தந்தை பெரியாரின் கதை -8
பெரியாரின் போராட்டம்
– சுகுமாரன்
பெரிய தென்னந்தோப்பு. 500 தென்னை மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அந்த மரங்களில் இருந்து கள் இறக்கப்பட்டு வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது. நல்ல வருமானம் கிடைத்து வந்தது.
அந்தத் தென்னந்தோப்பு பெரியாருக்குச் சொந்தமானது. ஒருநாள் பெரியார் அங்கு வந்தார். வேலையாட்களைக் கூப்பிட்டார். தென்னை மரங்களை வெட்டித் தள்ளும்படி உத்தரவு போட்டார்.
வேலையாட்கள் திகைத்தனர்.
‘என்ன விழிக்கிறீங்க, தென்னை மரங்கள் இருந்தால் தானே கள் இறக்கிக் குடிப்பீங்க, கள் ஒழிப்புப் போராட்டம் நடக்குது. ஈரோட்டில் நடக்கும் போராட்டத்துக்கு நான்தான் தலைமை தாங்குகிறேன். அதற்கு முன்பாகத் தென்னை மரங்களை வெட்டிச் சாயுங்கள்’, என்றார் பெரியார்.
தென்னை மரங்கள் சாய்க்கப்-பட்டன.
பெரியார் தலைமையில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது. பெரியார் சிறைத் தண்டனை பெற்றார்.
பெரியாரின் மனைவி நாகம்மை-யாரும், தங்கை கண்ணம்மை-யாரும் மறியலில் கலந்துகொண்டு சிறை சென்றனர். பெரியாரின் குடும்பத்தை காந்தியடிகள் பாராட்டினார். இவ்வாறு போராட்டத்தில் குடும்பத்தைப் பங்குகொள்ள வைத்த பெருமை பெரியாரைச் சேரும்.
================
பெரியாரின் தொண்டு
கதர் ஆடைகளை விற்று ஏழைத் தொழிலாளிகளுக்கு உதவ வேண்டுமென்று பெரியார் நினைத்தார்.
கதராடைகளை மூட்டையாகச் சுமந்துகொண்டு ஊர் ஊராகப் போய் விற்று வருவார். மக்களிடம் கதரின் பெருமையைப் பற்றிப் பேசுவார். அவரின் பேச்சைக் கேட்டால் யாரும் மனம் மாறி கதராடையை வாங்கி உடுத்தத் தொடங்கி விடுவார்கள்.
ஒரு நாள்,
பெரியார் கதராடைகளை விற்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டில் நாகம்மையார் இருந்தார். பட்டுச்சேலை உடுத்தி இருந்தார். அது பெரியார் கண்ணில் பட்டது.
பெரியார் நாகம்மையிடம், ‘பட்டுச்சேலை உடுத்தாதே, இனி கதர்ச் சேலையை உடுத்திக்கொள்’ என்று சொன்னார்.
“கதர்ச்சேலை கனமாக இருக்கிறது. என்னால் உடுத்த முடியவில்லை’’ என்றார் நாகம்மையார்.
‘நான் ஊருக்கெல்லாம் கதராடையை உடுத்துங்கள் என்று விற்று வருகிறேன், என் மனைவி நீ பட்டுச்சேலை உடுத்தலாமா?’ என்று பெரியார் நயமாகக் கேட்டார்.
‘கதர் துணி முரடானது கனமாக இருக்கிறது’ என்று மீண்டும் நாகம்மை சொன்னார். பெரியார் பார்த்தார். இனி வாயால் சொல்லி நாகம்மையை திருத்த முடியாது என்று நினைத்தார்.
நாகம்மையிடம் ஒரு தராசைக் கொண்டுவரச் சொன்னார். ‘உன் பட்டுச் சேலையைக் கொடு’ என்று நாகம்மையிடம் கேட்டு வாங்கினார். பட்டுச் சேலையை தராசின் ஒரு தட்டிலும், கதர்ச்சேலையை மறுதட்டிலும் வைத்து எடை போட்டார். பட்டுச் சேலை கனமா? கதர்ச்சேலை கனமா? என்று நாகம்மையைப் பார்த்து கேட்டார்.
நாகம்மை பதிலேதும் சொல்லவில்லை. அன்று முதல் கதராடை உடுத்தத் தொடங்கினார். பெரியாரின் 80 வயது அம்மாவும் கதராடை உடுத்தினார்.