பிஞ்சு நெஞ்சில் பதிக்கப்படும் பிழையான கருத்துகள்!
பிஞ்சுப் பருவம் கருத்துகள், காட்சிகள் ஆழமாய்ப் பதியும் பருவம். ஆதலால்தான் “இளமையில் கல்’’ என்றனர். பச்சிளம் பருவத்தில் பசுமரத்தாணிபோல் பலவும் பதியும் என்பதும் உண்மைதான்.
அதேபோல், பிஞ்சுப் பருவம் எதையும் சட்டென்று ஏற்கும் பருவமும் ஆகும். இயல்பாகவே பிஞ்சுகள் அதிகம் வினாக்கள் எழுப்புவர். எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்தான் அதற்குக் காரணம். அது என்ன? இது என்ன? என்று அறிய விரும்பும் ஆவல் அதிகம் இருப்பினும், அதன் விளைவாய் அதிகம் பிஞ்சுகள் புதிது புதிதாய் பலவற்றைப் பற்றி அறிந்து கொண்டாலும், பெற்றோரும் மற்றோரும் கூறுபவற்றை, செய்பவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளும் நிலையில்தான் பிஞ்சுகள் இருக்கின்றார்கள்.
பிஞ்சுகளின் இந்த இயல்பை, நிலையைப் பயன்படுத்திப் பலரும், தங்கள் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, விருப்பங்களை அவர்கள் மீது திணித்து விடுகின்றனர்.
குடும்பம்: பிஞ்சுகள் எதை ஏற்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும், எதை மறுக்க வேண்டும், எவற்றை நம்ப வேண்டும் என்பதை குடும்பத்தில் உள்ள பெரியவர்களே தீர்மானித்து விடுகிறார்கள்.
மதம், கடவுள்: ஒரு பிள்ளை எந்த மதத்தைப் பின்பற்ற வேண்டும், எக்கடவுளை வணங்க வேண்டும் என்பதை பெற்றோர்களே தீர்மானித்து, பிள்ளைகளிடம் திணித்துவிடுகிறார்கள்.
உணவு, உடை: என்ன உணவு உண்ண வேண்டும், சைவமா? அசைவமா? எப்படி உடை உடுத்த வேண்டும் என்பவை பெற்றோராலும், குடும்ப வழக்கத்தாலும் தீர்மானிக்கப்படுகின்றன.
எந்த அடையாளமும் இன்றி பிறக்கும் பிள்ளைகள், இந்து அடையாளங்கள், கிறித்துவ அடையாளங்கள், இஸ்லாமிய அடையாளங்கள், சீக்கிய அடையாளங்கள் என்று வேறு வேறு அடையாளங்களை. பிறந்த குடும்பத்தின் நம்பிக்கைக்கு ஏற்ப பெறுகின்றன.
பெற்றோர் கடவுளை நம்பினால் பிள்ளைகளும் கடவுளை நம்ப வேண்டும் என்று கட்டாய மாக்கப்படுகிறது.
பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்பவேதான் பிள்ளையின் பெயர் அமைகிறது. அந்தப் பிள்ளைக்கென்று எந்த விருப்பமும் அங்கு கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அதுவும் பெற்றோர் சார்ந்த மத நம்பிக்கைக்கேற்ப பிள்ளையின் மீது பெயர் திணிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள்: பெற்றோருக்கு (குடும்பத்திற்கு) அடுத்தபடியாக பிள்ளைகளின் மீது தங்கள் கருத்துகளைத் திணிப்பவை கல்வி நிறுவனங்கள் ஆகும்.
ஒரு கல்வி நிறுவனத்தின் நம்பிக்கைகள், நோக்கங்கள், கருத்துகள் அங்கு பயிலும் மாணவர்கள் மீதும் திணிக்கப்படுகின்றன.
சுயநலக்காரர்கள்: சமுதாயத்தில் காணப்படும் சுயநலக் கும்பல்கள் முதலில் இலக்கு வைப்பது பிஞ்சுகளைத்தான். அதிலும் குறிப்பாக மதவாத ஆதிக்க சக்திகள், பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை மெல்ல மெல்ல ஏற்றிவிடுகின்றனர்.
ஜாதி: எந்தப் பிள்ளையும் ஜாதி உணர்வு இயற்கையாய்ப் பெற்று வளர்வதில்லை. குடும்பமும், சமதாயமுமே பிள்ளைகளிடம் அந்த உணர்வைத் திணித்து வளர்க்கின்றன. நீ உயர்ந்த ஜாதிப் பிள்ளை, அவன் தாழ்ந்த ஜாதிப் பிள்ளையென்று, வெள்ளையான பிஞ்சு உள்ளத்தில் ஜாதி உணர்வை ஊட்டுகின்றனர்.
மூடநம்பிக்கைகள்: பேய், ஆவி, மந்திரம், சோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை பிஞ்சுகள் மனதில் பெரியவர்களே திணித்து அவர்களின், தன்னம்பிக்கை, துணிவு, பகுத்தறிவு இவற்றைப் பாழ்படுத்திவிடுகின்றனர். இது பெரியவர்கள் செய்யும் குற்றச் செயல்கள் ஆகும்.
