குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல்
– உமாநாத் செல்வன்
நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்குச் சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் – பத்து நாள் வரையிலான விடுமுறையைக் குடும்பத்துடன் எப்படிக் கொண்டாடலாம்? பெற்றோர்க்கும் பிஞ்சுகளுக்கும் ஒரு பட்டியல்!
1. ஒரு வண்டி எடுத்துக்கொண்டு குழந்தையுடன் சென்று கடைகளில் கிடைக்கும் பழைய சிறுவர் இதழ்கள் எவை? எங்கெங்கு கிடைக்கின்றன? என விசாரித்து, வாங்கிவரவும்.
2. குழந்தைப் பாடல்களை (தமிழ்) குழந்தைகளுடன் மெட்டமைத்து பாடி விளையாடலாம்
3. வீட்டைச் சுற்றி நடந்து சென்று பத்து வகையான இலைகளைப் பறித்து வந்து, அந்த இலைகளைக் கொண்டு அழகிய பொருள் ஏதேனும் செய்ய முயற்சிக்கலாம். ஒவ்வொரு இலை எந்த மரத்தில்/ செடியில் இருந்து வந்தது எனக் கண்டுபிடிக்கலாம்.
4. வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் நாள்களில் விரைவில் உறங்கச் சென்றுவிடுவோம். விடுமுறை நாளில் ஒன்பது மணிக்கு மொட்டைமாடிக்குச் சென்று படுத்துக்கொண்டு எல்லோரும் வானைப் பார்க்க வேண்டும். நட்சத்திரங்களையும், நிலாவையும் பார்த்து ஒரு மணி நேரம் பேச வேண்டும். பேச்சு வானைப் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் (பின்குறிப்பு: இதனை மழை நாளில் முயற்சிக்க வேண்டாம், கம்பெனி பொறுப்பு ஏற்காது)
5. நகரில்/ஊரில் இருக்கும் அவர்களுடைய நண்பர்கள் வீட்டிற்கோ/ நம்முடைய நண்பர்கள் வீட்டிற்கோ சென்று காலை முதல் மாலை வரையில் அங்கே கழிக்க விடலாம். மறுநாள் அவர்களை நம் வீட்டிற்கு வரவழைக்கலாம்.
6. அருகே எங்கே நூலகம் இருக்கு என்பதைத் தேடி, தினம் சில நிமிடங்கள் அவர்களை அங்கே செலவழிக்க வைக்கலாம். தங்கள் நண்பர்களுடன் சென்றால் இன்னும் சில நிமிடங்கள் அதிகமாகவும் உற்சாகமாகவும் செலவழிப்பார்கள்.
7. அருகே இருக்கும் நர்சரி சென்று அங்கே இருக்கும் பூக்களையும் செடிகளையும் நோட்டம்விடலாம். வீட்டில் எதனை வளர்க்க முடியுமோ அதனை வளர்க்க இந்த விடுமுறையில் துவங்கலாம்
8. சிறுவர்களுக்கான நல்ல உலக சினிமாக்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து / குறுவட்டு வாங்கி குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாகப் பார்க்கலாம்.
9. வீட்டில் இருக்கும் புத்தகங்களைப் பட்டியலிடச் செய்யலாம். (புத்தகங்களைத் தொடுவார்கள், தலைப்புகளைப் பார்ப்பார்கள். புத்தகம் இல்லாதவர்கள் புத்தகம் வாங்க வேண்டும் என உணர்வீர்களாக)
10. ஒன்றாகச் சமைக்கலாம்
11. வீட்டின் அருகே இருக்கும் காய்கடைக்கு அனுப்பி, பட்டியலில் இருக்கும் காய்களையோ அவர்களுக்குப் பிடித்தமான காய்களையோ வாங்கிவரச் சொல்லலாம்,
12. அருகே இருக்கும் காய்கறிச் சந்தை / சந்தைக்கு சென்று அங்கே என்னென்ன விற்கின்றார்கள் என்பதை மட்டும் பார்த்துவிட்டு வரலாம்.
மிகப்பெரிய பிரச்சனை இக்காலக் குழந்தைகள் உடனே போர் அடிக்கின்றது எனச் சொல்லத் துவங்கி விடுகின்றார்கள். அதற்கு முக்கிய காரணம் குடும்பம் தான். காரணங்கள் பல. முடிந்த அளவிற்கு தொலைக்காட்சி முன்பும், கணினி, மொபைலுடனும் நேரம் செலவழிப்பதைக் குறைக்கலாம். கொஞ்சம் திட்டமிடலுடன், நாம் நேரமும் செலவிட்டால் இந்தக் குறுகிய விடுமுறையைக் காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல நினைவுகளாக மாற்றலாம்.
கொண்டாடுங்கள்!