உங்கள் நண்பர்களுக்கு இதை Forward செய்ய வேண்டாம்
வணக்கம் நண்பர்களே, பள்ளி முடிஞ்சி வந்ததுமே செல்போன் லேப்டாப் எடுத்து வச்சிகிட்டு படம் பாக்குறது அப்புறம் கேம் விளையாடுறதுனு எப்பவுமே பரபரப்பா இருக்கிறவங்களா நீங்க!
“ஆமாம்… ஆமாம்… செல்போன், லேப்டாப் எல்லாம் எங்களுக்கு தண்ணிபட்ட பாடு. சும்மா புகுந்து விளையாடுவோம்ல’’
அப்படினு நீங்க சொல்லுறது என் காதுல கேக்குது. உங்கள மாதிரித்தான் நானும். நம்ம அப்பா அம்மா நம்ம வயசுல இதையெல்லாம் பாத்திருக்கக்கூட மாட்டாங்க, ஏன் இப்பக்கூட அவங்களுக்கு இவற்றைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனா, நாம ரொம்பத் திறமையா இதையெல்லாம் கையாளுறோம். நெனச்சா பெருமையாத்தான் இருக்கு. ஆனா, இதுல நிறைய தீமைகளும் இருக்குனு தெரியுமா உங்களுக்கு?
இதுல என்ன தீமை இருக்கப் போவுதுனு யோசிக்கிறீங்களா?
இரண்டு வயதுக்குள் குழந்தைகளின் மூளை மூன்று மடங்கு அளவில் வளர்கிறதாம்.
இந்தப் பருவத்தில் அவர்களிடம் செல்பேசி, மடிக்கணினி போன்றவைகளில் காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கச் செய்வதால் சுற்றுச்சூழல் குறித்த அறிவு அற்றுப்போதல், காது கேட்கும் குறைபாடுகள், கற்றல் குறைபாடுகள், பார்வைக் கோளாறுகள், அடம்பிடிக்கும் போக்கு ஆகியவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிட்டா தன்னளவில் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்-வதையும், சமூகப் பழக்க வழக்கங்களி-லிருந்தும் முழுமையாக அவர்களை அந்நியமாக்கும் அபாயமும் உள்ளதென்று குழந்தை மருத்துவத்-திற்கான அமெரிக்க அகாடமி (American Academy of Pediatrics) சொல்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த “நோய் வரும்முன் தடுக்கும் மையம்’’ 2010ஆம் ஆண்டு நடத்தியுள்ள ஆய்வில் செல்பேசி, மடிக்கணினிகளை படுக்கை அறையில் பயன்படுத்தும் குழந்தைகள் சாதாரணக் குழந்தைகளைவிட அதிக உடல் எடையுடன் இருப்பதாகவும், உடற்பருமன் (Obesity) சார்ந்த குறைபாடுகளால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிச்சிருக்கு.
அதே ஆண்டு கனடாவிலுள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இவற்றை அதிகம் பயன்படுத்தும் ஆறில் ஒரு குழந்தைக்கு இருதுருவ மனநிலை (Bipolar disorder), மனநோய் (Psychosis) போன்ற ஏதோ ஒரு நோயின் அறிகுறிகள் தென்படுவதாகத் தெரிவித்துள்ளது.
2013 டிசம்பரில் டொரோண்டோ பல்கலைக் கழகத்தில் டாக்டர் ஆண்டனி மில்லர் நடத்திய ஆய்வில் கைபேசி, மடிக்கணினி பயன்படுத்துவதால் புற்றுநோயை விளைவிக்கவல்ல 2ஏ, 2பி போன்ற கதிர்வீச்சுகளால் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, மூன்று வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு இவற்றைப் போன்றவைகளை கொடுக்கக் கூடாது என்று அம் மையம் ஆலோசனை வழங்கி இருக்கிறது.
என்ன பிஞ்சுகளே! செல்பேசி, கணினி போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று தெரிந்துகொண்டீர்களா? செல்பேசி என்பதில் அய்பேட், குளிகை (Tab), காணொளி விளையாட்டு (Video Games) ஆகியவையும் அடங்கும்.
மூன்று வயது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.
எதையும் தேவைக்கு அதிகமாக பயன்-படுத்துவதை குறைத்துவிட்டு உடலும் மனமும் ஆரோக்கியமாய் வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாய் வாழலாம்.
இதை உங்கள் நண்பர்களுக்கு forward செய்ய வேண்டாம். எடுத்துச் சொல்லுங்கள்!