மாவீரன் வெள்ளைச்சாமி
தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களில் ஒன்று திருவாரூர். அழகான, பசுமையான இயற்கைச் சூழலைக் கொண்ட திருக்குவளை ஊரைச் சேர்ந்தவன் வெள்ளைச்சாமி. ஏழாம் வகுப்பு படிக்கும் இவன் கோடை விடுமுறையை கொண்டாட சென்னை அண்ணா நகரில் உள்ள அத்தை, மாமா, வீட்டிற்குச் செல்ல மிகுந்த ஆவலோடும், மகிழ்ச்சியோடும் காத்திருந்தான்.
தனது நண்பர்களான இளவரசன், இளையராணி, செல்வம் இவர்களிடம் சென்று, “டேய் நான் நாளைக்கு சென்னைக்கு போறேன்டா. அங்க பெரிய, பெரிய கட்டிடங்கள், பெரிய பீச், கப்பல், நிறைய சினிமா தியேட்டர். இதெல்லாம் இருக்கும்டா. அது மட்டும் இல்லை. இளையராணி, பெரியார் தாத்தா, அண்ணா இவர்களுடைய நினைவிடங்கள் இருக்கும். நான் அதெல்லாம் சுத்திப் பார்க்கப் போறேன். நிறைய கடைகள் இருக்கும். உங்களுக்கும் சில பொருட்கள் வாங்கி வறேன். சரி, சரி எனக்கு நேரம் ஆகுது. போய் வரேன்.”
பல கனவுகளோடும், மகிழ்ச்சியோடும் கூட்டிச் செல்ல வந்த தாத்தாவுடன் புறப்பட்டான் ஊருக்கு. காலை அத்தை வீட்டுக்குப் போனவுடன் அத்தையும், மாமாவும் மகிழ்ச்சியோடு வெள்ளைச்சாமியை கட்டி அனைத்து வரவேற்றார்கள். “குளிச்சிட்டு வந்து சாப்பிடு. சாயங்காலம் உன்னை பீச்சுக்கு கூட்டிட்டு போறோம்” என்றவுடன் துள்ளிக்குதித்து குளியலறைக்குச் சென்று குளித்து முடித்து காலை உணவை உண்டான். வழியெல்லாம் எவ்வளவு பெரிய வீடுகள், கட்டிடங்கள் என்று வெள்ளைச்சாமிக்கு மிகுந்த ஆச்சர்யம். “மாலை பீச்சுக்கு போகலாம். சாப்பிட்டு முடித்தவுடன் இங்கே (திறீணீts) அடுக்குமாடியில் உள்ள பிள்ளைகளுடன் விளையாடு” என்று சொல்லிவிட்டு மாமா அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார்.
சாப்பிட்டு முடித்தவுடன், வெள்ளைச்சாமி வெளியே கூடி விளையாடும் பிள்ளைகளிடம் சென்றான். புதிதாக வந்த அவனை அங்கிருக்கும் பிள்ளைகளும் முழுமையாக விசாரித்தனர். வர்ஷினி, ஹரினி, கிருஷ்ணன் என்னும் கிருஷ், ராஜேஷ், யுகேஷ். “ஏன்டா நீயோ கறுப்பு. உன் பெயரோ வெள்ளைச்சாமி, நீதான் சாமி கும்மிட மாட்டேன்னு சொல்றியே. பிறகு ஏன்டா ‘சாமி’னு பெயர் வைச்சிருக்க?” என்று கிருஷ் கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டனர். வெள்ளைச்சாமி உடனே சொன்னான். “பெரியார் தாத்தா சாமி இல்லைனு சொன்னார். அவர் பெயர் ஏன் ராமசாமினு இருக்குதுனு கேட்டாங்களாம். நான் ராமனுக்கே சாமி ராமசாமினுன்னு சொன்னாராம். அதுபோல வெள்ளையா இருக்கிறவங்-களுக்கு எல்லாம் நான் ‘சாமி’டா.”
“இங்க பார்றா, இவன் நமக்கெல்லாம் சாமியாம். கருப்பசாமின்னு பேர் வைச்சிருக்கலாம்” என்று கிண்டல் பண்ணி சிரித்தனர். வீட்டுக்குள் வாட்டத்துடன் வந்த வெள்ளைச்சாமி, “அத்தை நான் ஊருக்கு போறேன்” என்றான். அத்தை ஆச்சர்யமாக பார்த்தார்!
“என்னாச்சு உனக்கு? சாயங்காலம் பீச்சுக்கு கூட்டிட்டு போறோம்னு சொன்னேன்ல. அதுக்குள்ள ஏன் ஊருக்கு போறேன்னு சொல்ற?” “இல்லை அத்தை நான் போறேன். எனக்கு இங்கு இருக்கப் புடிக்கலை” என்று அழத் தொடங்கினான்.
அவனைச் சமாளிக்க முடியாமல் போன அத்தை, உடனே தன் அப்பாவிற்கு போன் செய்து வரச் சொன்னார். தாத்தாவும், அவனும் உடனடியாக ஊருக்குச் சென்றனர்.
