குழந்தைகளுக்கல்ல.. குட்டிக் குரங்குகளுக்கு!
மக்காட் பள்ளி
– சரா
பள்ளிகளில் குறும்பு செய்வோரை ‘குரங்குச் சேட்டை செய்யாதே!’ என்ற சொல்வதுண்டு.
பனிக் குரங்குகளான மக்காட் இனக் குரங்குகளில் தாயை விட்டுப் பிரிந்த குரங்குகள் பனிப்பிரதேசத்தில் வாழும் முறையைக் கற்றுக்கொடுக்க ஆள் இல்லாமல் மரணமடைந்து விடுகின்றன. இதனால் வடசீனம் மற்றும் ஜப்பானில் வாழும் ‘மக்காட்’ இன பனிக் குரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கு என்ன தீர்வு? மிகவும் சாந்த குணமும் எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மையுமுடைய, குரங்குகளுக்கு ‘குளிர்காலத்தில் வாழ்வது எப்படி?’ என்று பயிற்சி அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இதைக் குரங்குகள் வாழும் பனிப்பிரதேசத்தில் பயிற்சி கொடுப்பது எளிதானது அல்ல. ஆகவே, சீன அரசாங்கம் இக்குரங்குகளைக் காப்பாற்ற புதிய வழிமுறையைக் கையாண்டுள்ளது. அதாவது, குரங்குகளுக்கு என்று பள்ளி ஒன்றைத் திறந்துள்ளது. யூனேன் பகுதியில் உள்ள வனவிலங்குக் காப்பத்தில் அமைக்கப்பட்ட இப்பள்ளியில் ‘மக்காட்’ பனிக் குரங்குகளின் குட்டிகளுக்கு பனியில் எப்படி வாழ்வது? உடலை எப்படிச் சூடாக வைத்துக் கொள்வது? எவ்வகை உணவுகளைச் சாப்பிடுவது? ஓய்வின் பொழுது உடல் சூடு தணிந்து போகாமல் இருக்க அனைத்துக் குரங்குகளும் எப்படி ஒன்றாக ஒட்டிக்கொண்டு குளிரில் இருந்து காத்துக்கொள்வது? போன்ற பலவகைப் பயிற்சிகளை இந்தக் குரங்குப் பள்ளியில் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
தாய் மற்றும் குரங்குக் கூட்டங்களால் விரட்டப்பட்ட குட்டிகள் அனைத்தும் இந்தப் பள்ளியில் சமத்தாகப் படிக்கின்றன. இந்தக் குட்டிகளுக்குச் சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் இலவசம். அமைதியான முறையில் பள்ளியில் ஆசிரியர் சொல்வதைக் கேட்கும் குழந்தைகள் (குரங்குக் குட்டிகள்).