பிஞ்சுகள் என்ன செய்ய வேண்டும்?
பிஞ்சுகள் இளம் வயதில் எந்தவொன்றையும் அறிந்துகொள்ள அது என்ன? இது என்ன? என்று கேள்விகள் கேட்பதுபோல, இது ஏன்? இது எதற்காக? இதை ஏன் செய்ய வேண்டும்? இதை ஏன் நம்ப வேண்டும்? இது எப்படிச் சரியாகும்? இது தப்புதானே? என்று துணிவுடன், அஞ்சாது யாரிடமும் கேட்க வேண்டும்.
அவர்கள் சரியான காரணத்தைக் கூறினால், அது அறிவுக்கும், நலத்திற்கும் உகந்தது என்றால் ஏற்க வேண்டும். இல்லையென்றால் அதை ஏற்கக் கூடாது.
கையிலே கயிறு கட்டினால் ஏன் இந்தக் கயிறு? இதனால் என்ன பயன்? இதில் அழுக்கு சேர்ந்தால் தோல் நோய்தானே வரும்? இந்தக் கயிற்றிற்கு ஏது சக்தி? என்று அடுக்கடுக்காய் கேட்க வேண்டும்.
கல்லை ஏன் வணங்க வேண்டும்? அதன் மீது ஏன் பாலையும், பழத்தையும் கொட்டிப் பாழாக்க வேண்டும்? அதை பசிக்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதுதானே சரி? பாழாக்குவது குற்றம் அல்லவா?
கடவுள் இருந்தால், உலகில் ஏன் இவ்வளவு கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் நடக்கின்றன?
நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள்! கெட்டவர்கள் சுகமாய் வாழ்கிறார்கள்! கடவுள் இருந்தால் இப்படி நடக்குமா?
இல்லாத கடவுளுக்கு ஏன் இவ்வளவு பெரிய கோயில்? இல்லாத கடவுளை நான் ஏன் வணங்க வேண்டும்?
எல்லோரும் ஒரே விதமாகத்தானே பிறக்கிறோம். அப்படியிருக்க ஒரு பிள்ளை உயர் ஜாதி, இன்னொரு பிள்ளை தாழ்ந்த ஜாதியாக எப்படி ஆகும்? உயர் ஜாதி, தாழ் ஜாதிக்கு என்ன அடையாளம் அவர்கள் உடலில் உள்ளது?
முதல் நாள் கடவுள் பொம்மையைப் பூஜை செய்து வணங்குகிறார்கள். மறுநாள் அவர்களே அப்பொம்மையைத் தடியால் அடித்து நொறுக்கி கடலில் தள்ளுகிறார்கள்! இதுதான் பக்தியா? இது எப்படி வழிபாடாகும்?
ஒரு மதத்துக்காரன் இன்னொரு மதக் கோயிலை இடிக்கிறான். அவன் எப்படி கடவுள் நம்பிக்கை உடையவன் ஆவான்?
கடவுள் ஒன்றா? பலவா? அது ஆணா? பெண்ணா? கண்ணுக்குத் தெரியுமா? தெரியாது என்றால் அந்தக் கடவுளை எப்படி தெரிந்து கொண்டார்கள்?
கடவுள் சிலையையே திருடிச் செல்கிறார்கள். தன்னையே காத்துக்கொள்ள முடியாத கடவுள் நம்மை எப்படிக் காக்கும்?
இப்படி எந்தவொன்றையும் பகுத்தறிவைப் பயன்படுத்தி கேள்வி கேட்டு, சரியென்றால், உண்மையென்றால் ஏற்க வேண்டும்; அறிவுக்கு ஏற்பில்லையென்றால் அதை ஏற்கக் கூடாது.
உண்ணும் உணவும், உடுத்தும் உடையும், பின்பற்றும் கொள்கையும் நம் விருப்பம், நலன், வளர்ச்சி இவற்றிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறாக, எதை எவர் உங்கள் மீது வலிய திணித்தால் அதை ஏற்காதீர்கள்!
இப்படி பிஞ்சுகள் விழிப்போடு இருந்தால், யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது! அறிவோடு சிந்தித்து வாழும் பிஞ்சுகள் தெளிவான, வளமான, நலமான வாழ்வைப் பெறுவர்!
தந்தை பெரியாரின் சிந்தனைகளை பிஞ்சுப் பருவம் முதலே தேடிப் படித்தால், அறிவுக்கு ஒவ்வாத எதுவும், நீதிக்கு எதிரான எதுவும் உங்களைப் பற்றாது! பிஞ்சுகளுக்குப் பெரியார் ஒரு கலங்கரை விளக்கம்! பெரியாரைப் பின்பற்றும் பிஞ்சுகள் சரியான வாழ்வை வாழ்வர்!
– சிகரம்