உயிர்க்கொல்லி பிளாஸ்டிக்!
உள்ளத்தை உலுக்கும் இந்த நிழற்படத்தைப் பார்ப்பது சற்று கடினமான ஒன்றுதான். “பெற்றோர் உடன் இல்லாமல் இத்தகைய படங்களைப் பிஞ்சுகள் பார்க்க வேண்டாம்” என்று அறிவுறுத்தலோடுதான் இப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் இதைவிடச் சகிக்கமுடியாத உண்மைக் காட்சிகளை எடுத்து வெளியிட்டிருக்கிறார் சியாட்டிலைச் சேர்ந்த கிரிஸ் ஜோர்டான் என்ற ஒளிப்படக் கலைஞர். இறந்துபோன இந்த லேசன் அல்பெஸ்ட்ரோஸ் சிக் (Laysan Albatross Chick) வகையைச் சேர்ந்த இப்பறவையின் உடல் மெல்ல மெல்ல மட்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அது இறந்து போவதற்குக் காரணமான பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் மட்கவில்லை. சொல்ல முடியாது, இவை அடுத்த மழையில் அடித்துச் செல்லப்பட்டு ஓர் ஆற்றிலோ, ஏரியிலோ கலந்து மீண்டும் ஒரு பறவையாலோ, விலங்காலோ உட்கொள்ளப்பட்டு அவ்வுயிரின் இறப்புக்குக் கூட காரணமாகலாம்.
என்ன, இந்தப் பறவை இறக்க இந்தப் பிளாஸ்டிக்குகள் காரணமா? ஆம். உண்மைதான். இந்தப் பிளாஸ்டிக் பொருட்கள் அப்பறவையின் வயிற்றிலிருந்தவைதான்.
அது எப்படி பறவையின் வயிற்றுக்குள் போனது? இந்தப் பிளாஸ்டிக்குகளை உட்கொண்டதால்தான்! அவை பறவையின் குடலுக்குள் சென்று செரிக்காமல் உயிரைப் பறித்திருக்கின்றன.
பறவை ஏன் இவற்றை உட்கொண்டது? அது வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரியிலோ, ஆற்றிலோ, கடலிலோ மிதந்து கொண்டிருந்திருக்கும் இந்தப் பிளாஸ்டிக் பொருட்களை உணவு என்று கருதியோ, மீன் என்று கருதியோ அதை விழுங்கி இருக்கிறது அப்பறவை.
பிளாஸ்டிக் பொருளைச் சாப்பிட முடியுமா? செரிக்குமா? குடலுக்குள் புகுந்தது உடலுக்கு ஒவ்வாதது; அதனால் உயிருக்கு ஆபத்தானது.
‘அய்யோ, பாவம் அந்தப் பறவை’ என்று தோன்றுகிறதா, அந்தப் பறவை மட்டுமல்ல. இதைப் போல பல கோடிக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கிறது பிளாஸ்டிக். பிளாஸ்டிக் எப்படி உயிரை வாங்கும்? நாம்தான் இந்த உயிர்களைக் கொலை செய்து கொண்டிருக்கிறோம்.
ஆம் பிஞ்சுகளே, நாம் நாள்தோறும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்தான்; பயன்படுத்திய பின் அலட்சியமாகத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பேப்பர்கள்தான்; மறுசுழற்சி செய்யாமல் சாலை ஓரத்தில், பூங்காக்களில், நீர்நிலைகளில் தள்ளிவிடும் பாட்டில், மூடி, விளையாட்டுப் பொம்மை, ஸ்ட்ரா, குட்டி டப்பாக்கள்… இதர, இதர பிளாஸ்டிக் பொருட்கள்தான் இந்த உயிர்களைப் பறித்தன. இன்னும் பல்லாயிரம் உயிர்களைப் பறிக்கப் போகின்றன. எளிதில் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை எல்லாவற்றிற்கும் பயன்படுத்திவிட்டு, உரிய மறுசுழற்சி கூட செய்யாமல் நாம் தூக்கி எறிந்து-விடுகிறோம். இவையெல்லாம் நாடுகளில், காடுகளில், நீர் நிலைகளில், பெருங்கடல்-களில் தேங்கித் தேங்கி நிற்கின்றன.
நாம் பயன்படுத்தும் ஸ்டிரா எனப்படும் உறிஞ்சு குழல் கடல்வாழ் ஆமையின் மூச்சுக்குழலுக்குள் சென்று செருகி, அதை மூச்சுவிட முடியாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. ஆமைகளின் மூக்கிலிருந்து உறிஞ்சுகுழலை அகற்றும் காணொளி காணச் சகியாதது. (யூ டியூபில் கிடைக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு பெரும் அழுத்தத்தைத் தரும் என்பதால் நாம் வெளியிடவில்லை.)
நாம் என்ன செய்யப் போகிறோம்?
– பிஞ்சண்ணா