ஊருக்கு வந்த தன் மகனையும், மாமனாரையும் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தார் அவனது அம்மா. அவரது மாமனார், “இந்தா ஆத்தா உன் பிள்ளையை நீயே வச்சி பார்த்துக்கோ” என்று கோபமாகச் சொல்லிவிட்டு மீண்டும் ஊருக்குப் போய்விட்டார்.
“என்னடா செல்லம், ஆசையா அத்தை வீட்டுக்குப் போனாய், பீச் எல்லாம் பார்க்கப் போறேன்னு. என்னாச்சு உனக்கு உடனே வந்துட்ட?”
“எனக்கு ஏம்மா வெள்ளைச்சாமினு பெயர் வெச்ச?”
“ஏன் உன் பெயருக்கு என்ன வந்தது?”
“கறுப்பா இருக்கிற உனக்கு யார்டா வெள்ளைச்சாமினு பெயர் வச்சாங்கனு எல்லோரும் கிண்டலும், கேலியுமா சிரிக்கிறாங்க” என்று அழுதவாறே சொன்னான்.
“யார் உன்னை கிண்டல் செய்தது, உன் பெயருக்கு பின்னாலே ஒரு சரித்திரமே இருக்கு. அது தெரியுமா?”
வெள்ளைச்சாமி அழுகையை நிறுத்திவிட்டு, “என்னம்மா அது?” என்று கேட்டான். அவன் அம்மா சொல்லத் தொடங்கினாள்.
“உனக்கு ஏன் பெரியார் தாத்தாவை பிடிக்கும்?”
“பெரியார் தாத்தா ரொம்ப நல்லவங்க, இவங்கள மாதிரி இல்லை. மற்றவர்களை கேவலப்படுத்தி சிரிக்க மாட்டார்.”
“கீழ்ஜாதி, மேல்ஜாதி, பணக்காரன், ஏழை இப்படி எல்லாம் இல்லாமல் அனைவரும் சமம்” என்று சொன்னார்.
“அதேதான் என் தங்கமே! பெரியார் தாத்தா ரெண்டு விஷயங்களை கடுமையாக எதிர்த்தார். ஒன்று ஜாதி, மற்றொன்று பெண் அடிமைத்தனம். ஜாதிக்கு யாரெல்லாம் ஆதரவாக இருந்தார்களோ, அவர்களை எல்லாம் எதிர்த்தார். கடைசியாக ஜாதியைப் பாதுகாக்கும் ‘இந்திய அரசமைப்பு சட்டத்தை’யும் எதிர்த்தார். பெரியார் தாத்தாவின் உற்ற தோழராக, நண்பராக இருந்த ‘அம்பேத்கர் தாத்தா’ எழுதிய சட்டத்தையே கொளுத்தச் சொன்னார்.”
“ஏம்மா! பெரியார் தாத்தா தன் நண்பர் எழுதிய சட்டத்தைக் கொளுத்தச் சொன்னார்? சட்டம்னா என்னம்மா?”
“இப்ப, நீங்கள் பள்ளிக்கூடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று சில விதிகள் உள்ளன. ஒரே மாதிரியான உடை, நேரத்தை கடைப்பிடிப்பது, ஆசிரியர்கள் பேச்சைக் கேட்டு நடப்பது, அதுபோல ஒவ்வொரு நாட்டிற்கும், அரசமைப்புச் சட்டம் உண்டு. மக்கள், அரசு, அதிகாரம் எப்படியிருக்கணும்னு அதில் சொல்லப்பட்டிருக்கும். அம்பேத்கர் தாத்தா தலைமையிலான குழு எழுதிய சட்டத்தில அவராலேயே தவிர்க்க முடியாமல் 18 இடங்களில் ஜாதி உள்ளது. அதனால் பெரியார் தாத்தா அதைக் கொளுத்தச் சொன்னார். பல தோழர்கள் சட்டத்தைக் கொளுத்திக் கைதானார்கள். அப்படிக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட; ஜாதி ஒழிய தன்னையே தந்த ஜாதி ஒழிப்பு மாவீரன்தான் “மணல்மேடு வெள்ளைச்சாமி’. அவர் சிறையிலேயே இறந்தார். அந்த மாவீரனை நன்றியோட, போற்றத்தான் உனக்கு ‘வெள்ளைச்சாமி’ என்று பெயர் வைத்தோம்! கறுப்பு என்பது நிறம் அல்ல; நம் இனம். கறுப்பு என்பது இழிவல்ல; புரட்சி! கறுப்பர்கள் என்றால் உழைப்பவர்கள். எனவே, கறுப்பாக இருக்கிறோம் என்று கண்கலங்காதே என் கண்ணே!”
“அம்மா என் பெயருக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா? எனக்கு இப்படி ஒரு பெயர் வைத்ததை எண்ணும்போது மகிழ்ச்சியாயிருக்கு’’ என்று கூறிவிட்டு, “வெள்ளைச்சாமி என்ற கறுப்பன்… ஹா.. ஹா..” எனக் கர்வத்துடன் சிரித்தான்.
– பா.மணியம்மை