு எள்ளுதலும்
ஒருவ ரையும் மதியாது
கருவம் கொண்டு திரிவதுவும்
கயமைப் பண்பின் அடையாளம்!
கற்ற றிந்தப் பெரியோரைக்
கண்டும் மதியா திருப்பதுவும்
நற்ற மிழ்தன் அறிஞரையே
நக்கல் செய்து நடப்பதுவும்
உற்ற தெல்லாம் அறிந்தாற்போல்
உலகில் உலவித் திரிவதுவும்
பெற்றோர் தம்மை எடுத்தெறிந்து
பேசும் செயலும் கீழ்ப்பண்பே.
குறளின் வழியில் நடப்பதுவும்
குழந்தை தனையும் மதிப்பதுவும்
பிறர்தம் மதிப்பில் வாழ்வதுவும்
பெரியோ ராக்கும் மேற்பண்பே!
கேபி.பத்மநாபன்
கோவை